Monday, September 28, 2009

எங்க ஊருக்கு தொலைக்காட்சி வந்த கதை

எண்பதுகளின் மத்தியில் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், எங்கள் ஊர் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நிறைய இடங்களில் தங்கி ஆயுதப் பயிற்சி எடுத்து வந்தனர். அப்போது அவர்கள் தங்களது அன்றாடச் செலவுகளுக்காக VCR மூலமாக அருகில் இருக்கும் கிராமங்களில் புதுப்புது படங்களை ஓட்டுவ‌து வ‌ழ‌க்க‌ம். டிக்கெட் ஒரு ரூபாய். முதன் முதலில் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கும் பாக்கியம் எங்கள் ஊருக்கு அவர்களின் மூலமாகவேக் கிடைத்தது.

அப்போது எங்கள் ஊரில் மூன்று வீடுகள் மட்டும்தான் மாடி வீடுகள். அதிலொன்று ப‌ள்ளியின் அருகிலேயே இருக்கும்.அவ்வீட்டின் மாடிப் படிகளில் ஏறமுடியாதவாறு முட்களைக்கொண்டு அடைத்து வைத்திருப்பார்கள். திருட்டுத்தனமாக அவ்வீட்டின் மாடிப்படியின் பக்கவாட்டு சுவரில் சறுக்கி விளையாடுவது எங்கள் சிறுபிராயத்தின் சாகச விளையாட்டுகளில் ஒன்று. அந்த வீட்டில் பாட்டி ஒருவர் இருக்கிறார் , அவர் கண்ணில் பட்டுவிட்டால் அவ்வளவுதான் மனித குலம் தோன்றிய காலத்தைய முன்னோரில் ஆரம்பித்து எங்களுக்கு பிந்தைய தலைமுறைக்கெல்லாம் சேர்த்து சாபம் விடுவார். இன்னொரு மாடி வீடு எனது நண்பனின் வீடு என்பதால் அங்கே அடிக்கடி மாடியில் ஏறிப்பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த மூன்றாவது வீட்டு மாடியின் அமைப்பு எப்படி இருக்குமென்றே தெரியாத அளவிற்கு எப்போதும் பூட்டியே வைத்திருப்பார்கள். அந்த வீட்டு மாடியில்தான் முதல் வீடியோ அரங்கேற்றம் நிகழ்ந்தது.

படம் பார்ப்பதைக் காட்டிலும் அவ்வீட்டின் மாடியை பார்க்கப் போகிறோம் என்கிற ரெட்டைச் சந்தோஷமெனக்கு. ”பூக்களைப் பறிக்காதீர்கள்”, ”வளையல் சத்தம்” மற்றும் ”முத்துக்கள் மூன்று” ஆகிய மூன்று படங்களை அப்போது ஓட்டினார்கள். கொடுத்த ஒரு ரூபாய்க்கு ஆசைத்தீர அந்த மாடிப்படிகளில் ஏறி இறங்கினேன். மற்றபடி படத்தின் தலைப்பைத் தாண்டி கதை பற்றியெல்லாம் நினைவில் வைத்துக் கொள்ளும் வயதில்லை.ஏதோ படம் தெரிந்தது அவ்வளவுதான்.

என் கூட்டாளிப் பசங்களின் சொந்தக்காரர்கள் பெரும்பாலும் பக்கத்து ஊர்களிலேயே இருப்பார்கள். ஆனால் எனது பாட்டி வீடு கொஞ்சம் தூரத்தில் உள்ள ஒரு சிறு நகரமென்பதால் அடிக்கடி பஸ் ஏறி பார்ப்பவன் என்கிற ரேஞ்சில் நிறைய பெருமைகள் எனக்கிருந்ததால் நான் சொல்வதே அவர்களுக்கு வேதவாக்கு. எங்க பாட்டியின் ஊர்ல ரோட்டுல கப்பல் போகும்டான்னு சொன்னாக் கூட நம்பும் வெள்ளந்தி பயமக்க. பாட்டியின் வீட்டிற்குச் செல்லும்போது சில வீடுகளில் ஆண்ட்டெனாவைப் பார்த்திருப்பதால் தொலைக்காட்சிப் பெட்டியில் படம் தெரிய ஆண்ட்டெனா அவசியமென சொல்லியிருந்தேன். ஆனால் அன்று ஆண்டெனா இல்லாமல் படம் ஓடியதைக் கண்டு எப்படி இது சாத்தியமென்று எனக்கோ ஒரே குழப்பம். மற்ற பசங்களின் முன் முதன் முறையாக என் ரீல் அந்து போனது அப்போதுதான். அதன் பின் நான் என்ன சொன்னாலும் கையால் ரீல் சுற்றுவதைப் போல் சைகை செய்து கமுக்கமாய் சிரித்து வெறுப்பேற்றுவானுங்க.

