Thursday, December 17, 2009

கீதாரி மவ

ஆடுக அய்யங்கோயில் இலுப்பமர நெழலுல அடைக்கலமாகியிருந்த சித்திரையின் உச்சி வெயில் நேரம். இலுப்ப வேர்ல துண்ட சுருட்டி தலமாட்டுக்கு வச்சபடி” வைகாசி மாசத்துல பந்தல் ஒன்னு போட்டு ரெண்டு வாழமரம் கட்டப் போறேண்டி”ன்னு பாடியபடியே ஆடுகளோட ஆடா படுத்திருந்த பாண்டி எப்போதுமே இப்படித்தான் எதாச்சும் பாடிக்கிட்டே இருப்பான்.

கத்தரி சித்திரைங்கிறதால வெயில்ல மேஞ்ச ஆடுக சில படுத்துக்கிட்டு ’கர்ர்ர்..புர்ர்ர்’ ன்னு மூச்சிறைச்சபடியும்,சில நின்ன வாக்குல கண்கள மூடிகிட்டு வேகமாக அசைபோட்டபடியும், கொட அடங்காத ஒன்னு ரெண்டு ஆடுக நெழல்ல நின்னபடியே மேஞ்சிகிட்டும் இருந்துச்சுக. ஆடுகள நெழலுல பத்திவிட்ட பிறகு மத்தியானத்துல எப்போதும் ஒரு குட்டித் தூக்கம் போட்டுருவான் பாண்டி. ஆனா இன்னைக்கி தூங்காம அவன் பாடுறதுல விசியமிருக்கு, நெசமாவே வைகாசியில மாம மவ சோதிமணிய கல்யாணம் பண்ணிக்கப் போறான்ல அந்த சந்தோசம்தான்.

”கீதாரி குட்டி அய்யரூட்டு பொண்ணுக மாதிரில்ல இருக்கா” ன்னு ஊருக்குள்ள பேசிக்குற அளவுக்கு சோதிமணி நல்ல செவப்பு,பாண்டியோ அய்யனாரு சிலைக்கு பக்கத்துல கொஞ்ச நேரம் நின்னான்னா அவனுக்கு தேங்கா ஒடச்சு கற்பூரம் காட்டிட்டு போயிருவாய்ங்க.

பாண்டியின் மாமன் சின்னச்சாமி கீதாரிக்கு, சொந்த ஊர் ராமநாதபுரம் பக்கம், பாண்டிக்கும் அங்கிட்டுதான். ஒவ்வொரு வருசமும் மாசி கடைசிக்கு வந்து ஆடி மாசம் ஆத்துல தண்னி வர்ற வரைக்கும் இங்கே தங்கி வயக்காடுகளுக்கு கெட வைக்கிறதுதான் பொழப்பு. ஒத்த புள்ளயும் பொட்டப்புள்ளயாப் போனதால தன் தங்கச்சி மவன் பாண்டிய ஆடுமேய்க்க தொணைக்கு வச்சிருக்கான்.

ஊர் நாட்டாம வீட்டின் கொல்லைபுறத்துலதான் கீதாரி குடும்பம் டேரா போடுவது வழக்கம். சின்னச்சாமியின் அப்பன் காலத்துலருந்தே அங்கதான் தங்குறதால நாட்டாமைக் குடும்பத்தோடு ரொம்ப நெருக்கம்.

சின்னச்சாமிக்கும் நாட்டாமை மாரியப்பனுக்கும் சின்ன வயசிலிருந்தே நல்ல நட்பு. மாரியப்பனுக்கு பக்கத்து ஊர் பேங்குக்கு போறதலருந்து எந்த வேலையாக இருந்தாலும் சைக்கிள்தான்.ஆனால் ஒரு ட்ரைவர் வச்சிகிட்டுதான் போவார். இவ்வளவுக்கும் நாட்டாமையின் மகன் பஜாஜ் பல்சர் வைத்திருக்கிறான். ஆனால் அதில் அமர்ந்து செல்ல பயந்து `சே சே இந்தப் பழம் புளிக்கும்` என்பதாய் ஏறவே மாட்டார்.

சின்னச்சாமி இங்கே இருக்கிற இந்த ஆறுமாசமும் நாட்டாமைக்கு ட்ரைவர் வேலைப் பார்க்க வேண்டியிருக்கும். சின்னச்சாமியும் விரும்பியே செய்வான். இருவரும் சின்ன வயது கதைகள சத்தமா பேசிக்கிட்டே மெதுவாக சைக்கிளில் போறத பாத்து,”ரெண்டும் கிளம்பிருச்சுடா”ன்னு சொல்லி நக்கலா சிரிப்பாய்ங்க இளந்தாரிக.


