Tuesday, November 24, 2009

பொன்னேர் பூட்டுதல்


வருடம்தோறும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் கொண்டாடப்படும் அல்லது பின்பற்றப்படும் ஒரு சிறிய நிகழ்ச்சி பொன்னேர் பூட்டுதல்.எங்கள் பகுதியில் நல்லேர் கட்டுதல் என்பார்கள்.

பெரும்பாலான கிராமங்களில் சித்திரையின் முதல்நாளே நல்லேர் கட்டுவார்கள்.எங்கள் ஊரில் சித்திரையின் முதல் வாரத்தில் ஏதாவது ஒரு நாளில் கட்டுவார்கள்.எனது ஆரம்பப்பள்ளி நாட்களில் பாடப்புத்தகங்களில் கிராமங்கள் சார்ந்த விழாக்களைப் பற்றிய பாடங்களில் சூரிய உதயத்தில் உழவன் ஒருவன் கலப்பையை தோளில் தாங்கியபடி எருதுகளை ஓட்டிச் செல்வது போலவும்,உழத்தி ஒருத்தி அவன் பின்னால் கஞ்சிப்பானை சுமந்து செல்வது போலவும் ஒரு டெம்ப்ளேட் படம் அச்சிட்டிருப்பார்கள். இந்தக் காட்சி அப்படியே நல்லேர் கட்டுமன்று எங்கள் ஊரில் காணக்கிடைக்கும் .

அதிகாலையிலேயே வீடுகளை கழுவி,மாடுகளை குளிப்பாட்டி அதனோடு கண்டிப்பாக மனிதர்களும் குளித்து கலப்பையை தோளில் சுமந்து எருதுகளை ஓட்டியபடி வயல்களை நோக்கி ஆண்கள் நடக்க அவர்களின் பின்னால் மொத்த குடும்ப உறுப்பினர்களும் பூஜை பொருட்கள், நவதானியங்கள், நீராகாரம் போன்றவற்றை எடுத்துச் செல்வர்.கூடவே ஒரு கூடையில் மாட்டு எரு,பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டின் பாட்டிமார்களின் தலையில் இந்த எரு அள்ளிக்கொண்டு வருவதை கட்டிவிடுவார்கள்.

வயலில் மண்ணால் சிறு மேடை அமைத்து அதன் மேல் சாணம் அல்லது மஞ்சள் தூள் குழைத்து பிள்ளையார் செய்து, கொண்டுவ‌ந்திருக்கும் பொருட்களை அதன் முன் பரப்பி வைத்துவிட்டு, பஞ்சாங்கத்தின்படி அன்று எந்த திசை நல்ல திசையாக சொல்லப்பட்டிருக்கிறதோ அத்திசையை நோக்கி எருதுகளை நிற்க வைத்து ஏர் பூட்டி உழுவார்கள். குழந்தைகள் உட்பட குடும்ப‌ உறுபின‌ர்க‌ள் ஒவ்வொருவரும் அன்று ஏர் ஓட்டுவார்கள் அதாவது மெயின் டிரைவர் ஒருவர் இருப்பார் மற்றவர்கள் சம்பிரதாயத்திற்காக கொஞ்ச கொஞ்ச நேரம் கலப்பையின் கைப்பிடியைத் தொட்டுக்கொண்டு நடப்பார்கள். இது சம்பிரதாய உழவு என்பதால் வயலின் ஒரு சிறுபகுதியை மட்டும் உழவு செய்துவிட்டு எருதுகளை அவிழ்த்துவிடுவார்கள். பிறகு உழவு செய்த இடத்தில் எருவை கொட்டி அதன் மீது நவதானியங்களை விதைத்துவிட்டு அந்த வருடம் விளைச்சல் சிறப்பாய் இருக்க இறைவ‌னை வேண்டி பூஜைகள் செய்து எருதுகள், கலப்பை, மண்வெட்டி ஆகியவற்றிற்கு மஞ்சள் குங்குமம் வைத்து, கொண்டுவந்திருக்கும் நீராகாரத்தை எல்லோரும் பருகிவிட்டு பிரசாதமாக இனிப்புக் கலந்த பச்சரிசியை சுவைத்தபடியே வீட்டிற்குத் திரும்புவர். சுற்றிலும் இருக்கும் வ‌ய‌ல்வெளி எங்கும் அந்த‌ அதிகாலை நேர‌த்தில் கிராம‌ ம‌க்க‌ள் அனைவ‌ரும் அவ‌ர‌வ‌ர் வ‌யல்க‌ளில் பொன்னேர் பூட்டும் காட்சி திருவிழாக்கோல‌மாக‌ அவ்வ‌ள‌வு ர‌ம்மிய‌மாக‌ இருக்கும்.