விடுதலைப் புலிகள் போட்டு வைத்த பிள்ளையார் சுழியைத் தொடர்ந்து எங்கள் ஊர் இளைஞர் மன்றத்தினர் விடுமுறை நாட்களில் தஞ்சையிலிருந்து வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து வந்து பள்ளிக்கூடத்தில் வைத்து வருடத்திற்கு இரண்டு மூன்று முறை படம் ஓட்ட ஆரம்பித்தார்கள். நாயகன், கரகாட்டக்காரன் போன்ற படங்களை ஓட்டியபோது தியேட்டரைப் போன்றே பெரும்கூட்டம் திரண்டது.

சில பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு இலவச அனுமதி வேண்டியும், சிலர் அவர்கள் வீட்டிலிருந்து ஒரு பள்ளிக்கூடத்தையே அழைத்து வந்து ஐம்பது காசைக்கொடுத்து பேரம் பேசுவதெல்லாம் வேறு நடக்கும். அப்படி டிக்கெட் எடுக்க காசில்லாமல் வெளியில் நிற்பவர்கள் பள்ளிக்கூடத்தைச் சுற்றிச் சுற்றி வந்து ஜன்னல் வழியாக உள்ளே பார்க்க என்னன்னவோ வித்தைகளெல்லாம் செய்வார்கள். ஆனாலும் ஒவ்வொரு ஜன்னலிலும் ஒருத்தர் தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல் கதவுகளை உள்பக்கமா இழுத்து பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். முதல் படம் ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் ஏகப்பட்ட கெடுபிடிகளாக இருக்கும். பிறகு ஒன்னுக்கடிக்க வெளியில் வருபர்களோடு சேர்ந்து டிக்கெட் எடுக்காதவர்களும் நைசாய் வந்து அமர்ந்து விடுவார்கள். ஓரளவு முதலுக்கு மோசமில்லாத வசூல் வந்ததும் வெளியில் நிற்பவர்களை மன்றத்து அண்ணன்களே இலவசமாக அனுமதித்துவிடுவார்கள். காசு கொடுத்து வந்தவனெல்லாம் முதல் படம் முடிந்ததும் தூங்கிவிடுவான், பிளாக்கில் வந்தவர்கள் விடியவிடிய படம் பார்த்துவிட்டு விடிந்ததும் டிக்கெட் எடுத்த பார்ட்டிகளுக்கு கதை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

சில தடவை எங்க அப்பா படம் பார்க்க அனுமதி கொடுக்காமல் கிராமர் எடுக்க ஆரம்பித்து விடுவார். அன்றைக்கு காலையில் இருந்தே சும்மாதான் திரிந்து கொண்டிருந்திருப்பேன் ஆனால் படம் போடும் நேரத்தில்தான் பாடம் நடத்த ஆரம்பிப்பார். பள்ளிக்கூடமும் எங்க வீடும் அடுத்தடுத்து இருப்பதால் அங்கே படம் ஓடிக்கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இவரோ இங்கே ”ராமு இஸ் ஸ்மாலர் தேன் ராஜா” இதை பாஸிடிவ் டிகிரியா மாத்து என்பார். துக்கம் தொண்டையை அடைக்கும், கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கும். பிறகு கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ”போய்த்தொல” என்று காசு கொடுத்து விரட்டிவிடுவார். சில தடவை அழிச்சாட்டியமாய் அனுப்பவே மாட்டார். அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் பொறந்தாலும் வாத்தியார் பிள்ளையா மட்டும் பொறக்கக் கூடாதென்று.

1990 ல் எங்கள் ஊருக்கு பஞ்சாயத்துத் தொலைக்காட்சியின் வருகை நிகழ்ந்தது . டீ.வி வந்த அன்று ஊரே பள்ளிக்கூடத்தின் முன்பு திரண்டு விழாக்கோலம் பூண்டு வரவேற்றது அந்த பிளாக் அண்ட் ஒயிட் சாலிடர் டீ.வியை. ஆண்டெனாவை ஃபிட் செய்து இப்படியும் அப்படியுமாய் திருப்பி சிக்னலைப் பிடித்து ஒரு வழியாய் ஏதோ ஹிந்தி நிகழ்ச்சி ஓட ஆரம்பித்தது. கலைக்கு மொழியில்லை என்பதை முழுதாய் உணர்ந்த நாள் அது. ஊர் மொத்தமும் அசையாமல் பார்த்து ரசித்தது அன்றைய ஹிந்தி நிகழ்ச்சிகள் முழுவதையும்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை படத்திற்கும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கும் தவமாய் தவமிருந்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் பசுமையான காட்சிகளாக நினைவில் விரிகிறது. ஞாயிற்றுக் கிழமை ஐந்து மணிக்கு ஒளிபரப்பாகும் படத்திற்கு மூன்று மணிக்கே பள்ளியை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அன்றைய எல்லா வேலைகளும் படம் பார்ப்பதை மனதிற்கொண்டே பக்கா பிளானிங்கா முன்கூட்டியே நடக்கும். இது சிறுவர்கள்,பெண்கள் தொடங்கி ஊரின் அத்தனை பேருக்கும் பொருந்தும். அப்படி இருக்கும் சமயத்தில் பவர் கட் ஆகிவிட்டால் துக்க வீடு கணக்கா யாரோடும் பேசும் மனநிலையற்று பித்து பிடித்ததைப் போன்று அமர்ந்திருப்பார்கள். பவர் வருவதற்கு முன்பாகவே எவனாவது “ஹைய்யா கரண்ட் வந்திடுச்சு ” என்று கத்தி கொலைவெறியை கிளப்புவானுங்க. அப்படிக் காத்துக் கிடந்து பார்ப்பது அரதப் பழசான ஒரு பூலோக ரம்பையோ, மாகாக்கவி காளிதாசோவோதான் இருக்கும். எப்போதாவது ”மூன்றாம் பிறை”, ”வேலைக்காரன்” போன்ற ரிலிஸாகி ஐந்தாறு வருடங்களேயான புதுப்படங்களை ஆச்சர்யமாய் ஒளிபரப்புவார்கள்.

தூர்தர்ஷனைத் தவிர வேறு சானல்களும் இல்லாததால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் இடையே ஒளிபரப்பாகும் விளம்பரங்களைக் கூட ஆர்டராக மனப்பாடம் செய்து ஒப்பித்த காலமது. ரொம்ப பிரசித்திப் பெற்ற விளம்பரம் ”என்ன ஆச்சு குழந்த அழுது” என்று ஆரம்பிக்கும் கிரேப் வாட்டருக்கான விளம்பரம்தான்.
இது போன்ற விளம்பரங்களைப் பார்க்கையில் மண்வாசனையோடு பசங்க உதிர்க்கும் கமெண்ட்ஸ், தடங்கலுக்கு வருந்தும்போது வரும் கூஊ...ஊ சவுண்டுக்கு கோரஸ் பாடுவது என ரகளையான நாட்கள் அவை.

