Friday, May 21, 2010

அவனுக்கென்ன குடிகாரன்...

அவனுக்கென்ன குடிகாரன்...
தூசி படிந்த கிச்சன்,
நிறமிழந்த பாத்ரூம் ஸ்டிக்கர் பொட்டு,
ஃபேன் காற்றில் படபடக்கும் ஜக்கிவாசுதேவ்,
பிரிக்கப்படா உணவுப் பொட்டலம்,
டீப்பாயில் முளைத்த நெப்போலியன்,
கையில் புகையும் கிங்ஸ்,
எங்கிருந்தோ கேட்குமொரு சேவலின் கூவல்,
உறக்கம் தொலைத்த விழிகளோடு
மூலையில் சுருண்டுகிடக்கும் அவன்
உங்க‌ளின் பார்வைக்கு
வெறும் குடிகாரனாய் தெரியலாம்..!

மதனோற்சவம்
வேண்டுமென்பேன்
வேண்டாமென்பாய்
மாறன் தொடுத்த
இடைவிடாக் கணைகளில்
மயங்கி முயங்கி
பழகிய பொழுதொன்றில்
எனது வேண்டும்களுக்கும்
உனது வேண்டாம்களுக்கும்
அர்த்தம் ஒன்றேயென
அறிந்து தெளிந்தபின்
நான் கெஞ்சுவதுமில்லை
நீ மிஞ்சுவதுமில்லை
நடந்தேறிக்கொண்டிருக்கின்றன
மதனோற்சவங்கள்...!


அனங்கரங்கம்
நிசப்தம்சூழ் தனிமை
வம்பாய் வந்தமர்ந்து
வாட்டி வதைக்கும்
முறுக்கேறிய காலையில்,
ஒழுக்கச் செயற்கைக்கும்
உள் இயற்கைக்குமான
இடையிலா பெருஞ்சமரில்
வெல்வது இயற்கையெனத் தெரிந்தும்,
சிதறிக் கிடக்கும்
வாராந்திரிகளில் கண்ணும்,
ஐபாட்டுக்கு காதும்
கொடுத்து முடியாது,
ஒழுங்கிலா அறையை
சுத்தம் செய்கிறேன்....
ஏதேதோ செய்தும்
எதற்கும் பணியா
காட்டாற்று வெள்ளமென
பொங்கும் பிரவகிப்பை
அடக்குவதென
இயற்கையை ரசிக்க முயல்கிறேன்,
திமில் பெருத்த காளையென
விரட்டுமதற்கு
ஆரம்பத்திலேயே
அடிப்பணிந்திருந்தாலாவது
மற்ற வேலைகளில்
மூழ்கியிருக்கலாம்......!

எப்படித் தொலைப்பது?
வழக்கமாய்ச் செல்லும்
இப்பாதையின்
இதே இடத்தில்தான்
முன்பொருமுறை
முக்கியப் பொருளொன்றைத்
தொலைத்தேன்
,
ராசியில்லா இவ்விடத்தைக்
கடக்கும் போதெல்லாம்
இருக்கும் பொருட்களை
அனிச்சையாய்
சரி
பார்த்துக் கொள்கிறேன்,
பொருளைக் கண்டெடுத்தவனும்
இப்பாதையை
வழக்கமாக்கி
க் கொண்டனாயிருப்பின்,
இதே இடத்தை
நன்றியோடு நினைவு கூர்ந்து
நகர்ந்து போகக் கூடும்,
எனக்கான பிரச்சனை என்னவெனில்
தொலைந்தப் பொருள் தொலைந்ததுதான்,
இவ்விடத்தைக் கடக்கயில் வரும்
இப்படியான நினைவுகளை
எப்படித் தொலைப்பது?!

முத‌ல்ம‌ழை என்ற என‌து இன்னொரு வ‌லைப்ப‌திவில் எழுதி காற்று வாங்கிய‌ என‌க்குப் பிடித்த‌ கிறுக்க‌ல்க‌ள் சில‌.

10 comments:

vasu balaji said...

வரிசைப்படியே ரசனையும்:)

Chitra said...

அசத்தல். நல்லா எழுதி இருக்கீங்க..... தொடர்ந்து எழுதுங்கள்..... அடிக்கடியும்.

Thamira said...

தொலைந்த கவிதை ரசனை. ஆனால் இதே தொனியில் வேறெங்கோ படித்த ஞாபகம்.!

க.பாலாசி said...

மதனோற்சவம் முன்னமே படித்து ரசித்திருக்கிறேன்.. மீண்டும் மற்றயவைகளுடன்... முதல் கவிதை மனதை விட்டு அகலவில்லை.... அருமை....

ஈரோடு கதிர் said...

நல்ல மீள் பாரி

நாடோடி இலக்கியன் said...

நன்றி வானம்பாடிகள்,

நன்றி சித்ரா,(முயற்சிக்கிறேன்ங்க அடிக்கடி எழுத).

நன்றி ஆதி,(நீங்கள் படித்தது இதே கவிதயைத்தான். அண்ணாச்சி தனது கதம்பத்தில் முன்பொருமுறை எனது இந்தக் கவிதையை சுட்டிக்காட்டித்தான் அறிமுகம் செய்திருந்தார்,அங்குதான் நீங்கள் படித்து பின்னூட்டமும் போட்டுருந்தீங்க,.....:) )
).

நன்றி பாலாசி,

நன்றி கதிர்.

அன்பேசிவம் said...

(கவிதை) ஒன்றின் பின் ஆயிரம் இருக்கு நண்பா.. அருமை,.

Anonymous said...

hello... hapi blogging... have a nice day! just visiting here....

நாடோடி சைத்தான் said...

‘எப்படித் தொலைப்பது..’ அருமை.. அழகான பெண்கள் குடியிருந்த வீட்டை கடக்கும் போதெல்லாம் அவளைத் தேடும் கண்கள்.. அவள் திருமணமாகிப் போனபின்னும் அனிச்சையாய நம் கண்கள் அந்த வீட்டை எட்டிப்பார்ப்பது போல்.. இதுவும் கூட ஒரு அனிச்சை செயலாகவே மாறிவிடுகிறது..

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி ஜோதிக்குமார்

நீங்க‌ள் சொல்லியிருக்கும் அழ‌கான‌ பெண்க‌ள் இருக்கும் வீடுக‌ள் ப‌ற்றி என‌து முத‌ல் ம‌ழையில் கூட‌ ஒரு க‌விதை எழுதியிருந்தேன். இதோ உங்க‌ளுக்காக‌

//அழுக்கு ஜன்னல்களுக்கான மவுசு
அலங்கார வாசற்கதவுகளுக்கு
எப்போதுமே இருப்பதில்லை
அழகான பெண்களிருக்கும் வீடுகளில்...!
//