வீட்டு வாசலில் வேப்பங்குழை மற்றும் மாவிலைகளோடு ஒரு குடத்தில் நீர் வைத்து அதன் மேல் ஒரு சொம்பில் பசும்பால் வைத்திருப்பார்கள். வயலிலிருந்து திரும்பும் ஒவ்வொருத்தரும் அந்த நீரில் கால்களை சுத்தப்படுத்திக்கொண்டு பசும்பாலை சிறிது சுவைத்து, வேப்பங்குழைகளை வீட்டின் கூரையில் சொறுகிவிட்டு வீட்டினுள் நுழைவார்கள்.

புது வருடம் பிறந்ததும் நல்லேர் கட்டுவதற்கு முன்பாக வேறு எந்த விவசாய வேலைகளையும் செய்யக் கூடாது.அதனாலேயே சித்திரை பிறக்கும் அன்றே பெரும்பாலான கிராமங்களில் நல்லேர் கட்டிவிடுவார்கள்.சித்திரைப் பட்டம் உளுந்து,கடலை போன்ற தானியங்கள் நன்றாக விளையும்.நல்லேர் கட்டுவதற்கு முன்பாகவே மழை பெய்துவிட்டால் ஈரம் காய்வதற்குள் விதைக்க வேண்டும் என்பதற்காக நல்லேர் ரூல்ஸை மீறவும் செய்வார்கள், அப்படி ரூல்ஸை மீறுபவர்கள் கண்டிப்பாக பஞ்சாயத்தில் அபராதம் செலுத்த பணிக்கப்படுவார்கள். அவர்களுக்கும் எல்லாமும் தெரியுமென்றாலும் எல்லாத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்து பருவத்தே பயிர் செய்துவிட்டு ஃபைனையும் கட்டுவார்கள்.

இயந்திரமயமாகிவிட்ட இன்றைய விவசாயத்தில் முதலில் காணாமல் போனது உழவு மாடுகள். அதனால் கலப்பைகளுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. இன்றும் நல்லேர் சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது. வீட்டிற்கு ஒருத்தரோ இருவரோ வயலுக்குச் சென்று மண்வெட்டியால் வயலில் சிறிது கொத்திவிட்டு ஜவுளிக்கடை கேரிபேக்கில் பார்சல் செய்யப்பட்ட எருவை கொட்டி நவதானியங்களை அதில் தூவிவிட்டு அவசர பிரார்த்தனை செய்துவிட்டு மினரல் வாட்டர் பாட்டிலில் கொண்டுவந்திருக்கும் நீராகாரத்தை பருகிவிட்டு,அனைத்துப் பொருட்களையும் கையடக்க நவீன பையில் எடுத்துவைத்தபடியே டூவீலரில் கிளம்பிவிடுகிறார்கள்.

ஆள்பற்றாக்குறை,எகிறிய கூலி,போதிய விளைச்சலின்மை, விளைந்த பொருட்களுக்கு நியாயமான விலையின்மை என‌ பல காரணங்களால் எங்கள் பகுதியில் சவுக்கு, யூக்களிப்டஸ் போன்றவற்றை நெல், கடலை, உளுந்து, எள், கரும்பு என நன்றாக விளையக்கூடிய நன்செய் நிலங்களிலும் தரிசாகப் போடக்கூடாதென்பதற்காக நட்டு வைத்திருக்கிறார்கள். விவசாயம் நலிவடைந்திருக்கும் இன்றையச் சூழலில் நல்லேர் பூட்டுவதை ஒரு கடமைக்கேனும் செய்து கொண்டிருப்பதே பெரிய விஷயம்தான்.

18 comments:

க.பாலாசி said...

பொன்னேர் பூட்டுதல் பற்றி நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆயினும் நேரில் பார்த்ததில்லை.(நாங்கள் விவசாயக்குடும்பமில்லாததால் இருக்கலாம்).

//இயந்திரமயமாகிவிட்ட இன்றைய விவசாயத்தில் முதலில் காணமல் போனது உழவு மாடுகள்//

மாடுகளுக்கு கிடைத்த சுதந்திரமாய் கருதுகிறேன்.

நல்ல அனுபவம்...

ஈரோடு கதிர் said...

எவனொருவன் கிராமத்தையும் அது சார்ந்த வாழ்வையும் எழுதுகிறானோ அவன் எப்போதுமே என் வணக்கத்துக்குரிய மனிதன்...

நல்ல மனிதனை நண்பனாக கிடைக்கப் பெற்றமை மகிழ்கிறேன் பாரி..

