Monday, May 31, 2010

டூரிங் டாக்கீஸ் நினைவுக‌ள்

"இன்னான்விடுதி ரெங்கம்மா","செல்லம்பட்டி துரை" பத்து பதினைந்து வருடங்களுக்கு முன் எங்கள் பகுதியில் இந்தப் பெயர்கள் அத்தனை பிரபலம். எங்க ஏரியாவின் சத்யம்,ஐனாக்ஸ் இந்த இரண்டு டூரிங் டாக்கீஸ்கள்தான்.

எண்பதுகளின் மையத்தில் தமிழக அரசின் குடும்ப
க்
கட்டுப்பாட்டு பிரச்சாரங்களைத் தாங்கிய கார்டூன் படங்களை அப்போதெல்லாம் கிராமங்கள் தோறும் 35 mm திரையில் ஓட்டுவார்கள், அதையே ஒன்ஸ்மோர் கேட்டுப் பார்த்த பயமக்கள் நாங்களெல்லாம். பஞ்சாயத்துத் தொலைக்காட்சிக்கூட எங்கள் ஊருக்கு எட்டிப் பார்த்திராத நேரத்தில்தான் பக்கத்து ஊர்களான இன்னான்விடுதியிலும், செல்லம்பட்டியிலும் அதிரடியாக இந்த டூரிங் டாக்கீஸ்கள் அவதரித்தன.

வருஷத்துக்கு ஒரு தரம் பொங்கல்,தீபாவளிக்கு தஞ்சாவூருக்குப் போறப்போ பெரிய பெரிய சினிமா போஸ்டர்களையெல்லாம் பார்த்ததையே ஒரு வாரத்துக்குக் கதைக் கதையா பேசித் திரிவோம். அப்படி வாய்பிளந்துப் பார்த்த போஸ்டர்களை எங்க ஊரிலேயே பார்க்கும் பாக்கியம் இந்த டூரிங் டாக்கீஸ்களால் கிடைத்தது யாம் பெற்ற பேறு.

ஒரு ஊருக்கு இரண்டு போஸ்டர்கள் என்று கணக்கிட்டு ஒவ்வொரு ஊரிலும் ஆட்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் போஸ்டர்களை ஒட்டுவார்கள். போஸ்டர் ஒட்ட வருபவர் மைதா மாவை சுவரில் பூசி பிறகு கொண்டு வந்திருக்கும் போஸ்டரின் பின்பக்கமும் பூசி (அவ்வளவு சஸ்பென்ஸாக பூசுவார்) திருப்பி ஒட்டுவதற்குள் "ரஜினி படம்டா", "இல்ல விசியாந்து படம்தான் எவ்வளவு பந்தயம்" என்று அங்கே கூடியிருக்கும் விஸ்கான்களிடையே பெரிய பட்டிமன்றமே நடக்கும்.

ஒரு படம் அதிகபட்சமாக ஒரு வாரம் ஓடும். ஒரு வாரத்திற்கு மேல் ஓடினால் ஆட்டோவில் விளம்பரமெல்லாம் செய்து கொண்டு வருவார்கள். எனக்குத் தெரிந்து பத்து நாட்களைக் கடந்து இரண்டு படங்கள் ரெங்கம்மாவில் ஓடியிருக்கிறது ஒன்று "கரகாட்டக்காரன்" மற்றொன்று "மைதிலி என்னைக் காதலி" (இந்தப் படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன் உஸ்ஸ் முடியல, சரி வேண்டாம் ஆட்டய கவனிங்க) .

ஒவ்வொரு வாரமும் என்ன படம்னு தெரிஞ்சிக்க போஸ்டர் ஒட்டியிருக்கும் இடத்திற்கு அவனவன் கார், பைக் எல்லாம் எடுத்துகிட்டு(பசங்க படத்தில பார்திருப்பீங்கல்ல அந்த மாதிரியான கார்களும்,பைக்கும்தான்) ஓ(
ட்)
டிவந்து பார்த்ததையெல்லாம் இப்போது நினைத்தாலும் கண்முன்னே காட்சியாகிறது.

