Friday, February 15, 2013

வடு


ரத்தினத்தம்மாவை இப்படி ஒரு கோலத்தில் எதிர்பார்க்கவே இல்லை. என்னைவிட அதிர்ச்சியில் இருந்தாள் அம்மா.

 ரத்தினத்தம்மா எங்கள் ஊருக்கு வந்த அந்த நாள் எனக்கு இப்பவும் நன்றாக நினைவிருக்கிறது . இருபது வருடங்களுக்கு முன், ஒரு மூங்கில் கூடையில் துணிமணிகள், சமையல் பாத்திரங்கள் என வைத்துக்கொண்டு கலைந்து போன தலையோடும் கசங்கிய சேலையோடும் ஐம்பது வயசு மதிக்கத்தக்க தோற்றத்தில் பள்ளிக்கூடத்திற்கு அருகில் இருந்த சாவடியில் அமர்ந்திருந்தவளை பைத்தியமோ என்று பார்த்தவர்கள் கிசுகிசுத்துப்படி தயங்கிக்கொண்டிருக்க அம்மாதான் அவளின் அருகே சென்று விசாரித்தாள்.

அந்நியர்களிடமும் நீண்ட நாட்கள் பழகியதொரு சினேகத்துடன் பேசும் இயல்பு அம்மாவிற்கு. வருடத்திற்கு ஓரிரு முறை ஊருக்குள் வரும் அம்மிக்கல் கொத்துகிறவர்கள், ஊசிமணி பாசி மணி குறத்திகள், ஈயம் பூசுபவர்கள் என   இப்படி யார் வந்தாலும் அம்மாவைப் பார்த்து நலம் விசாரிக்காமல் செல்வது கிடையாது. அம்மாவும் அவர்கள் ஒவ்வொருத்தரின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களிலிருந்து சகலத்தையும் அறிந்து வைத்திருப்பாள். அவர்களின் நலம் குறித்து அக்கறையாய் விசாரிப்பாள், வாஞ்சையான இவளின் பேச்சிற்கு  மனக் கஷ்டத்தோடு வருபவர்களின் மனதை லேசாக்கிவிடும் வல்லமை இருந்தது.

"எந்தூரும்மா? என்ன இப்படி வந்து ஒக்காந்திருக்கிய" என்று அம்மா கேட்டதற்கு லேசாய் தலையாட்டி சிரித்தாளேத் தவிர எதுவுமே சொல்லவில்லை. சுற்றி நின்ற சின்னப் பசங்களான நாங்க  "கிறாக்கு, எந்தூருன்னு கேட்டா சிரிக்குதுடா” என்று ஒரு சேர சத்தமாய்ச் சிரிக்கவும் , ”ஏ பாளயங்களா செத்த போறியளா அங்கிட்டு” என்று எங்களை விரட்டிய அம்மா, ”பாரு கண்ணு முழியெல்லாம் கெறக்கம் தட்டிக் கெடக்கு, எதாச்சும் சாப்புடுறியளாம்மா” என்று கேட்டாள். வேண்டாம் என்பதாய் தலையசைத்தவளை அம்மா விடவில்லை, ”கொஞ்சூண்டு நீராரமாச்சும் கொண்டு வரட்டா” என்றாள். எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து புடவை தலைப்பில் இருந்த மண்ணை தட்டிவிட்டுக்கொண்டிருந்தவளின்  கண்களிலிருந்து சுருக்கென கண்ணீர் வந்ததைப் பார்த்ததும்,”யாத்தே! ஏம்மா அழுவுறிய, இந்தா இருங்க”  என்றபடி வீட்டுக்கு ஓடிய அம்மா, ஒரு கிண்ணத்தில் கஞ்சியோடு வந்தாள். கஞ்சியை வாங்கிக்கொள்ள  பெரிதாய் தயங்கியவளை, ”முதல்ல இந்தக் கஞ்சியக் குடிச்சிட்டு பசியாறும்மா” என்று கிண்ணத்தை அவளின் அருகில் வைத்துவிட்டு, ”நான் அப்புறமா வந்து எடுத்துக்குறேன் , செத்த படுத்து எந்திரிங்க, அலுக்கையா இருக்கும் பாவம்” என்றபடி  சென்ற அம்மாவின் பேச்சில் கொஞ்சம் முகம் தெளிவடைந்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து, சாப்பிட்ட கிண்ணத்தைக் கழுவி எடுத்துக்கொண்டு எங்கள் வீட்டை நோக்கி வந்துகொண்டிருந்தவளை பார்த்த நான், கொல்லைப்புறத்தில் மாட்டிற்கு தண்ணீர் வைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம் ஓடினேன். ”யம்மோவ், அந்த கிறாக்கு இங்க வருதும்மா” என்ற என்னை,”கிறாக்குன்னு நீ கண்டிய”என்றபடியே நருக்கென தலையில் கொட்டிய அம்மா,”பள்ளியொடத்துக்கு ஓடு” என விரட்டினாள்.