சின்னச்சாமி வேலை விசயமா வெளியில போறப்பவெல்லாம் சோதிமணிதான் பாண்டிக்குத் தொணையா ஆடுமேய்க்க போவா. சின்னச்சாமியோட பொண்டாட்டி ரஞ்சிதத்துக்கு மகளை வயசு பயலோடு ஆடு மேய்க்க அனுப்புவதில் உடன்பாடு இல்லைனாலும் அடிக்கடி நோவுல படுத்துக்குற அவளால வேற ஒன்னுஞ் சொல்லமுடியாம இருந்துட்டா. என்னதான் கல்யாணம் பண்ணிக்க போறவந்தான்னாலும் அதுக்கு முந்தி ஏதாவது எசகுபெசகாயிருச்சுன்னா அசிங்கமா போயிருமேங்கிற பயம் அவளுக்கு.

சோதிமணி,ஆடுமேய்க்க வர்றப்பயெல்லாம் பாண்டிய பாடச் சொல்லி கேட்டுகிட்டே இருப்பா. அந்த மாதிரி நேரத்துல தொறட்டிக்கம்ப பொறடில வச்சு கம்பின் நீட்டிக்கிட்டிருக்குற ரெண்டுபக்கட்டும் கைகள போட்டபடி ரொம்ப லயிச்சு பாடுவான். தினமும் நாட்டாமைக்கு வெளியூர் போற வேலை இருந்துகிட்டே இருக்கணும்னு மனசுக்குள் நெனச்சுக்குவான் பாண்டி.

”கிட்ட வராதய்யா ஒரே மொச்ச நாத்தம்”

”உங்கப்ப மேலுல செண்டு வாசம் அடிக்குமா?”

”ம்ம் என்ன இருந்தாலும் அது எங்க அப்பா”

”அவரு ஓ அப்பன்னா, நான் ஒம்...” நிறுத்திவிட்டுச் சிரிப்பான்.

”சீ ரொம்பதான்” .

என்னைக்கிருந்தாலும் தனக்கு பொண்டாட்டியா வரப்போறவதானேன்னு அப்பப்போ சோதிமணிகிட்ட ஏதாவது சில்மிஷம் பண்ணிக்கிட்டே இருப்பான். அப்பயெல்லாம் இப்படித்தான் கழுவுற மீனுல நழுவுற மீனா பேசுவா.

நாட்டாமையோட சின்னச்சாமி வெளியில் போயிருந்த ஒரு நாளுலதான் ஆடு மேய்க்க போன சோதிமணி மத்தியானத்தோட வீட்டுக்குத் திரும்பி சோந்து படுத்துக்கெடந்தா.

எங்கேயோ வெளியில போயிட்டு வந்த ரஞ்சிதம் சோதிமணிய பாத்துட்டு,

“ஏண்டி வந்திட்ட”

“தலய வலிக்குது,கொஞ்சம் சும்மா இருக்கியா”

“என்னத்துக்குடி இப்படி சடத்துக்குற” என்னு சொல்லிட்டு அடுப்பு பத்த வைக்க போகும்போது ’உவ்வே’ குடிசைக்குள்ளேயே வாந்தி எடுத்துவிட்டாள் சோதிமணி.

“என்னடி பண்ணுது”ன்னு பதறுன ரஞ்சிதத்தின் கேள்விக்கு எதுவுஞ்சொல்லாம சுருட்டிக்கிட்டு படுத்த மகளை கொஞ்ச நேரம் பாத்துகிட்டிருந்துட்டு,

“தலைக்கி குளிச்சு எத்தன நாளாச்சு”

“ ”
“சொல்லுடி”

“ ”

“கொழுப்பெடுத்த முண்ட,ஆடு மேய்க்க போறதுன்னா குதிச்சுகிட்டு கெளம்பயலயே தெரியுண்டி” ன்னு சொல்லிகிட்டே கையில் வைத்திருந்த ஈயக் குண்டானால மூஞ்சியிலேயே இடிச்சா. தாவணியால் போத்திகிட்டு விசும்பிக்கிட்டிருந்த மகளைப் பாத்து தானும் சோந்து போய் உக்காந்துட்டா.