பஞ்சாயத்து டீ.விதானே என்று ஆளாளுக்கு உரிமை கொண்டாடியதில் சீக்கிரமாகவே பல்லிளித்தது அந்த சாலிடர். ஸ்கிரினில் ”ஷ்ஷ்ஷ்” என்ற சத்தத்தோடு தெரியும் மங்களான காட்சிகளைக் கூட விடாமல் பார்க்க ஆரம்பித்து வீடியோ இல்லாமல் வெறும் ஆடியோவை மட்டுமே கேட்கும் ரேடியோவாகவும் பரிணாமத் தேய்வு அடைந்து பல பரிமாணங்களில் வேலை செய்தது அந்த சாலிடர். பிறகு ஒரு நாள் யார் ஆப்பரேட் செய்வது என்ற சண்டையில் ஒன்றுக்கும் உதவாத ஜடமானது. சண்டையின் உச்சத்தில் அதுவரை அமைதியாக இருந்த ஒரு அண்ணன் ”எனக்கும் இந்த டீவியில் ஒரு நெட்டாவது பங்குண்டு” என்று சொல்லியபடியே பூஸ்டரை தூக்கி உடைத்துவிட்டு எழுந்து சென்றார். ஒரு வழியாய் பஞ்சாயத்து டீ.விக்கு ஆப்பு வைத்துவிட்டார்கள். அந்த சமயம்தான் ராஜிவ்காந்தி அஸாசினேஷன் நடந்தது. எங்க ஊரில் டீ.வி ஓடாததால் ராஜிவ் காந்தி அவர்களின் இறுதி ஊர்வலக் காட்சிகளைப் பார்ப்பதற்காக பக்கத்து ஊருக்கு குறுக்குப் பாதையில் காட்டாற்றில் இறங்கி கொளுத்தும் வெயிலில் கருவேலங்காட்டினுள் புகுந்து சென்று பார்த்ததெல்லாம் மறக்கமுடியாத நினைவுகள்.

இரண்டு வருடங்களாக தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்து பழகிவிட்ட எங்க அப்பா எங்கள் வீட்டிற்கு ஒனிடா 21 இன்ச் கலர் டீவியை 92ம் வருடம் திபாவளி அன்று வாங்கிவந்து எங்களை ஆச்சர்யப்படுத்தினார். அதுதான் எங்கள் பகுதிக்கே முதல் வண்ணத்தொலைக்காட்சி. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் வீட்டின் வாசலில் டீ.வியை எடுத்து வைத்து விடுவோம் ஊரே அன்று எங்கள் வீட்டின் வாசலில் இருக்கும். நான்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பக்கத்து ஊர் இளைஞர்கள் சிலர் சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு வேல்ட்கப் ஃபுட்பால், கிரிக்கெட் பார்க்க வந்த கதையெல்லாம் உண்டு. படம் பார்க்க வரும் மக்கள் எங்கள் வீட்டு வாசலையே டாய்லெட்டாக்கி அசிங்கம் செய்து வைத்ததால் என்னென்னவோ ரூல்ஸ் போட்டும் யாரும் மதிக்காததால் சில மாதங்களுக்குப் பிறகு டீ.வியை வெளியில் எடுத்து வைப்பதை நிறுத்த வேண்டியதாகிவிட்டது.

இலங்கை சேனல்களான ரூபவாஹிணியும், ஐ.டி.என்னும் அவ்வப்போது கிராஸ் ஆகும். அதில் ஐ.டி.என்னில் புத்தம் புது தமிழ் படங்கள் ஒளிபரப்புவார்கள். பாதி படம் வரை நன்றாகத் தெரியும் திடீரென சிக்னல் கட்டாகிவிடும் அந்த சமயத்தில் ஆண்டெனாவை திருப்பித் திருப்பியே நாளெல்லாம் மண்வெட்டி பிடித்து வெட்டுபவனைப் போல கடுமையாய் கை காய்த்துப் போய்விடும்.

இப்போது வீடு தவறாமல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியும், கேபிள் இணைப்பும் இருக்கிறது ஆனாலும் அளவோடு இருந்ததால் அமுதாய் தெரிந்த அந்த ஒலியும் ஒளியும் காத்திருப்பின் சுகமே தனிதான்.

