Thursday, November 20, 2008

அவியல்-1

சமீபத்தில் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்தபொழுது, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி.சுமார் 25 லிருந்து 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் பட்டாளமும் அவர்களுடன் சில பெருசுகளும் நான் அமர்ந்திருந்த பகுதியில் அமர்ந்திருந்தனர்."ஏ மச்சான்,மாப்ள" என்று ஒருவருக்கொருவர் ஏக சத்தமாய் பேசிக்கொண்டே வந்தனர்.அவர்களின் பேச்சிலிருந்து நான் கவனித்தவரை அவர்கள் அனைவரும் குருவிகள்.அதில் ஒரு இளைஞர் பணிப்பெண் ஒருவரிடம் எதாவது சாப்பிட இருந்தா கொடுங்க என்று கேட்டார்,அந்த பெண்ணுக்கு புரியாமல் தமிழ் பேசும் மற்றொரு பணிப்பெண்ணை அவரிடத்தில் அனுப்பிவைத்தார்,அந்த பெண்ணும் இவரிடம் ஆங்கிலத்திலேயே கேட்க,நம்ம ஆளு அருகில் அமர்ந்திருந்த அவரின் நண்பரிடம் ,"மாப்ள, பசிக்குதுடா எதாவது இந்த புள்ளைக்கிட்ட கேளுடா ,என்னா பேசுதுன்னே புரியல" என்றதும் ,அந்த பணிப்பெண் சுதாரித்துக்கொண்டு அவரிடம் ,"உங்களுக்கு என்ன சார் வேண்டும்" என்று தமிழில் கேட்டதும், பார்ட்டி ஜெர்க்காகி அசடு வழிஞ்சிகிட்டே,"இத முன்னாடியே கேட்டிருக்கலாமே"என்று தனக்கு வேண்டியதை கூறிவிட்டு அந்த பெண் சென்றதும் "நல்லா கிளப்புறாளுங்கடா பீதிய" என்று வடிவேல் பாணியில் கூற ,அருகில் அமர்ந்திருந்த அனைவரும் சிரித்துவிட்டனர்.

****************************************

90களில் வந்த சில திரைப்பட பாடல்களின் வீடியோவை youtube தளத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.என்னுடைய அறை நணபர்,எப்போதுமே பழைய பாட்டையே கேட்டுகிட்டு இருக்கீங்க,ஏன் புது பாட்டெல்லாம் புடிக்காதா என்று கேட்டார்.அவருக்கு ஒரு சின்ன புன்னகையை மட்டும்தான் பதிலாக தரமுடிந்தது.அது என்னவோ தெரியலீங்க இப்போ வரும் பாட்டுகளிள் தொழில்நுட்ப ரீதியாய் எவ்வளவோ முன்னேற்றம் இருந்தாலும் என்னுடைய பதின்ம வயதில் வெளிவந்த திரைப்பாடல்களை கேட்பதில் ஒரு அலாதி சுகம்,அந்த பாட்டுகளை கேட்கும் பொழுது அந்த பாடலை முதன் முதலாக கேட்டது தொடங்கி அப்போது நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் மனத்திரையில் ஓட ஆரம்பித்துவிடும்.ம்ம் அதெல்லாம் ஒரு காலம்.
(வயசாயிட்டு இருக்குல்ல.....)
****************************************

எனது நட்பு வட்டத்தில் ஒவ்வொருத்தராய் திருமண பந்தத்தில் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். என்னுடன் 12-ம் வகுப்பு படித்த நண்பர் ஒருவரின் திருமணம் சென்ற வாரம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது.கல்லூரி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிடைத்திருக்கிறது,ஆனால் பள்ளி நண்பர்களை ஒரு சிலரைத்தவிர பலரை நான் பள்ளி படிப்பை முடித்த பிறகு சந்திக்கும் வாய்ப்பு அமையவேயில்லை.பத்து ஆண்டுகளுக்கு பிறகு நிறைய நண்பர்களை நண்பரின் திருமணத்தில் சந்தித்தது அருமையான தருணம்.நிறைய பேருக்கு ஒருவரை ஒருவர் அடையாளமே தெரியவில்லை.நண்பர்களில் சிலர் புதுமணத்தம்பதியராயும்,சிலர் குழந்தையோடு தொந்தியும் தொப்பையுமாக வந்திருக்க சில நன்பர்கள் இன்னும் கல்லூரி மாணவர்களுக்கு சவால் விடும் வகையில் அதே 12ம் வகுப்பு தோற்றத்திலேயே இருந்தது ஆச்சர்யம்.அனைவரும் ஒருவருக்கொருவர் கைபேசி எண்ணையும்,மின்னஞ்சல் முகவரியும் பரிமாறிக்கொண்டு ஆனந்த சோகத்தோடு பிரிந்தது நெகிழ்ச்சியான தருணம்.
****************************************