போஸ்டர்கள் ஒட்டியிருக்கும் சுவற்றின் சொந்தக்காரர்கள் அந்த போஸ்டரை வேறு யாரும் கிழித்து விடாமல் பார்துக் கொண்டால் அடுத்தப் படத்திற்கு அவர்களுக்கு இலவச அனுமதி கிடைக்கும்.அதனால் எப்போதும் யாராவது ஒருத்தர் அங்கே காவல் இருப்பர் . அவர்கள் அசரும் நேரம் பார்த்து போஸ்டரைக் கிழித்துக் கொண்டு ஓடிவிடுவோம்.அப்படி கிழிக்கப்பட்ட
போஸ்டர்களில் இருக்கும் தலைவர்கள் அடுத்தநாள் எங்கள் புத்தகத்தின் அட்டைகளாகிச் சிரிப்பார்கள்.

ரெங்கம்மாவில் பெரும்பாலும் பழைய படங்களாகவே ஓடும், மாறாக துரையில் புதுப்புது படங்களாக ரிலீஸ் செய்வார்கள்.(இங்கே பழைய படங்கள் என்று சொல்வது "லவகுசா" காலத்துப் படங்கள்,புதுப் படங்கள் என்று சொல்வது முரட்டுக் காளை ரேஞ்ச் படங்கள். துரையில் முரட்டுக்காளை ரிலீஸ் ஆகியிருந்த சமயத்தில் தஞ்சையில் "அண்ணாமலை" ஓடிக்கொண்டிருந்தது).

பொங்கல்,தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் "மாப்பிள்ளை","கேப்டன் பிரபாகரன்" போன்ற ரிலீஸ் ஆகி இரண்டு மூன்று வருடங்களேயான ரொம்பப் புதுப்படங்களையெல்லாம் போட்டு அசத்துவார்கள். இதிலும் துரையில் ரஜினி படம் ஓடினால், ரெங்கம்மாவில் விஜயகாந்த் படம்தான் ஓடும் என்று கண்மூடிக்கொண்டுச் சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு எங்க ஏரியாவில் இந்த இருவருக்கும் ரசிகர்கள் உண்டு. இதில் இன்னொரு விஷயம் என்னவெனில் ரஜினிக்கோ, விஜயகாந்துக்கோ கிடைக்காத வ
வேற்பு அப்போதைய ராமராஜன் படங்களுக்கு இந்த டூரிங் டாக்கீஸ்களில்(குறிப்பாக ரெங்கம்மா) கிடைத்தது. மேளதாளம்,தோரணம் என முழக்கி எடுத்து விடுவார்கள். வருடத்திற்கு இருமுறை "கரகாட்டக்காரனும்", "நம்ம ஊரு நாயகனும்" ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஓட்டுவார்கள். அதே மாதிரி டி.ராஜேந்தர் படங்களுக்கும் பெரிய வரவேற்பு இருந்தது.

