இரு நண்பர்களுக்குள் நடந்த ஏதோ கருத்து மோதலில் கருத்தைத் தாண்டி கருத்துரைப்பவரை விமர்சிக்கும் நம் கலாச்சார வழக்கத்தின்படி ஒருவர் இன்னொருவர் மீது தரக்குறைவான வார்த்தைப் பிரயோகம் செய்திருக்கிறார். இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் கழித்து தவறான வார்த்தை பேசிய நண்பர் மற்றொரு நண்பருக்கு போன் செய்கிறார். கோபத்திலும் வெறுப்பிலும் இருந்த நண்பரோ அட்டெண்ட் செய்யாமல் கட் செய்து கொண்டே இருந்தார். அருகில் இருந்த என்னிடம் அப்போதுதான் நடந்தவற்றைச் சொல்லிவிட்டு ”இனிமேல் அவனுக்கும் எனக்கும் ஒத்துவராது. என்ன பேச்சு பேசிட்டான். இவ்வளவையும் மனசில் வச்சுகிட்டே இவ்வளோ நாளா என்கிட்ட பழகிட்டு இருந்திருக்கான். இப்போ என்ன மயி... போன் பண்றான்” என்று ரொம்ப ஆவேசப்பட்டார்.
கருத்து மோதல் வருகிறபோது எந்தப் புள்ளி தனிமனித தாக்குதலுக்கு இட்டுச் செல்கிறது. நம்மில் அந்யோன்யமான உறவுகளிலிருந்து ஆத்மார்த்தமான நட்புகள் வரை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சிறிதாகவோ பெரிதாகவோ கருத்து வேறுபாடு என்று வருகிறபோது முடிந்த வரை நாம் கூறும் கருத்துக்கான நியாயத்தைச் சொல்கிறோம். முடியாத பட்சத்தில் எதிராளி மீதான கேரக்டர் ஆசாஸினேஷனை கட்டவிழ்த்துவிடுகிறோம். அது நம்மை பலவீனப்படுத்தும் செயல் என்பதை அறிவதில்லை.
பல நாள் இயல்பாய் பேசிச் சிரித்து,ரகசியங்கள் பறிமாறிக்கொண்டு இருக்கும் போது பெரிதாய் தெரியாத இருவரின் தவறுகளும் கருத்து வேறுபாடு என்று வரும்போது அடுத்தவரின் அந்தரங்கத்தை பொதுவில் சொல்லக் கூட தயங்குவதில்லை. நம்பிக்கை துரோகத்தை எளிதாக செய்து விடுவோம் இது மாதிரி சந்தர்ப்பங்களில். நம்மிடம் ரகசியம் பரிமாறிக்கொண்டவனுக்கு எதிராக சூழ்நிலை நம்மை ஆக்கிவிட்டாலும் அவனின் ரகசியத்தைக் கடைசி வரை காப்பதே மனிதத்தின் உச்சம். அதைவிடுத்து அவனை அசிங்கப்படுத்துவதோ, பலி வாங்குவதோ கேவலமான செயல் இதை நம்மில் பலரும் பல சந்தர்பங்களில் யோசிக்காமல் செய்துவிடுகிறோம்.
நண்பருக்கு மீண்டும் மீண்டும் போன்கால் வந்துகொண்டே இருந்தும் அட்டெண்ட் செய்யாமல் இருந்தார்.இப்போ அவரைத் திட்டியவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதை அறிந்து, ”கோபத்தில் வார்த்தைகள் தாறுமாறாய் வெளிப்படுவது இயல்புதாங்க, கோபத்தில் திட்டுகிற வார்த்தைகளுக்கு எப்போதும் அர்த்தம் கற்பித்து கொள்ளக் கூடாது, அது அந்த நேரத்தின் உணர்ச்சியின் வெளிப்பாடு அவ்வளவுதான்,நீங்க சொல்வது போல் இத்தனை நாளும் இவ்வளவையும் மனதில் வைத்துக் கொண்டுதானே பழகியிருக்கான் என்றெல்லாம் யோசிக்காதீங்க, இப்போ அவர் உங்களுக்கு போன் செய்வதிலேயே தெரியலையா அன்று உங்களை திட்டியதெல்லாம் பெரிய குறையாக அவர் பார்ப்பாரானால் இன்று உங்களை அழைக்கவே மாட்டார், எதுவாக இருப்பினும் உங்க நட்பு அவருக்கு வேண்டும் என்பதால்தானே அழைக்கிறார், அவர் தனது தவறை உணர்ந்திருப்பார் தயவு செய்து பேசுங்க” என்றேன்.