சமீபத்தில் அடுத்தடுத்த நாட்களில் இரண்டு திரைப்படங்கள் காணும் வாய்ப்பு அமைந்தது.முதல் படம் காதலில் விழுந்தேன், நாக்க முக்க புகழால் பார்க்க போனேன். பாட்டெல்லாம் நல்லா இருக்கு அதுவும் தோழியா என் காதலியா மற்றும் உன் தலைமுடி இரண்டு பாடல்களும் நல்ல மெலடிகள்.படம் பார்த்துவிட்டு குணா,காதலில் விழுந்தேன் மாதிரியே இருந்ததை பார்த்து செம்ம கடுப்பா வந்தது.அடுத்தது சக்கரக்கட்டி, இதுவும் டாக்ஸி டாக்ஸி பாடலால் கவர்ந்திழுக்கப்பட்டு போனதுதான்.இந்த படத்தை பற்றி என்ன சொல்றது,நிழலின் அருமை வெயில் தெரியிற மாதிரி முதல் நாள் பார்த்த காதலில் விழுந்தேனோட அருமை இந்த படத்தை பார்த்தபோதுதான் தெரிந்தது.

****************************************

நண்பர் ஒருவர் ,வீடு மற்றும் கடைகளுக்கு மார்பிள்ஸ்,டைல்ஸ் ஒட்டித்தரும் வியாபாரம் செய்து வருகிறார்.அவரிடத்தில் வேலைக்கு இருக்கும் நண்பர்கள் செய்த நகைச்சுவையான சம்பவம் ஒன்றை என்னிடம் பகிர்ந்து கொண்டார்.சில நாட்களுக்கு முன்பு ஒருவரின் வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டுவதற்காக வேலையாட்களிடம் முகவரி கொடுத்து அனுப்பி வைத்திருக்கிறார்.வேலையாட்களும் சரியான விலாசத்திற்கு சென்று வீட்டு உரிமையாளரிடம் எங்கு டைல்ஸ் ஒட்ட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.அதற்கு வீட்டு உரிமையாளர்,இப்படியே நேரா போயி பார்த்தீங்கன்னா கோணி(சாக்கு) இருக்கிற அறை தெரியும் அதில் முதலில் ஒட்டுங்கள் என்றுகூறி வெளியில் சென்று விட்டாராம்.பிறகு எனது நண்பர் வேலை எப்படி நடக்கிறது என்பதை பார்ப்பதற்கு அங்கே சென்று பார்க்கும் பொழுது வேலையாட்கள் எல்லொரும் ஒரு இடத்தில் வேலை செய்யாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.என்னடா என்னாச்சு ஏன் வேலை செய்யாம இப்படி உட்கார்ந்திருக்கீங்க? என்று கேட்டதற்கு,"அட போங்கண்ணே அந்த ஆளு(வீட்டு உரிமையாளர்) கோணி இருக்கிற அறையில் முதலில் ஒட்டச் சொன்னார்.நாங்களும் எல்லா அறையையும் பார்த்துட்டோம் எல்லாமே நேராத்தான் இருக்கு ஒரு அறையும் கோணி(கோணலாக) இல்ல?" என்று சொல்லியிருக்கின்றனர்.இவனுங்கள வச்சுகிட்டு நான் என்னத்த செய்யுறதுன்னு புலம்பினார்.எனக்கு சிரிப்புதான் வந்தது.

4 comments:

கபீஷ் said...

//நிழலின் அருமை வெயில் தெரியிற மாதிரி முதல் நாள் பார்த்த காதலில் விழுந்தேனோட அருமை இந்த படத்தை பார்த்தபோதுதான் தெரிந்தது.
//
ஹா! ஹா!

கபீஷ் said...

//பதின்ம வயதில் வெளிவந்த திரைப்பாடல்களை கேட்பதில் ஒரு அலாதி சுகம்,அந்த பாட்டுகளை கேட்கும் பொழுது அந்த பாடலை முதன் முதலாக கேட்டது தொடங்கி அப்போது நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாய் மனத்திரையில் ஓட ஆரம்பித்துவிடும்//

இது நிஜம்

நாடோடி இலக்கியன் said...

கபீஷ் said...
//நிழலின் அருமை வெயில் தெரியிற மாதிரி முதல் நாள் பார்த்த காதலில் விழுந்தேனோட அருமை இந்த படத்தை பார்த்தபோதுதான் தெரிந்தது.

ஹா! ஹா!//


வாங்க கபீஷ்,
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.இப்போதுதான் பதிவுலக ஜோதியில் ஐக்கியமாகியிருக்கின்றீர்கள்.நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன் உங்களிடமிருந்து.
வாழ்த்துகள் நண்பா.

ராமகிருஷ்ணன் த said...

Thanks

I laughed lot of time