Monday, December 14, 2009

தமாஷ் தாத்தா

கிராமங்களில் சில வேடிக்கையான குணாதிசயங்களைக்கொண்ட மனிதர்களைக் காணலாம்.அப்படி ஒரு வேடிக்கையான தாத்தாவின் சாகசங்கள் இங்கே.

ஒரு தடவை கடலை விதைப்பின்போது ஏர் ஓட்டிக்கொண்டிருந்த தாத்தாவின் அண்ணன், விதைத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம் நெருக்கமா விதைக்கும்படி சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.தாத்தாவும் அண்ணன் சொல் தட்டாமல் தன்னால் முடிந்தவரை நெருக்கமாக விதைகளை விதைத்தும், பெரியவருக்குத் திருப்தியில்லாமல் மீண்டும் மீண்டும் ”இன்னும் கிட்ட கிட்ட போடுடா,அப்பத்தான் நல்லா நெருக்க மொளைக்கும்” என்றபடியே தனது சீனியாரிட்டியைக் காட்டிக்கொண்டே இருக்க கடுப்பான தாத்தா, மண்வெட்டியால் வேக வேகமாக ஒரு குழியைத் தோண்டி கூடையில் வைத்திருந்த மொத்த விதையையும் அதிலே கொட்டிவிட்டு “வெதச்சாச்சு, நல்லா நெருக்க மொளைக்கும்” என்ற சொல்லிவிட்டு விடு விடுவென்று வீட்டை நோக்கி நடந்திருக்கிறார்.

====================
தாத்தா, ஊரின் நாட்டாமைக்காரர்களில் ஒருவர்.அது திருவிழா சமயம் கோயிலுக்கு வாங்க வேண்டிய பொருட்களை எழுதி வைப்பதற்காக,ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த தனது பேரனை அழைக்க, பேரனும் பேப்பர் பேனா சகிதம் வர, ”பூ,பழம் என்று ஒவ்வொன்றாய் நான் சொல்லச் சொல்ல எழுதிக்கொண்டே வா” என்றுவிட்டு முதலில் ”பூ” என்று சொல்லியிருக்கிறார். பேரனும் ’பூ’ என்று எழுதிவிட்டு ”அப்புறம்” என்க. ”அதுக்குள்ள எழுதிட்டியா” என்றபடியே பேப்பரைப் பார்த்த தாத்தா ஒரே ஒரு எழுத்து மட்டும் இருந்ததைக் கண்டு செம்ம கடுப்பாகி “இதான் உங்க வாத்தி சொல்லிக்கொடுத்ததா” என்று பேரனின் காதைத் திருகியபடியே உள்ளூரில் இருக்கும் வாத்தியார் வீட்டிற்கே இழுத்துச் சென்று, ”யோவ் வாத்தி என்னய்யா பாடம் சொல்லிக் கொடுக்குற” என்று கூறிவிட்டு நடந்தவற்றைச் சொல்ல, வாத்தியாரும் ”அவன் சரியாத்தான் எழுதியிருக்கான்” என்றதும், ”என்னய்யா கோயிலுக்கு பூ வாங்குறது உங்களுக்கு பொசுக்குன்னு ஒத்த எழுத்துல எழுதுற விசியமா போச்சா, உங்கிட்ட படிச்சு இவன் உருப்பட்ட மாதிரிதான்” என்று வாத்தியாரையும் திட்டியபடியே பேரனை அழைத்துச் சென்றார்.

======================
அப்போதெல்லாம் கிராமங்களில் முடிவெட்டும் தொழிலாளர்களுக்கு கூலியாய் வருடத்திற்கு இவ்வளவு என்று நெல் கொடுப்பதுதான் வழக்கம். எங்க ஊரின் முடிவெட்டும் கடை வைத்திருப்பவர் சரியான நக்கல் பேர்வழி. யாரையும் எளிதாய் நக்கலடிப்பார். ஒரு முறை தாத்தா முடி வெட்டிக் கொண்டிருந்தபோது முதல் நாளின் மொச்சைப் பயிர் வேலை செய்ய காற்று சற்று சத்தமாகவே பிரிந்துவிட,”ஐயையோ,இவன் சும்மாவே நக்கலடிப்பான், இதை வைத்து மானத்தை வாங்கிட போறான்” என்று பயந்த தாத்தா பேச்சை மாற்றும் விதமாக ”என்னடா ராமா, கூலியெல்லாம் ஒழுங்கா கொடுக்குறாய்ங்களா?” என்றதும்,அமைதியாய் முடிவெட்டிக்கொண்டிருந்த ராமனோ ரொம்பவும் கேஷுவலாக, ”ப்ச் என்னத்த, கொடுத்தவுக கொடுத்தவுகதான் உங்கள மாதிரி கு-வுனவுக கு-வுனவுகதான்” என்று தாத்தாவை டரியலாக்க, முடிவெட்டக் காத்திருந்த மற்றவர்கள் அடக்க மாட்டாமல் சிரிக்க,ஷேவ் பண்ணிக்கொள்ளாமல் தெறித்து ஓடிவந்திருக்கிறார் தமாஷ் தாத்தா.

