Sunday, December 20, 2009

சூழ்நிலைக் கைதிகள்..

”சூழ்நிலை அமையாத வரை எல்லோரும் நல்லவர்களே” என்பது எத்தனை சத்தியமான உண்மை. இதற்கு எழுத்தாளர் திரு எஸ்.ரா அவர்கள் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் சொன்ன இரண்டு விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.
சம்பவம் 1:
ஒரு சிறிய நகரத்தின் நகைக்கடை ஒன்றில் தனது இருபதாவது வயதிலிருந்தே கணக்குப் பிள்ளையாக வேலை செய்யும் வயது ஐம்பதைக் கடந்துவிட்ட நேர்மையான ஒரு மனிதர். அவரின் முதலாளி கணக்குப் பிள்ளையின் மீது இருக்கும் நம்பிக்கையில் பெரும்பாலும் கடைக்கு வருவதில்லை, பொறுப்பையுணர்ந்த கணக்குப் பிள்ளையும் முதலாளியின் மீது அளவு கடந்த விசுவாசத்தோடு இருந்தார். ஒரு நாள் முதலாளி தனக்கு வயதாகிவிட்டதாலும், கடையில் பெரிதாய் வருமானம் வராததாலும் நகைக்கடையை மூடிவிட முடிவு செய்து கணக்கப் பிள்ளைக்கு சேர வேண்டிய சம்பளத்தொகையையும் மேற்கொண்டு கொஞ்சம் பணமும் கொடுத்து, ”நாளையிலிருந்து வேலைக்கு வரவேண்டாம்,வேறு வேலை தேடிக்கொள்” என்கிறார்.

கணக்குப் பிள்ளை,”இந்த வயதில் என்னை எங்கே புதிதாய் வேலைக்குச் சேர்ப்பார்கள்” என்று ஆரம்பித்து, ”திருமணத்திற்கு காத்திருக்கும் மகள் மற்றும் குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன்” என முதலாளியிடம் தொடர்ந்து கடையை நடத்துமாறு கெஞ்சிக் கேட்கிறார். முதலாளிக்கும் கணக்குப் பிள்ளையின் நிலை புரிந்தாலும் லாபமில்லாத கடையை இனிமேலும் நடத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைச் சொல்லிவிட்டு கைவிரித்து விடுகிறார்.

வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சாவியை முதலாளி வீட்டிற்கு கொடுக்க போகும்போது தன் மகளின் திருமணச் செலவுகளை நினைத்து பயம்கொண்ட கணக்குப்பிள்ளைக்கு அன்று வசூலான பணத்தையும்,நகையில் கொஞ்சமும் எடுத்தால் என்ன என்ற எண்ணம் வருகிறது.பெரிய மனப் போராட்டத்திற்கு ஆளாகிறார்.

சம்பவம் 2:
சின்ன வயதிலிருந்தே தன்னை வளர்த்த தனது அண்ணன் குடும்பம்தான் எல்லாமே என்று திருமணமே வேண்டாம் என்று இருக்கும் தம்பி தன் மொத்த வருமானத்தையும் அண்ணன் குடும்பத்திற்கே கொடுக்கிறான். அண்ணன் எவ்வளவோ வற்புறுத்தியும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறான்.

ஒரு நாள் அண்ணன் வீட்டில் இல்லாத போது சமையலறையில் தண்ணீர் குடிக்கச் செல்லும் தம்பி சமைத்துக்கொண்டிருக்கும் அண்ணியின் விலகிய முந்தானையைப் பார்த்து சபலம் கொண்டு வெறித்துப் பார்க்கிறான்.பிறகு தனது சம்பாத்தியத்தின் கீழ் இருப்பவர்கள்தானே தொட்டால் என்ன என்கிற எண்ணம் வர கையைப் பிடிக்கிறான் மிரண்டுபோய் செய்வறியாது நிற்கும் அண்ணியின் முகத்தைப் பார்த்து சுதாரித்து கையை விடுவித்துவிட்டு தனது அறைக்கு திரும்பி விடுகிறான்.

விஷயம் அறிந்துகொள்கிற அண்ணன் ஒரு பெரிய தொகை மற்றும் தம்பி பெயரிலான பேங்க் பாஸ்புக் ஆகியவற்றைக் கொடுத்துவிட்டு,”தயவு செய்து வேறு எங்கேயாவது தங்கிக்கொள்” என்கிறான். அண்ணனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் தம்பியை ஆறுதலாய் பிடித்துக்கொள்ளும் அண்ணன் சொல்கிறான்,”இதுக்குதான்டா கல்யாணம் பண்ணிக்கோன்னு சொன்னேன் ” என்று கூறிவிட்டு மேலும் “இது உனக்கும் எனக்குமான பிரச்சனை இல்லை உலகத்துப் பிரச்சனையே இதுதான்டா” என்கிறான்.

சம்பவம் ஒன்றில் தனது வாழ்நாளின் பெரும்பான்மையை நேர்மையாக கடந்துவிட்ட ஒரு மனிதரை தனது நேர்மைக்கு எதிரான எண்ணத்தை அவரிடம் விதைத்தது எது? அவர் அந்த பணத்தை களவாடியிருப்பின் அதுநாள் வரை அவரின் மேலிருந்த நல்லவர் பிம்பத்தை எத்தனை எளிதாக கேலி செய்து அசிங்கப்படுத்திவிடும் சமூகம்.