டீ.ஆரின் "எங்க வீட்டு வேலன்" ஓடியபோது சினிமா கொட்டாயின்(அப்படித்தான் சொல்வோம்) முன்புறம் பெரிய வேப்பங்கிளையை வெட்டி வைத்து அதன்கீழ் ஒரு அம்மன் படமும், ஒரு குடத்தில் மஞ்சள் துணியைக் கட்டி உண்டியலாகவும் வைத்திருந்தார்கள். படத்தில் வரும் சாமி சிலைகளை இரண்டு முறை கேமராவில் முன்னும் பின்னும் ஜூம் செய்து காட்டிவிட்டால் போதும் நிறைய அம்மணிகளுக்கு சாமி வந்து ஆட ஆரம்பித்துவிடுவார்கள். பிறகு அங்கே இந்த மாதிரி படங்களுக்கென்றே ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் பூசாரி ஒருத்தர் இருப்பார் அவர் இவர்களையெல்லாம் வெளியேற்றி கொட்டாயின் முன்புறம் இருக்கும் அம்மன் படத்தின் முன்பு ஆடவிடுவார். "டேய் ம்ம்ஹூம்" என வினோத சத்தங்களையெல்லாம் அரங்கெற்றும் இந்த சாமியாடி அம்மணிகள், வாங்கி திங்க என கொண்டு வந்திருக்கும் ஐம்பது காசு, ஒரு ரூபாய்களை புசாரியின் கட்டளைப்படி உண்டியலில் போட்டுவிட்டு பூசாரி கொடுக்கும் உச்சந்தலை அடியையும், திறுநீரையும் வாங்கியபடி மீண்டும் ஆட்டைக்கு வந்துவிடுவார்கள். அதுவரை படம் நிறுத்தப் பட்டிருக்கும். "ஆடி வெள்ளி","வெள்ளிக்கிழமை விரதம்" போன்ற பக்தி படங்களுக்கு இந்த சாமியாட்ட கும்பலின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இவர்கள் சாமியாடி முடிக்கும்வரை கேண்டீன் வியாபாரம் சூடுபிடிக்கும், கடலை மிட்டாய், முறுக்கு,ஆரஞ்ச் கலர் என ஹைகிளாஸ் ஐட்டங்களயெல்லாம் வாங்கும் அளவிற்கு எங்களிடம் காசு இருக்காது. தரை டிக்கெட்டுக்கு எழுபத்தைந்து பைசா தேற்றுவதே பெரிய காரியமாக இருக்கும். எனவே தியேட்டருக்கு வெளியே விற்கும் நாவப்பழம், கொடுக்காப் புளி, நெல்லிக்காய், வேர்க் கடலை ஆகியவற்றை ஆரம்பத்திலேயே வாங்கிச் சென்றுவிடுவோம். அதிக பட்சமாக எங்களின் ஸ்னாக்ஸ் செலவை ஐம்பது பைசாவில் முடித்துக் கொள்வோம். ஒன்னார்ரூவாய் பெஞ்ச் டிக்கெட்டும், ரெண்டு ரூவா தேங்காய் நார் குஷன் சீட்டிலும் உட்கார்ந்துப் படம் பார்க்க வேண்டுமென்பது அப்போதெல்லாம் பெரிய லட்சியமாக இருந்தது.

பண்டிகை நாட்களில் மட்டும் நான்கு காட்சிகள் ஓட்டுவார்கள். மற்ற நாட்களில் இரண்டு காட்சிகள் மட்டும்தான். பண்டிகை நாட்களில்தான் படம் பார்க்க பர்மிஷன் கிடைக்கும், அதுவும் காலைக் காட்சி அல்லது மேட்னி ஷோவுக்கு. இந்த மாதிரி பகல் நேரக் காட்சிகளைப் பார்க்க நேரிடும்போது புரஜெக்டர் ரூமிலிருந்து வரும் ஒளியைவிட சூரிய ஆப்பரேட்டர் அடிக்கும் ஒளிதான் திரையை அதிகம் ஆக்ரமிக்கும். அத்தனை ஓட்டைகள் இருக்கும் சினிமாக் கொட்டாய்களின் கூரையில். மழைக் காலத்தில் பெரும்பாலும் காட்சிகளை ரத்து செய்துவிடுவார்கள்.

இரவு காட்சிகள் செல்வதுதான் பயங்கரத் திரில் நிறைந்தது. துரையும், ரெங்கம்மாவும் எங்க ஊரிலிருந்து தலா நான்கு கிலோமீட்டர் தூரத்தில் எதிரெதிர்த் திசையில் அமைந்திருக்கும். பெரும்பாலும் இரவுக் காட்சிகளுக்கு செல்லும்போது வீட்டாருக்குத் தெரியாமல் திருட்டுத் தனமாகவே போவோம்.