விசயத்த சின்னச்சாமிகிட்ட சொன்னப்பவும் என்னைக்கு இருந்தாலும் நடக்குறதுதானேங்கிற மாதிரி அவனும் பெருசா அலட்டிக்கல.ஆனாலும் இப்படியொரு விசயத்தை சின்னச்சாமியும் சரி, அவன் பொண்டாட்டியும் சரி யாரிடமும் காட்டிக்கல. பாண்டிகிட்டயும் கூட. ஒருவேள சோதிமணி பாண்டிகிட்ட சொல்லியிருந்தா அவனோட சேத்து நாலு பேருக்குத்தான் தெரியும்.

ரெண்டு வருஷம் கழிச்சு நடக்க இருந்த கல்யாணம் அவசர அவசரமாக முடிவானது இதுனாலதான்.

ஊருக்குப்போயி கூடி பண்ற மாதிரியான சூழல் இல்லாததால் கல்யாணத்த இங்கயே கோயில்ல வச்சிக்கலாம்னு முடிவுபண்ணி, நெருங்கிய சொந்தக்காரங்களுக்கு மட்டும் தகவல் சொல்லிவிட்டாச்சு.

கல்யாணத்துக்கு மொத நாளு சாயங்காலத்திலிருந்து கீதாரி வீட்டுக்கு சொந்த பந்தங்கள் வர ஒவ்வொருத்தரையும் பாண்டிதான் பஸ்ஸ்டாண்டிலிருந்து நாட்டாமை வீட்டு பல்சரில் அழைச்சுட்டு வந்துகிட்டிருந்தான்.

பெரிய பெரிய தண்டட்டியோடு கெண்டைக்கால் தெரிய சேலைகட்டி வந்திறங்கிய கீதாரியின் சொந்த பந்தங்களை விசித்திரமாய் பாத்த உள்ளூர் சனம், கீதாரிக் குட்டியின் கல்யாணத்துல நடக்குற சடங்குகள பாக்க ஆவலா இருந்துச்சு.

நாட்டாமை வீட்டு சனங்கதான் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செஞ்சிட்டு இருந்துச்சுக. அன்னிக்கு ராத்திரி நாட்டாமை வீட்டுலே ஏற்பாடாயிருந்த விருந்து முடிஞ்சதும் முகூர்த்தம் காலையில் ஆறுலேர்ந்து ஏழு மணிக்குள்ளங்கிறதால நேரமாய் எல்லாரும் உறங்கிவிட விடிய காலம் நாலு மணி வாக்கில் மணப்பொண்ணுக்கு அலங்காரம் செய்ய எழுந்திரிச்ச உறவுக்காரப் பொண்ணு ஒருத்தி ரஞ்சிதத்தை மெல்ல எழுப்பி,

“யத்தே,சோதிமணிய ரொம்ப நேரமாக் காணும்”

“என்னடி சொல்ற இங்கதான் எங்கயாச்சும் இருப்பா”ன்னு சொல்லிகிட்டே வெளியில் வந்து சுத்தும் முத்தும் பாத்து ”சோதிமணி சோதிமணி”ன்னு கூப்பிட்ட ரஞ்சிதத்தின் குரல் கேட்டு மெல்ல சிலபேரு எந்திரிக்க,விஷயம் கொஞ்சம் கொஞ்சமாப் பரவி அந்த விடிய காலை நேரத்தில் எல்லோரும் பரபரப்பாக, ”கல்யாணத்துல விருப்பமில்லாம இருந்தாளோ?”,”எதுக்கும் பக்கத்துல இருக்க கேணியெல்லாம் பாருங்க”,”மரங்கிரத்துல தொங்கிட்டாளோ”ன்னுஆளாளுக்கு ஒன்னு ஒன்னச் சொல்ல ரஞ்சிதம் வெடிச்சு ஒப்பாரி வைக்க ஆரம்பிசிட்டா. சின்னச்சாமிக்கு நெஞ்ச அடைக்குற மாதிரி இருக்க அப்படியே சுவத்த புடிச்சுகிட்டு உக்காந்துட்டான்.

“யாரோ விடிஞ்சும் விடியாம இருக்குறப்ப பஸ்ஸ்டாண்டு பக்கம் போனத பாத்தேன்”ன்னு உள்ளூர்காரர் ஒருத்தர் சொல்ல பல்சரை எடுக்க ஓடுனான் பாண்டி, அங்கே பல்சரையும் காணும்.

21 comments:

பித்தனின் வாக்கு said...

நல்ல கதை, எனக்கு ஆரம்பத்தில் நாட்டாமை மீது சந்தோகம் இருந்தது, ஆனால் கடைசியில் அவர் மகனில் முடிந்தது. நல்ல நடையில் சொல்லி இருக்கின்றீர்கள். நன்றி.

aazhimazhai said...