”என்னம்மா சாப்டியளா” என்றபடியே வாசலுக்கு வந்த அம்மா , ”ஒக்காரும்மா ” என்று அருகில் இருந்த புங்கை மரத்து நிழலில் கிடந்த மணலில் தானும் உட்கார்ந்துகொண்டு புதிதாய் வந்தவளுக்கு ஒரு சினேகமான சூழலை உருவாக்கினாள். ரொம்ப நேரமாக அம்மா அவளுடன் பேசிக்கொண்டிருந்தாள். பிறகு நான் பள்ளிக்கூடம் சென்று திரும்பி வந்து பார்த்தபோது அம்மாவோடு கொல்லைப்புறத்தில் வாழைக்கு கீங்கட்டை வெட்டிக்கொண்டிருந்தாள். விதைக் கடலை வாங்கச் சென்றிருந்த அப்பாவும் அப்போதுதான் வந்திருந்தார், ரத்தினத்தம்மாவை  யாரென புரியாமல் பார்க்கவும்,  சிரிச்சபடியே ஆரம்பித்த அம்மா, “இது பேரு ரத்தினத்தம்மாளாங்க, பொழைக்க வந்துருக்கு, மருத பக்கமாம், வெவசாய வேலையெல்லாம் செய்யுமுனுச்சு அதான்” என்று இழுத்தாள்.

 ”அதுக்கென்ன சந்தோஷமா இருந்துட்டு போவட்டும்” என்ற அப்பா, ரத்தினத்தம்மாவிடம், ”சங்கட பட்டுக்காம இரும்மா,ஒன்னும் பயமில்ல”  என்றதைக் கேட்ட ரத்தினத்தம்மா, பெரிதாய் கைகூப்பி தனது நன்றியைச் சொன்னாள்.

அன்போ வம்போ எதுவாயினும் வார்த்தைகளால் வெளிப்படையாய் காட்டிவிடுகிற கிராமத்து மனிதர்களுக்கு நகரத்து மனிதர்களைப்போல சக மனிதர்களை எடுத்த எடுப்பில் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லாத காலகட்டம் அது.ரத்தினத்தம்மா, சாவடியிலேயே ஒரு ஓரத்தில் நான்கு மரத்தூண்களில் சேலையைக் கட்டி ஒரு மறைவை உண்டாக்கி தங்கிக்கொண்டாள். அருகில் இருக்கும் ஒதிய மர நிழலில்தான் சமையல் செய்துகொள்வாள். எங்கள் வீட்டிற்கு மட்டுமல்லாது ஊரில் எல்லோர் வீட்டிற்கும் கூலி வேலைக்குச்  செல்ல ஆரம்பித்து மெல்ல மெல்ல ஊரில் ஒருத்தியானாள். எல்லோர் கூடவும் சகஜமாய் பழகி வந்தாலும் அவளின் குடும்பத்தை பற்றியோ , ஏன் இப்படி இந்த வயதில் வந்து கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள்? என்பது பற்றியோ யாருக்குமே தெரியாது. எப்படி கொக்கிப் போட்டுக் கேட்டாலும் பெரும்பாலும் வெறுமையா சிரிச்சு சமாளித்துவிடுவாள்.