28 comments:

ஸ்ரீமதி said...

//எங்க பாட்டியின் ஊர்ல ரோட்டுல கப்பல் போகும்டான்னு சொன்னாக் கூட நம்பும் வெள்ளந்தி பயமக்க. //

:))))))) நிறைய இடங்கள் இப்படி நகைப்போடும் சிற்சில ஞாபகங்களோடும் போனது... ரொம்ப நல்லா பதிஞ்சிருக்கீங்க அண்ணா.. :)))

கதிர் - ஈரோடு said...

அருமையான கொசுவத்தி..

திருவிழாக்களில் விசிஆர் கொண்டு வந்து படம் போடும், விசிஆர் கனெக்ட் ஆகி படம் ஓடும் வரை சில நிமிடங்கள் ஓடும் புள்ளிகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தெல்லாம் நினைவிற்கு வருகிறது...

பித்தன் said...

மிகவும் நல்ல பதிவு, நல்ல நினைவுகள், எனக்கும் இப்படி டீ வி வந்த கதை ஒன்னை நினைவுவூட்டினிர்கள், நாளை அந்த பதிவு போடுறன்.

// நான் சொல்வதே அவர்களுக்கு வேதவாக்கு. எங்க பாட்டியின் ஊர்ல ரோட்டுல கப்பல் போகும்டான்னு சொன்னாக் கூட நம்பும் வெள்ளந்தி பயமக்க. //
அப்ப இருந்தே இப்படி கதைவுடுற வேலைதானா? நல்ல அனுவசாலியா?
// அப்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன் பொறந்தாலும் வாத்தியார் பிள்ளையா மட்டும் பொறக்கக் கூடாதென்று. //
அப்ப வாத்தியார் பிள்ளை மக்குனு உங்களை பார்த்துதான் சொன்னாங்களா.
நல்ல நடை, நன்றாக எழுதுகிறீர்கள் எங்களுக்கும் கொஞ்சம் சொல்லித்தாங்க ஜயா.
நல்ல முறையில் கோர்வையாக சொல்லியிருக்கீறிர்கள்.

சூரியன் said...

சிறந்த சுருள்வத்தி...

//ஒருத்தன் “ஹைய்யா கரண்ட் வந்திடுச்சு ” என்று கத்தி கொலைவெறியை வேறு உண்டுபண்ணுவானுங்க//


//விளம்பரங்களைக் கூட ஆர்டராக மனப்பாடம் செய்து ஒப்பித்த காலமது//

இதோடு கதிறு அறுக்குற காலத்தில் அங்கு உள்ள வைக்கேல் படப்புகளில் பறந்து உருண்டு விளையாடிய ஞாபாகமும்.. நன்றி தல

Cable Sankar said...

டிவி திகட்டி விட்டதென்னவோ உண்மைதான் நாடோடி இலக்கியன்

நாஞ்சில் நாதம் said...

நல்லதொரு பகிர்வு. மாடிப்படி ஏறிய அனுபவம், தூர்தர்சன் ஒலியும் ஒளியும் வெள்ளி கிழமை படம் பார்த்தெல்லாம் நினைவிற்கு வருகிறது

// ராஜிவ்காந்தி அஸாசினேஷன் நடந்தது. //

நான் டீவில பாத்த முதல் நிகழ்ச்சி(என்னுடைய ஞாபகத்தில்):(

தண்டோரா ...... said...

ஒரு வீட்டில் 29” டிவி இருந்தது.அது குட்டி போட்டது போல் தமிழக அரசின் இலவச டிவியும் பக்கத்தில்..(உண்மை)

இரும்புத்திரை அரவிந்த் said...

தொலைகாட்சி பதிவு கருப்பு வெள்ளையா ஆரம்பித்து கலரில் முடிந்தது

தமிழ்ப்பறவை said...

nallaa irunthathu pathivu...
nice nostalgia.. rasithaen,,,
:-)

பட்டிக்காட்டான்.. said...