மிக அருமையான இடுகை தோழா

vasu balaji said...

கனா கண்டா மாதிரி இருக்கு படிக்க. நல்ல பகிர்வு. தமிழிஷில் பதிக்கவில்லையேங்க.

pudugaithendral said...

முதன் முறை வருகிறேன்.

பொன்னேர் பூட்டுதல் பற்றி தெரிந்து கொண்டேன். நன்றி

Unknown said...

கடைசி பத்திகள் கண்களில் நீர் வரவைத்தது... :(( எங்க ஊரிலெல்லாம் கார்த்திகை (அதாவது இந்த மாசம்)கடலை விதைத்திருப்பார்கள்...

சிவக்குமரன் said...

இது போன்ற விஷயங்களை இணையத்தில் பதிவது வரவேற்கத்தக்க ஒன்று. தொடரட்டும் உங்கள் .............

செ.சரவணக்குமார் said...

கிராமத்தின், விவசாயிகளின் மிக முக்கியமான சம்பிரதாயமான நல்லேர் பூட்டுதல் பற்றிய பகிர்வுக்கு நன்றி நண்பரே.

தினேஷ் said...

// இன்றையச் சூழலில் நல்லேர் பூட்டுவதை ஒரு கடமைக்கேனும் செய்து கொண்டிருப்பதே பெரிய விஷயம்தான்//

ஆமாம் தோழரே ...

நல்ல பதிவு , அதும் ஏர் பூட்டும் போது வீட்டில் உள்ளவர்களில் முதல் நாளே ராசி பார்த்துவிட்டு யார் ராசிக்கு நல்லா இருக்கும் என்று பார்த்துவிட்டு அவரை நவதானியங்களை எடுத்து சென்று முதலில் விதைக்க சொல்வார்கள்

Unknown said...

பொன்னேர் பூட்டுதல் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன்..
நல்ல பகிர்வு நண்பா..

ஊர்சுற்றி said...

நிதர்சனம்.

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி செ.ச‌ர‌வ‌ண‌க்குமார்,
ந‌ன்றி புதுகைத்தென்ற‌ல்,
ந‌ன்றி ஸ்ரீமதி,
ந‌ன்றி சிவா,
ந‌ன்றி வான‌ம்பாடிக‌ள்
ந‌ன்றி பாலாஜி(இய‌ந்திர‌ம‌ய‌மாக்க‌லால் அருகிவ‌ரும் வில‌ங்கின‌ங்க‌ளில் நாட்டு மாடுக‌ளும் இட‌ம்பெற்றுவிட்ட‌து ந‌ண்பா).
ந‌ன்றி க‌திர்,
ந‌ன்றி சூரிய‌ன்,
ந‌ன்றி ப‌ட்டிக்காட்டான்,
ந‌ன்றி ஊர்சுற்றி.

நாஞ்சில் நாதம் said...

கடைசி பத்தி வருந்த செய்தது

இலக்கியன் நீங்க எழுதுற கிராமத்து பதிவுகள் டாப் டக்கர்

Thamira said...

மண் மணக்க தொலைந்துகொண்டிருக்கும், தொலைந்துவிட்ட கிராமத்தை பதிவு செய்கிறீர்கள் உங்கள் பதிவுகளில்.. வாழ்த்துகள் தோழர். தொடருங்கள்.!

//கலப்பையை தோளில் சுமந்து எருதுகளை ஓட்டியபடி வயல்களை நோக்கி ஆண்கள் நடக்க // என் நினைவுகளின் அடியாழத்தில் இருக்கிறது இதுபோன்ற சம்பவங்கள்.

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி நாஞ்சில் நாதம்.

ந‌ன்றி ஆதிமூலகிருஷ்ணன்.

Sanjai Gandhi said...

பொன்னேர் பிடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. :(

வாழைப்பழம்+வெல்லம்+ஏலக்காய் கலந்து பஞ்சாமிர்தம் என்று சாப்பிடுவது அமிர்தமல்லவா?. ஒரு கையில் வாங்கி சாப்பிட்டுவிட்டு கையை சுத்தமாக துடைத்துவிட்டு இன்னொரு கை வாங்குவது சாதனையான உணர்வல்லவா :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி சஞ்சய்,(இப்போதுதான் படிச்சீங்களா).

arasan said...

நிறைய அறிந்து கொண்டேன் ,..
எனது ஊரிலும் நடைபெற்ற இந்நிகழ்வு இப்போ இல்லை ..
எல்லாம் மாற்றம் தந்த பரிசு ...

நாடோடி இலக்கியன் said...

@அரசன் சே,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி