Tuesday, June 23, 2009

பெயரில் என்ன இருக்கிறது?

நாகரீகத்தின் தாக்கம் கிராமப்புறங்களில் பல விதத்தில் மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறது, அதில் ஒன்று பெயர் சூட்டுதல் அதை பற்றி ஒரு சுவாரஸ்ய அலசல். இங்கே எனது கிராமத்தின் பெயர்களை மட்டுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

அறுபது வயதைக் கடந்தவர்களின் பெயர்கள் சில:
ஆண்டியப்பன், அய்யாச்சாமி,அய்யாவு,பிச்சையன்,வீராச்சாமி, ஆறுமுகம்,
அருணாச்சலம்,சிங்காரம்,ராமசாமி, பொன்னம்மாள், அஞ்சலை,வள்ளியம்மை,
அழகம்மை (இந்த டைப்பான பெயர்களைக் கொண்டவர்களின் பிள்ளைகள் பள்ளியிலும், கல்லூரிகளிலும் படிக்கும்போது, ஆசிரியர்கள் ஏதாவது காரணத்திற்காக பெற்றோர் பெயர்களை கேட்கும்போது மேற்சொன்ன பெயர்களைச் சொன்னால் சிலர் சிரித்து வைப்பார்கள் அப்போது வரும் பாருங்க அந்த பெயர்களைச் சூட்டிய பாட்டன்களின் மேல் கோபம்,நானே எங்க தாத்தாவிடம் "ஏன் எங்க அப்பாவிற்கு இப்படி பேர் வச்ச?"என்று கேட்டிருக்கிறேன். 'பெயரில் என்ன இருக்கிறது' அப்படிங்கிற எண்ணமெல்லாம் இருபதைக் கடந்த பிறகே வரும், எனக்கெல்லாம் அப்படிதாங்க வந்திச்சு).

ஐம்பதுகளில் இருப்பவர்களின் பெயர்கள் சில: ராமமூர்த்தி,செல்வராஜ்,புண்ணியமூர்த்தி,கணபதி,பூமணி,தவமணி,சரோஜா,
நீலாவதி (இந்த டைப்பான பெயர்களைக் கொண்டவர்களின் மூத்த வாரிசுகளும், மேற்சொன்ன "சாமி"வகையறா பெயர்களைக் கொண்டவர்களின் இளைய வாரிசுகளும் ஒரே வகுப்பில் படிக்க நேரிடும்போது அப்பா பெயர்களை வைத்து கிண்டல் செய்து எரிச்சலை கிளப்புவார்கள்).

இருபத்தைந்திலிருந்து முப்பத்தைந்து வரை உள்ளவர்களின் பெயர்கள் சில:
எங்கள் ஊரில் இந்த இடைவெளியில் உள்ளவர்கள் பிறந்த நேரத்தில் திராவிட,கம்யூனிஸ மற்றும் தமிழார்வம் பொங்கிய நேரமென நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக சில பெயர்கள் பேரின்பன், நிறைமதி,கனிமொழி,கயல்விழி, கலைவாணன்,பாரி,அறிவுச்சுடர்,அறிவொளி, தமிழ்வாணன், கவிமணி, புகழ்நம்பி,புகழ்வேந்தன், பூங்குழலி, பொற்கொடி,வானதி,இலக்கியா போன்ற தூய தமிழ் பெயர்களும்,லெனின்,ஸ்டாலின்,பூபேஸ்,ஜென்னி போன்ற கம்யூனிஸ பெயர்களும் நிறைய இருக்கின்றது.அதுபோக மீதம் இருப்பவர்களுக்கு வெற்றி, சித்திர, சண்முக, சிங்கார வேல்களாகவும், அய்யப்பன் போன்ற சாமி பெயர்களைக் கொண்டும் இருக்கிறார்கள்.

அதற்கு அடுத்தக் கட்ட இளைஞர்களுக்கு "ஷ்"ல் முடியும் பெயர்களான ரமேஷ், சுரேஷ், சதீஷ், தினேஷ் போன்ற பெயர்களும் சினிமா மோகத்தில் அமலா,நதியா போன்ற சில பெயர்களும் சூட்டப்பட்டது.

இப்போது பிறந்த குழந்தைகளிலிருந்து பத்து வயதுவரை உள்ள குழந்தைகளின் பெயர்கள்தான் அசத்தல் ரகம். நகர நாகரீகத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லையென இதில்தான் நூறு சதவிகிதம் நிறுபித்திருக்கிறார்கள். அவற்றில் சில பெயர்கள் மேஹா, ஹரிணி, ஹரீஷ், நிதீஷ், அரிஹா, நிகிலா, பார்மிகா, பவ்யா, நிஷா, ஷிவாணி,வைபவ்,ஆதர்ஷ் இன்னும் சில பெயர்கள் எனக்கு உச்சரிக்க சரியாக வரவில்லை.