//.. ஞாயிற்றுக்கிழமை படத்திற்கும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கும்..//

ம்ம்.. பசுமையான நினைவுகளை கிளறி விட்டுட்டிங்க..

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி.

நன்றி கதிர்.

நன்றி பித்தன்,( :) ).

நன்றி சூரியன்,(ஆமா தம்பி வைக்கோல் போர் ஞாபகத்தை கிளரியதற்கு நன்றி).

நன்றி கேபிள் சங்கர்.

நன்றி நாஞ்சில் நாதம்.

நன்றி தண்டோரா,(நிறைய வீடுகளில் நானும் பார்த்திருக்கிறேன்).

நன்றி அரவிந்த்.

நன்றி தமிழ்ப்பறவை.

நன்றி பட்டிக்காட்டான்.

மங்களூர் சிவா said...

/
கலைக்கு மொழியில்லை என்பதை முழுதாய் உணர்ந்த நாள் அது. ஊர் மொத்தமும் அசையாமல் பார்த்து ரசித்தது அன்றைய ஹிந்தி நிகழ்ச்சிகள் முழுவதையும்.
/

சூப்பர்ங்ணா!

க.பாலாஜி said...

//னாலும் ஒவ்வொரு ஜன்னலிலும் ஒருத்தர் தாழ்ப்பாள் இல்லாத ஜன்னல் கதவுகளை உள்பக்கமா இழுத்து பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்.//

உங்க ஊர்லையும் இதமாதிரி நடந்துதா?
என்ன கொடுமை இது...சேம் பிளட்...

பொறந்தாலும் வாத்தியார் வீட்டு பிள்ளையா பொறக்கக்கூடாது...அவ்வ்வ்வ்.....

வெள்ளிக்கிழமை வரும் ஒலியும் ஒளியும்., புதன் கிழமை ஹிந்தி படம் (சித்ரகார்) இந்த இரண்டு நிகழ்ச்சிகள் மட்டுமே என் நினைவில் இருக்கிறது.

நாடோடி இலக்கியன் said...

நன்றி மங்களூர் சிவா.

நன்றி பாலாஜி,(சித்ரஹாரில் ஒரே ஒரு தமிழ் பாட்டு வரும் அதுக்காகவே நிகழ்ச்சியை முழுதும் பார்ப்போம்).

maharajan said...

tirunelveli maharajan. This story remind my child hood. Most of the evnts like my child hood events. Thanks for your story to remind my child hood.

Regards

V.MAHARAJAN (TIRUNELVELI-VANNAI)

நாடோடி இலக்கியன் said...

நன்றி MAHARAJAN .

நர்சிம் said...

சில்ல்ல்லென்ற மாதிரி சல்ல்லென்று போனது நடை.வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் said...

நன்றி நர்சிம்.

விக்னேஷ்வரி said...

”பூக்களைப் பறிக்காதீர்கள்”, ”வளையல் சத்தம்” மற்றும் ”முத்துக்கள் மூன்று” ஆகிய மூன்று படங்களை அப்போது ஓட்டினார்கள். //

இப்படியெல்லாம் படம் பேர் இருக்கா...

எங்க பாட்டியின் ஊர்ல ரோட்டுல கப்பல் போகும்டான்னு சொன்னாக் கூட நம்பும் வெள்ளந்தி பயமக்க. //

உங்க கூட இருந்துமா வெள்ளந்தியா இருந்தாங்க...

துக்கம் தொண்டையை அடைக்கும், கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நிற்கும். //

உங்க சோகம் எனக்குப் புரியுது. :P

பொறந்தாலும் வாத்தியார் பிள்ளையா மட்டும் பொறக்கக் கூடாதென்று. //

ஹாஹாஹா...

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை படத்திற்கும், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் நிகழ்ச்சிக்கும் தவமாய் தவமிருந்ததெல்லாம் இப்போது நினைத்தாலும் பசுமையான காட்சிகளாக நினைவில் விரிகிறது. //

அதே தான்.

ரகளையான நாட்கள் அவை. //

இப்போது நினைக்கையில் ரசனையானவையும் கூட.