எங்கே வேலைக்குச் சென்றாலும் சாயங்காலமானால் எங்கள் வீட்டிற்கு வந்து அம்மாவோடு பேசிக்கொண்டிருப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். திருவைக் கல்லில் உளுந்து உடைத்துக் கொடுப்பது, புளி குத்திக்கொடுப்பது என அம்மாவிற்கு ஏதாவது கைவேலை வாங்கிச் செய்வாள். ஏதேனும் விஷேசமான சாப்பாடு செய்திருந்தால் சாப்பிடச் சொல்வாள் அம்மா. எதையாவது சொல்லி ”இன்னொரு நாள் சாப்பிட்டுக்கிறேன்” என மறுத்துவிடுவாள். 

ஊரில் யார் வீட்டிலும் தேவை விஷேசம் என்று சாப்பிடக் கூப்பிடும்போது. மறுக்காமல் போய் சாப்பிடுவாள், ஆனால் மொய் எழுதிவிட்டு வருவாள். ” நீ என்ன தேவ செய்யப்போறேன்னு மொய் வக்கிற, ரொம்பத்தான் பண்ணிக்குவ” என்று அம்மாக்கூட ஒரு முறை சற்று கோபமாய் கேட்டாள் ரத்தினத்திடம். அதற்கு “எப்படிம்மா வெறுங்கைய வீசிட்டு போயி சாப்புட்டு வரது, அது சுத்தப்பட்டு வராதும்மா, அப்படியே பழவிருச்சு ” என்றாள்.

ரத்தினத்தின் இப்படியான பேச்சுகளில் இருந்து ,அவள்  நன்றாக வாழ்ந்த குடும்பத்து பொம்பளை, ஏதோ சண்டையில் வீட்டை விட்டு வந்திருக்கிறாள் என்பது போல சில விஷயங்களை அம்மா கிரகித்து வைத்திருந்தாள்.

ரத்தினத்தம்மா தனது உடம்புக்கு ஏதாவது சின்னதாய் அசௌகரியம் என்றாலும் யாரின் உதவியையும் எதிர்பார்க்காமல் பக்கத்து ஊரில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்று மாத்திரை வாங்கி வைத்துக்கொள்வாள். தன்னுடைய நிலையில் தனது உடல் நலம் எவ்வளவு முக்கியம் என்பதை அவள் நன்கு அறிந்து வைத்திருந்தாள். ஆனாலும் வயோதிகத்துக்கு எந்த மருந்து என்ன செய்யும், வருஷம் கிடுகிடுவென ஓடியதில் அடிக்கடி காய்ச்சல் தலைவலி என்று ஏதாவது அவளைப் படுத்திக்கொண்டே இருந்தது. அதையும் மீறி சமாளித்துக்கொண்டு வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாள். தனது உடல் நலம் சரியில்லை என்று ஊணர்ந்த பின் அடிக்கடி ”இப்படியே நட ஒடயா இருக்கையிலேயெ கொண்டுகிட்டு பொயித்துன்னா தேவலாம்” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

இவள் இங்கிருப்பதை இனியும் காலம் கடத்தாமல் அவளின் சொந்த பந்தங்களுக்கு தகவலாவது சொல்லிவிடலாம் என  நினைத்து  சில நேரங்களில் ஜாடையாக அட்ரஸ் கேட்டும் பார்த்தாள் அம்மா. ”என்னை மீறி முடியாம கெடக்குற மாதிரி நெலம வந்தா நான் போயிக்குறேம்மா, அப்படியே  நான் இங்கனயே செத்தா  நீங்க என்னய தூக்கி போட்ற மாட்டிகளா? ” என்று சிரிப்பாள். 