சம்பவம் இரண்டில் தன்னைச் சார்ந்து இருக்கும் மனிதர்களையும் தனது உடமைகளைப் போல் எண்ணுகிற மனோபாவம் வந்துவிடுகிறது. மேலும் அந்தப் பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சிக்கும்போது அவள் மிரண்டு நின்றாலும் எதிர்ப்பை தெரிவிக்காமல் செய்வதறியாது நிற்க வைத்தது எது?

அந்த கணக்குப் பிள்ளையும் சரி,தம்பியும் சரி தான் இப்படி நடந்து கொள்வோம் என்பதை அப்படியொரு சூழ்நிலை அமையும் வரை கற்பனையில் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

நாம் எல்லோருமே தவறுகள் செய்யும்போது அதற்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொண்டு நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிப்போம். அதே மற்றவர்களுக்கென்று வரும்போது அவர்களை நிராகரிப்பது, கார்னர் செய்து ஆளாளுக்கு நீதிமான்களாகி தண்டனை கொடுப்பது போன்றதைச் செய்வோம்.

தவறு செய்வது எல்லோருக்கும் பொதுவான இயல்பு என்பதையும், நாம் அனைவருமே தண்ணீரைப் போன்றவர்கள் சூழ்நிலை என்னும் பாத்திரம் மட்டுமே நமது வடிவத்தை தீர்மானிக்கும் சக்தி என்பதை அறிந்தும் அடுத்தவரின் சூழ்நிலைகளை புரிந்துகொண்டு சக மனிதர்களை நேசிப்போம்.

டிஸ்கி: அடிப்பதற்கும்,கொலை செய்வதற்கும் கூட ஏதோ சூழ்நிலையிருக்கும் என்றெல்லாம் கேட்க மாட்டீங்க தானே. :)))))

14 comments:

ஆரூரன் விசுவநாதன் said...

மிக அழகாகச் சொன்னீர்கள்......

அடிப்படையில் எல்லா மனிதனும் நல்லவனே......

அவன் சூழல், அவனை மோசமானவனாக ஆக்கிவிடுகிறது.

உன்னைச்சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லிக் குற்றமில்லை
காலம் செய்த கோலமடி, ........
என்ற வரிகள் நினைவுக்கு வருகின்றன

அன்புடன்
ஆரூரன்

பூங்குன்றன்.வே said...

//நாம் எல்லோருமே தவறுகள் செய்தாலும் அதற்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக் கொண்டு நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறோம். //

உண்மையான வார்த்தைகள் இவை.நாம் எல்லோரும் அப்படிதான் இருக்கோம்.நல்ல கட்டுரை நண்பா.

வெயிலான் said...

ஏற்கனவே விவாதித்த விசயங்கள்.

ரோஸ்விக் said...

நல்ல கட்டுரை தல.
ஒவ்வொரு மனிதனும் சூழ்நிலை கைதிகள் தான். இது போன்ற சம்பவங்கள் பல சமயங்களில் விரும்பாமலே நடந்துவிடும்.

aazhimazhai said...

ஆமாம் நீங்க சொல்றது உண்மைதான் !!!! நல்லா எழுதி இருக்கீங்க !!!!

PPattian : புபட்டியன் said...

அடிப்பதற்கும்,கொலை செய்வதற்கும் கூட ஏதோ சூழ்நிலையிருக்கும் right?? :)

" உழவன் " " Uzhavan " said...

 ஒயுன்ஷாப் இல்லாத ஊரில் இருந்துகொண்டு, ஒருவன் குடிக்காமல் இருப்பதற்கும், ஒயின்ஷாப்பில் வேலை பார்ப்பவன் குடிக்காமால் இருப்பதற்கும் நல்ல வேறுபாடு உள்ளது.
நல்ல கட்டுரை

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆருரன் விசுநாதன்.(ஆமாம் சார்,மிகப் அற்புதமான வரிகளைக் கொண்ட பாட்டு அது).

நன்றி பூங்குன்றன்.வே.

நன்றி வெயிலான்.(அன்று ஈரோடு சென்றதை மறக்கவே முடியாது வெயிலான்,அடுத்த முறை அம்பாசமுத்திரம் பகுதி அணைக்கட்டுகளுக்கு ஒரு டூர் அரேஞ்ச் பண்ணுங்க நண்பா)

நன்றி ரோஸ்விக்.(ஆமாம் நண்பா சூழ்நிலை விரும்பாத நிகழ்வுகளிலும் நம்மை பகடைக்காயாக்கி சூதாடிவிடும்).

நன்றி ஆழிமழை.

நன்றி புபட்டியான்.(அதுக்குத்தான் எந்த சூழ்நிலையாயிருப்பினும் சக மனிதனை அடித்துத் துன்புறுத்ததக் கூடாது என்று பலரும் சூழ்நிலை என்னும் சொல்லையும் சேர்த்துக் கொள்வது)

நன்றி உழவன்(மொத்த பதிவின் சாராம்சத்தையும் இரண்டே வரிகளில் சொல்லிவிட்டீர்கள் நண்பரே)

தமிழ்ப்பறவை said...

நல்ல கட்டுரை தல...

நாடோடி இலக்கியன் said...

நன்றி தமிழ்ப்பறவை.

ஸ்ரீமதி said...

நன்று :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி.

சே.குமார் said...

நல்லா எழுதி இருக்கீங்க

நாடோடி இலக்கியன் said...

நன்றி சே.குமார்.