செல்லம்பட்டித் துரைக்கு செல்லும் வழி ஒன்னும் பிரச்சனை இருக்காது. மெயின் ரோட்டிலேயே சென்றுவிடலாம்.ஆனால் ரெங்கம்மாவிற்கு செல்லும் வழிதான் நிறைய அட்வென்சர்களை செய்ய வேண்டியிருக்கும். முழுவதும் வயல் காடுகளும், சவுக்குத் தோப்புகளும் நிறைந்து இருக்கும். இந்த சவுக்குத் தோப்புகளுக்கிடையில் ஒரு முனியன் கோவில் இருக்கும், அங்கே ஒரு ஹாஃப் சைஸ் 'சரவண பெலகுலா' ரேஞ்சுக்கு பெரிய முனியன் சிலை கையில் பெரிய அரிவாளோடு வீற்றிருக்கும், பக்கத்தில் ஒற்றை பனை மரம் ஒன்று இருக்கும். படம் பார்க்கச் செல்லும்போது ஓரளவிற்கு வெளிச்சத்திலேயே சென்று விடுவோம், ஆனால் திரும்பி வரும்போதுதான் "ஜெகன் மோகினி" எபெஃக்டெல்லாம் கேட்கும், அதுவும் காற்றடிக்குபோது சவுக்குத் தோப்பிலிருந்து ஒரு சத்தம் வரும் பாருங்க டி.டி.எஸ் எபெஃக்டெல்லாம் தோற்றுப் போகும். கரக்டா முனியன் கோவில் நெருங்கும் சமயத்தில் எல்லோரும் எடுப்போம் ஓட்டம், சவுக்குத் தோப்பை கடக்கும் வரை "ஆய் ஊய் குத்தி புடுவேன், வெட்டிப் புடுவேன்" என்று எங்களது பயங்களை வீரமாக மாற்றியபடி கத்திக்கொண்டே தூரமாய் வந்த பிறகே ஓட்டத்தை நிறுத்துவோம். இந்த டூரிங் டாக்கீஸில் நான் கடைசியாகப் பார்த்தப் படம் விஜய் நடித்த "விஷ்ணு". இதுவும் கூட திருட்டுதனமாகப் பார்த்த படம்தான்.

இப்படி எத்தனையோ நினைவுகளை என்னைப் போன்ற பலரிடம் விதைத்து வைத்திருக்கும் இந்த டூரிங் டாக்கீஸ்களில் ஒன்று இன்று டி.என்.சி நெல் அடுக்கும் குடோனாகவும், மற்றொன்று பாழடைந்து புதர்களும்,கரையான் புற்றுகளுமாக காட்சியளிக்கிறது.எத்தனை ஆர்ப்பாட்டம், விசில்கள், கால்தடங்கள் பதிந்த இடம் இன்று பொலிவிழந்து, மனுஷ பயலுக்கு எதையோ உணர்த்தியபடியே அமைதியாக காட்சியளிக்கிறது.

இன்று சத்யம்,ஐனாக்ஸ் தொடங்கி வெளிநாட்டு திரையரங்கில் கூட படம் பார்த்துவிட்ட போதும் மனசு ஏனோ அந்த ஆறு மணி தேய்ந்த ரெக்கார்ட் சவுண்டுக்கு ஏங்குகிறது.3 comments:

vijayan said...

உங்கள் பதிவை படித்து முடித்த உடன் மனசு மிகவும் விட்டு போயிற்று,எவ்வளவுகூதுகலங்களுக்கு,இன்னோரன்ன அனுபவங்களுக்கு,காரணமாயிருந்த இடம் இன்று மண்மேடாய் இருப்பதை பார்த்தால் மனசு என்ன பாடுபடும். இடம் மட்டுமல்ல அப்போது பார்த்து பழகிய மனிதர்கள் இப்போது வறுமையினாலும்,வயோதிகத்தாலும் பாதிக்கப்பட்டு இருப்பதை பார்த்தாலும் மிகவும் கஷ்டமாயிருக்கிறது.பொய்யாய்,கனவாய்,பழங்கதையாய் போயிற்று.

வானம்பாடிகள் said...

மீட்டிய நினைவுகள்:)

நாடோடி இலக்கியன் said...

ந‌ன்றி விஜ‌ய‌ன்.

ந‌ன்றி வான‌ம்பாடிக‌ள்.