==================

கடும் காய்ச்சலால் அவதியுற்ற தாத்தாவை முதன் முறையாக லோக்கல் டாக்டரிடம்(RMPH என்று ஏதோ ஒரு படிப்பு படித்தவர். பரம்பரைத் தொழிலாக வாரிசுகளும் இப்போது டாக்டர்ஸ்) அழைத்துச் சென்றார்கள். ஊசி என்றாலே பயப்படும் தாத்தா,மருத்துவரை அனுகுவதே இல்லை.இந்த முறை வேறுவழியின்றி உயிர்பயம்கொண்டு வந்துவிட்டார். டாக்டரின் அறைக்குள் சென்ற பெரியவரை அங்கிருந்த குஷன் சேரில் அமரச் சொன்னதும், அதுவரை அப்படியான சேரில் அமர்ந்திராத தாத்தா மிகவும் பயந்து சீட்டின் நுனியில் பட்டும் படாமலும் உட்கார, டாக்டர் அதிவேக செக் அப் செய்துவிட்டு, ஒன்றும் பயப்பட வேண்டாம்,இந்த மாத்திரைகளை சாப்பிட்டா ரெண்டு நாளில் சரியாகிடும்” என்றபடியே பிரிஸ்கிரிப்ஷனை கொடுத்துவிட்டு, ஃபீஸ் இருபது ரூபாய் கேட்க,அவ்வளவு பெரிய தொகையை ஃபீஸாக எதிர்பார்த்திராத தாத்தா, ”ஏன் டாக்டர்,வந்த உடனே உக்காரச் சொன்ன, கையபுடிச்சுப் பாத்த,சீட்டுல என்னமோ கிறுக்குன, இதுக்குபோயி இருபது ரூவாயா?, இப்படி பட்டும் படாமலும் உக்காந்ததுக்கே இருபது ரூவாய்னா கொஞ்சம் அழுத்தி உக்காந்தா அம்பது ரூவா கேப்ப போலிருக்கே?,படிக்காத பயன்னு ஏமாத்த பாக்குறியா” என்று கலாட்டா செய்ய ஃபீஸே வேண்டாம் என்று டரியலானார் டாக்டர்.

இவரைப் பற்றி இன்னும் சில ரகளையான நினைவுகள் உண்டு. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்

18 comments:

ஈரோடு கதிர் said...

தாத்தா சர்தார்ஜி ஜோக்ல வர்ற மாதிரியே பண்ணுவார் போல

vasu balaji said...

அலப்பறையான தாத்தா போல இருக்கே=))

நையாண்டி நைனா said...

ha...haa...haa....
ROFTL

thiyaa said...

ஹி..ஹி...

உங்கள் தோழி கிருத்திகா said...

தாத்தா சூப்பர் தாத்தா போல :)

Thamira said...

அட்டகாசம், பூ கதைக்கு இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

ஆனால் இவை ஒரு செவி வழி கதைகளுக்குரிய அம்சங்களோடு இருக்கின்றன. மரியாதையா சொல்லுங்க.. இது யாரோ சொன்னது அல்லது எங்கோ படித்தது. கரெக்டா?

ப்ரியமுடன் வசந்த் said...

தாத்தா அட்டகாசம்

பூவும் குவும் படிச்சுட்டு இன்னும் சிரிச்சுட்டு இருக்கேன்...

அப்பாவி முரு said...

அருமை, புது வரிசையை புடிச்சுட்டீங்க... பட்டைய கிளப்புங்க.

பிரபாகர் said...

தாத்தா என்றாலே ஒரு குதூகலம்தான்... நிறைய நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க...

பிரபாகர்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி கதிர்.

நன்றி வானம்பாடிகள்.(சிங்குலரில் சொல்லியிருந்தாலும் பல தாத்தாக்களின் சேட்டைகள் இவை).

நன்றி நையாண்டி நைனா.

நன்றி தியாவின் பேனா.

நன்றி கிருத்திகா.

நன்றி ஆதிமூலகிருஷ்ணன்.(எல்லாமே எங்க ஊர் பழம் பெருசுகளின் கதை,சில எனக்குத் தெரிந்து நடந்தவை, சில நிகழ்வுகள் எனது அப்பா சொல்லக் கேட்டது.இப்போ இன்னொரு நிகழ்வையும் சேர்த்திருக்கேன் பாருங்க).

நன்றி பிரியமுடன்...வசந்த் .

நன்றி அப்பாவி முரு.

நன்றி பிரபாகர்.

Unknown said...

:)))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி.

thamizhparavai said...

அட்டகாசம்.. பதிவும் தாத்தாக்களும்...

நாடோடி இலக்கியன் said...

நன்றி தமிழ்ப்பறவை.(ஆணி அதிகமோ?).

'பரிவை' சே.குமார் said...

”ப்ச் என்னத்த, கொடுத்தவுக கொடுத்தவுகதான் உங்கள மாதிரி கு-வுனவுக கு-வுனவுகதான்”


தாத்தாவின் குறும்புகள் ரசிக்க வைத்தன. குறிப்பாக மேலே உள்ள வரிகள் என்னை மறந்து சிரிக்க வைத்தன.

அருமையான எழுத்து. வாழ்த்துக்கள்

நாடோடி இலக்கியன் said...

நன்றி சே.குமார்.

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.... செம ரகளை தான்.
பூ மேட்டர் சூப்பர்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி விக்னேஷ்வரி