நல்ல கதை, படிக்கும் போதே முடிவை யூகிக்க முடிஞ்சது

நாஞ்சில் நாதம் said...

நல்ல கதை

ஆரூரன் விசுவநாதன் said...

கிராமிய மணத்தோடு நல்ல கதையமைப்பு.....வாழ்த்துக்கள்

சிவக்குமரன் said...

ம்

க.பாலாசி said...

கதை நல்லா வந்திருக்கு அண்ணா...

மண்வாசனை, கிராமத்து நடை... எல்லாமே சிறப்பு...

பிரபாகர் said...

உங்கள் படைப்புகளில் என்னைக் கவர்ந்தவைகளில் இதுவும் ஒன்று, முடிவினை யூகிக்க முடிந்தாலும்...

பிரபாகர்.

ப்ரியமுடன் வசந்த் said...

ஸ்லங் ரொம்ப பிடிச்சுருக்குங்க...

ஜோசப் பால்ராஜ் said...

கதையில பல்சர் வந்ததுமே சந்தேகம் வந்துச்சு. அது சரியாத்தான் போச்சு.

நடை நல்லாருக்கு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி பித்தனின் வாக்கு.

நன்றி ஆழிமழை(ஆமாங்க,வேற விதமா யோச்ச கதை முற்றிலும் மாத்திட்டேன்).

நன்றி நாஞ்சில் நாதம்.

நன்றி ஆரூரன்.


நன்றி சிவா.(’ம்’ன்னா என்ன சொல்ல வறீங்க).

நாடோடி இலக்கியன் said...

நன்றி பாலாஜி.

நன்றி பிரபாகர்.

நன்றி ப்ரியமுடன் வசந்த்

நன்றி ஜோசப் பால்ராஜ்(எழுதும்போதே நினைத்தேன்,யூகிக்க முடியும்னு,ஆனா எழுத நினைத்த முடிவு வேற).

thamizhparavai said...

கலக்கல் நண்பரே...
இதுமாதிரிக் கதைகள் அதிக எழுதவும்...இயல்பான கிராமத்து வசனங்கள் அருமை...நல்ல ஃப்ளோ...

நாடோடி இலக்கியன் said...

நன்றி தமிழ்ப்பறவை(கண்டிப்பா நண்பரே,இக்கதையின் வேறொரு முடிவை சாட்டில் வரும்போது சொல்கிறேன்).

PPattian said...

கதை டாப் கிளாஸ் நாடோடி... ஆனாலும் நாட்டாமை மவனின் நேர்மையை பாராட்டத்தான் வேணும்..

'பரிவை' சே.குமார் said...

நல்ல நடை..!
நல்ல கதை..!
மண்வாசனை..!

பூங்குன்றன்.வே said...

முதல்ல இந்த கதைய படிக்கும்போது மொழியை(எந்த ஊர்பக்க பாஷை?) படிக்க கொஞ்சம் கஷ்டமா இருந்தது,இரண்டுமுறை படித்ததும் ரொம்ப நல்லா இருந்தது இலக்கியன்..அருமை !!!

நாடோடி இலக்கியன் said...

நன்றி புபட்டியன்(ரொம்ப சந்தோஷம் நண்பரே).

நன்றி சே.குமார்.

நன்றி பூங்குன்றன்(ஆக்சுவலா இது குறிப்பிட்ட ஒரு ஏரியாவின் ஸ்லாங் கிடையாதுங்க,தஞ்சைக்கும் புதுக்கோட்டைக்கும் இடையிலான ஊர் எனது கிராமம்.அங்கே ஒரே ஊரிலேயே சாதி வாரியாக ஸ்லாங்கில் வித்தியாசம் இருக்கும்(’அவர்கள் வீட்டில்’ என்பதை ’அவுக வீட்டில்’,’அவ்வோ வீட்டில்’,’அவுங்க வீட்டில்’ இப்படி), அதனால் எல்லாம் கலந்தே எழுதியிருக்கேன்).

Unknown said...

அண்ணா நேற்றே படிச்சிட்டேன். நல்ல வட்டார வழக்கோடிணைந்த கதை. கொஞ்சம் யூகிக்க முடிந்தது. நல்ல நடை. :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி(ஆமாம் வட்டார வழக்கோடு கீதாரிகளின் வாழ்க்கையை பதிவு செய்ய ஆரம்பித்த இடுகை அவசர சிறுகதையானதால் முடிவுக்கு பெரிதாய் மெனக்கெடவில்லை சகோ).

Unknown said...

Nice story with free flow of local slang...kalakal

நாடோடி இலக்கியன் said...

@visu,
thank you for ur comment.