இன்றைய குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களை கேட்க நன்றாக இருந்தாலும் ஒருபுறம் நல்ல தமிழ் பெயர்கள் எவ்வளவோ இருக்கிறதே அதையும் வைக்கலாமே என்று ஒரு எண்ணமும் வந்ததால் இப்பதிவு. தமிழ்ப் பெயர்களான அகிலன், முகிலன், நந்தன் போன்ற சில பெயர்களை மாடனாகச் சுருக்கி அகில், முகில், நந்தா என்று வைத்துக் கொள்வதுக் கூட நன்றாகத்தானே இருக்கிறது. அதுமாதிரி நல்ல தமிழ்ப் பெயர்களை பொருள் கெடாமால் மாடனாக்கிச் சூட்டலாமே.

14 comments:

சூரியன் said...

யோவ் நீ ரொம்ப மோசம்யா கிராமத்து ஜனங்கள பத்தி எழுத மொத்த குத்தகையும் எடுத்துட்ட மாதிரி போட்டு தாக்குறே ..

மேற்படி பதிவு சமாச்சாரம் என் ஊருக்கும் பொருந்தும் என்பதை சவுண்டாக தெரிவித்து கொள்கிறேன்..

திகழ்மிளிர் said...

/இப்போ எதற்கு இந்த பதிவு என்றால் இன்றைய குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களை கேட்க நன்றாக இருந்தாலும் ஒருபுறம் நல்ல தமிழ் பெயர்கள் எவ்வளவோ இருக்கிறதே அதையும் வைக்கலாமே என்று ஒரு எண்ணமும் வந்ததால் இப்பதிவு. தமிழ்ப் பெயர்களான அகிலன், முகிலன், நந்தன் போன்ற சில பெயர்களை மாடனாகச் சுருக்கி அகில், முகில், நந்தா என்று வைத்துக் கொள்வதுக் கூட நன்றாகத்தானே இருக்கிறது. அதுமாதிரி நல்ல தமிழ்ப் பெயர்களை பொருள் கெடாமால் மாடனாக்கிச் சூட்டலாமே./

உண்மை தான்

நாடோடி இலக்கியன் said...

நன்றி சூரியன்,(நண்பா இன்னும் எவ்வளவோ இருக்குங்க கிராமத்தைப் பற்றி எழுதுவதற்கான சுவராஸ்யங்கள்,கொஞ்சம் நீங்களும்தான் எழுதுங்களேன் படிக்க நான் ரெடி).

நாடோடி இலக்கியன் said...

நன்றி திகழ்மிளிர்.(ரொம்ப நாளா இந்தப் பக்கம் ஆளயே காணோமே நண்பா)

ஆதிமூலகிருஷ்ணன் said...

இறுதிக்கருத்து ஏற்புடையது.!

இரா. வசந்த குமார். said...

thanks 4 de info. can use the names for story chars. :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,(என் பதிவிலும் ஒரு கருத்தை கண்டுபிடித்ததற்கு மிக்க நன்றிங்க)
:)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

மாறி வரும் குடும்பச் சூழலால் முன்னோர் வைத்த பெயர்களும் நாகரீகமற்றவை என்ற கணக்கில் நிராகரிக்கப்படுகின்றன.

நாளைய தமிழ் வரலாற்றில் தமிழர்களின் பெயரிலேயே தமிழ் இல்லாமல் போகப் போகிறது..!

நல்லதொரு சிந்தனை இலக்கியன் ஸார்..!

செந்தில் குமார் said...
This comment has been removed by the author.
சுட்டி பையன் said...

25- 35 க்குள்ள உங்க பேர போட்டுட்டீங்க... கடையெழு வள்ளல்களுக்கு அப்புறம் உங்களுக்குத்தான் இந்த பேருன்னு நினைக்கிறேன்...

நாடோடி இலக்கியன் said...

இரா. வசந்த குமார்
thank u for your comment.

//can use the names for story chars.//

sure...you can.

நாடோடி இலக்கியன் said...

மிக்க நன்றிங்க உன்மைத்தமிழன்.

நன்றி சுட்டிபையன்(உங்க ஏரியாவில் என் பெயரைக் கொண்டவர்களே இல்லையா,எங்க ஊர் பக்கம் நிறைய பேருக்கு இல்லையென்றாலும் பரவலாக சில வள்ளல்களும்,வேந்தன்களும் இருக்கிறார்கள்)

சென்ஷி said...

:)

நல்ல பதிவு நாடோடி இலக்கியன்!

நாடோடி இலக்கியன் said...

மிக்க நன்றி சென்ஷி.