நல்ல பதிவு நாடோடி இலக்கியன்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி விக்னேஷ்வரி.

" உழவன் " " Uzhavan " said...

ரொம்பவும் ரசித்துப் படித்தேன். அந்த அளவிற்கு இந்த தொலைக்காட்சி வந்த கதை என் பழைய நினைவுகளையும் மீட்டெடுத்தது.
25 பைசா கொடுத்து ஒளியும் ஒலியுமும், 40 பைசா கொடுத்து படமும்பக்கது வீட்டில்  பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. அருமை.

Jawarlal said...

//ஆண்டெனாவை திருப்பித் திருப்பியே நாளெல்லாம் மண்வெட்டி பிடித்து வெட்டுபவனைப் போல கடுமையாய் கை காய்த்துப் போய்விடும்.//

ரொம்ப ரசனையான வரிகள். நான் கூட ரூபவகிநிக்காக இதை 1980 இல செய்திருக்கிறேன்.

http://kgjawarlal.wordpress.com

நாடோடி இலக்கியன் said...

நன்றி உழவன்,(எங்க வீட்டிலும் கூட்டத்தைக் குறைக்க வேண்டி சில வாரங்கள் 25 பைசா வசூலித்திருக்கிறோம் அந்த காசில் ஹமாம் சோப் வாங்கியிருக்கேன் :) )


நன்றி ஜவஹர்.(80களிலேயேவா?ரூபவாஹிணியில் வரும் தமிழ் செய்தி வாசிப்பாளர்களின் தமிழுக்காகவே ரசித்துப் பார்ப்பேன்).

ஆதிமூலகிருஷ்ணன் said...

நடையில் நல்ல முன்னேற்றம் இலக்கியன். மிகச்சிறப்பான பதிவு. பல வரிகளில் ரசனை பளிச்சிடுகிறது.

1990ல் வாங்கப்பட்டபோது எங்கள் வீட்டு விடியோகான் டிவியும் ஊரில் நான்காவது டிவியாகவும், முதல் கலர் டிவியாகவும் புகழ்பெற்றது. கோவில் கொடிமரம்போல மிக உயரமான ஸ்ட்ராங்கான ஆன்டெனா எழுப்பி (எங்கள் மாமா ஒரு எலக்ட்ரீஷியன்) பீற்றிக்கொண்டோம். 18 வருடங்கள் சிறப்பாக பணியாற்றிவிட்டு சென்ற வருடம்தான் ஓய்வு பெற்றது அந்த டிவி. அப்போதும் சிறப்பாகத்தான் படம் தெரிந்துகொண்டிருந்தது. இருப்பினும் கூடுதல் வசதிகள் கருதி நாங்கள்தான் வற்புறுத்தி பெற்றோரை சம்மதிக்கவைத்தோம்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

கும்க்கியின் பின்னூட்டம் ரசனை.!

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,(90களில் எங்க வீட்டின் அடையாளமே ”ஆண்ட்டெனா தெரியுது பாருங்க அந்த வீடுதான்” என்பதுதான்.உங்க கமெண்ட்டை பார்த்ததும் எனக்கு அந்த நினைவு வந்தது.

இந்த பதிவின் முதல் பாகமாய் டூரிங் டாக்கிஸ் நினைவுகள் எழுதியிருந்தேனே அதை விடவா இப்பதிவின் நடை நன்றாக இருக்கிறது,நீங்க சொன்னா சரியாகத் தான் இருக்கும்,ரொம்ப சந்தோஷம் நண்பா).

கும்க்கியின் பின்னூட்டமா ஒரு வேளை நொறுக்குத் தீனிக்கு போட வேண்டிய பின்னூட்டமோ?).

கவிதை காதலன் said...

எனக்கும் என்னுடைய சின்ன வயசு நியாபகங்கள் வந்திடுச்சு

நாடோடி இலக்கியன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கவிதைக் காதலன்.

உங்கள் பக்கத்தில் கவிதைகள் அருமை.
தொடர்ந்து நிறைய எழுதுங்க நண்பா.