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் திடிரென்று மயங்கி ரோட்டிலேயே விழுந்து கிடந்தவளை அங்கே இருந்தவர்கள் ,எங்கள் வீட்டிற்கு தூக்கிக்கொண்டு வந்தார்கள்.  “இனி நீ வேலைக்கு போக வேண்டாம் இங்கன சும்மா இரு ஒனக்கு தேவையானத நான் செய்யறேன்” என்று அம்மாதான் ஆறுதலாய்ப் பேசி கவனித்துக் கொண்டாள்.

மூன்று நாட்களில் இயல்பானவள், அம்மாவை அழைத்து நிறைய பேசினாள், “சொத்து பத்துன்னு நான் தேடுனத  விட்டுட்டு இங்கன கெடக்கேன், கேட்கக்கூடாத ஒரு சொல்லு, பொறுக்க முடியல, சொல்லு பொறுக்காத செம்மம்” என்றவள் அம்மாவின் கையை இறுக பற்றி கண்ணில் ஒத்திக்கொண்டு,” ஏம்மா ஒனக்கே ஆராச்சும் இனி ஒக்கார வச்சு கஞ்சி ஊத்துவாகளான்னு நெனைக்கிற வயசு, உன்னைய நான் கஷ்டப்படுத்தலாமா” என்றவள். ”என்னைய மருத பஸ்ல ஏத்தி மட்டும் விட்டுறச் சொல்லு,ஊருக்கு போயிக்கிறேன்,இனியும் எனக்கு என்ன வைராக்கியம் வேண்டி கெடக்கு” என்றாள். நான்தான் அவளை மதுரைக்கு பஸ் ஏற்றிவிட்டேன்.

இதோ இன்று,  ராமேஸ்வரம் கோயிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு, கோயிலுக்கு  வெளியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு சில்லறைக் காசுகளை எடுத்து வரிசையாக போட்டுக்கொண்டு வந்தபோதுதான் வரிசையின் கடைசியில்  எங்கோ வெறித்தபடி உட்கார்ந்திருந்த ரத்தினத்தம்மாவைக் பார்த்து இப்படி அதிர்ச்சியாகி நிற்கிறேன். சிறிது நேரம் அப்படியே நின்றவன் அவளை நோக்கிச் செல்ல எத்தனித்தேன், வேண்டாம் என்பதாய் எனது கையைப் பிடித்த அம்மா, அவசரமாய் வேறுபக்கமாய் இழுத்துச் சென்றாள். 


6 comments:

ஷஹி said...

" ரோஷம் " ? .... நல்லா எழுதி இருக்கீங்க .. காஷுவலா இருக்கு நடை ..இன்னம் கொஞ்சம் புனைவா கொண்டு போயிருக்கலாமோ ?
முடிவு - நீங்க கொடுக்க நினைத்த பாதிப்ப கொடுத்துருச்சு .. மளுக்குனு கண்ல தண்ணி :( ..
கிரா கதை ஒன்னு "காய்ச்ச மரம்"னு அந்த நெனப்பு வந்துடுச்சு .. வாழ்த்துக்கள்

சத்ரியன் said...

சொல் தாங்காத சொரணைமிக்க மனிதர்கள் பற்றி ஊருக்கு நாலு கதை இருக்கவே செய்கிறது. மனதை பிசையும் உருக்கம்.

vasu balaji said...

க்ரிஸ்ப். அந்தம்மா ஏன் எல்லாம் விட்டு வந்துச்சுன்னு *புனையாம* விட்டது அந்த கேரக்டருக்கு செஞ்ச மருவாதி. முடிச்ச விதம் அம்மாவுக்கு செஞ்ச மருவாதி. கிச்சுன்னு இருக்கு. நடை பிரமாதம்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஷஹி.

நன்றி சத்ரியன்,

நன்றி வாசு பாலாஜி.

'பரிவை' சே.குமார் said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு அருமையான கதையோடு இலக்கியன் பக்கம்.... வாழ்த்துக்கள்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி குமார்.