உடன் பழகுபவர்களிடத்து அவ்வப்போது சில மைனஸ்களை அல்லது நமக்குப் பிடிக்காத விஷயங்களைக் காண்போம்.அதே போன்று மற்றவர்களும் நம்மீதும் காண்பது இயல்பு.இருப்பினும் அதை மென்மையா சுட்டிக்காட்டியோ அல்லது பெரிய விஷயமாகக் கருதாமலோ நட்பைத் தொடர்வோம் காரணம் மைனஸ்களைத் தாண்டிய பிளஸ்கள் அவரிடத்தில் இருக்கும். இப்படி கண்டும் காணாமல் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களைத்தான் கருத்து வேறுபாடு என்று வரும்போது எதிராளியை பலவீனப்படுத்த ஆயுதமாய் பெரிது படுத்துகிறோம். அப்படி பெரிது படுத்தி மனக்கஷ்டத்தைக் கொடுப்பதில் கிடைக்கும் திருப்தி எத்தனை வக்கிரமானது என்பதை அறிவதே இல்லை நம்மில் பலரும். அறிமுகமில்லாதவர்கள் பேசும் கடுமையான வார்த்தைகளை விட பழகியவர்கள் பேசும் சாதாரண வார்த்தைகளும் தீவிர வலியைக் கொடுப்பதற்குக் காரணம் இடையில் இருந்த அன்பு, நம்பிக்கை ஆகியவை கேள்விக்குறியாகும்போதுதான்.
இங்கே இன்னொரு விஷயம் கோபத்தில் வார்த்தைகளை வீசிவிட்ட அந்த நண்பர் இவரிடம் மன்னிப்பு கேட்கலாம், இவரும் மன்னிக்கலாம். ஆனாலும் உதிர்த்துவிட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் அவரை எந்த அளவிற்கு வாட்டியிருக்கும். இது போன்ற சூழலில் முடிந்த வரை நாவடக்குவது நல்லது. நட்பிற்குள் கருத்து வேறுபாடு வருகிறதா உங்களின் கருத்தை ஆழமாகச் சொல்லுங்கள், புரிய வைக்க இயலாத பட்சத்தில் அமைதியாகிவிடுங்கள் அல்லது அவ்விடத்தைவிட்டு அகன்றுவிடுவது சிறப்பு.
13 comments:
//பல நாள் இயல்பாய் பேசிச் சிரித்து,ரகசியங்கள் பறிமாறிக்கொண்டு இருக்கும் போது பெரிதாய் தெரியாத இருவரின் தவறுகளும் கருத்து வேறுபாடு என்று வரும்போது அடுத்தவரின் அந்தரங்கத்தை பொதுவில் சொல்லக் கூட தயங்குவதில்லை. //
உண்மைதான்.
வலையுலகில் இந்த போக்கு மிகுதி.
முதிர்சியற்றவர்களாக பிறரைத் தூற்றும் போதே நாம ஒதுங்கிவிட வேண்டும், ஏனெனில் அது நாளை நமக்கும் நடக்கும் என்பது என் அனுபவ உண்மை. இருந்தாலும் பதிவர்கள் நண்பர்களிடம் உள்ளார்ந்த நட்பு பாராட்டுபவர்கள் யார் யார் என்பது சில காலம் பழகுவதில் தெரிந்துவிடும்.
மிகச் சிறப்பான பதிவு. நானும் பல கணங்களில் வார்த்தைகளை வீசிவிட்டு பின்னர் வருந்தியிருக்கிறேன்.
சிந்தனையைக் கிளறும் இடுகை பாரி...
கோபத்தை ஒவ்வொரு முறையும் பரிசீலனை செய்ய இந்த இடுகை உதவும்...
சிறந்த பதிவு. :)
சரியாகச் சொன்னீர்கள் பாரி.......
நான் பலமுறை சிந்தித்ததுண்டு.
"ரொளத்திரம் பழகுதல்" கடினம தான்.
சூப்பரப்பு.. :)
சிங்கை போனாலும் போனிங்க.. மொத கமெண்ட் பாருங்க யார்கிட்ட வருதுன்னு :)
நன்றி கோவி.கண்ணன்,(நானெல்லாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கு நண்பரே).
நன்றி நாகா.
நன்றி கதிர்.
நன்றி ஸ்ரீமதி.
நன்றி ஆருரன்.
கோபத்துல தான் வார்த்தைகளை அதிக கவனமுடன் பேச வேண்டும்ணு படித்திருக்கிறேன்.
கோபத்துல அமைதியா இருக்கிறது நல்லது.
சிறப்பான இடுகை நாடோடி இலக்கியன்
நன்றி சஞ்சய்,(அவரை நேரிலும் சந்தித்துவிட்டேன் நண்பா).
நன்றி நாஞ்சில் நாதம்.
நல்லதொரு பதிவு நண்பரே...
‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
நன்றி தமிழ்ப் பறவை.
உதிர்ந்துவிட்ட வார்த்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல்..... உண்ர்ந்து சொல்லியிருகிற்ர்கள். இல்க்கியன்...
நன்றி வாத்துக்கோழி.
Post a Comment