Tuesday, June 9, 2009

பசங்க படமும் எனது பால்ய காலமும்

"பசங்க" படத்தில் வரும் ஜீவாவை போன்றே எனது சிறுவயதில் நானும் இருந்திருக்கேன்.ஜீவாவிற்கு பக்கடாவும் மணியும் எப்படியோ அது மாதிரி எனக்கு கோபுவும்,தங்கப்பனும்(ஏத்தியெல்லாம் விடமாட்டானுங்க). எங்கே போனாலும் ஒன்னாத்தான் திரிவோம்.நான் என்ன சொன்னாலும் ரெண்டு பேரும் எதிர்த்து பேசமாட்டானுங்க. எல்லாத்துக்கும் "சரி"ன்னு தலையாட்டுவானுங்க. ஏன் அப்படி என்றால் கீழே இருக்கிற உரையாடல்களை படித்தால் உங்களுக்கே புரியும்.

உரையாடல் 1:

நான்: கோபு நான் ஒரு ஜோக் சொல்றேன்டா?

கோபு:சொல்லு சொல்லு..

(ஏதோ ஒரு ஜோக் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தான் கோபு)

நான்:இப்ப எதுக்கு இப்படி சிரிக்கிற,இந்த ஜோக்ல உனக்கு என்ன புரிஞ்சிச்சு சொல்லு பர்ப்போம்?.

கோபு:அதான் நல்லா காமடியா இருந்துச்சு.

நான்:என்ன காமடியா..

கோபு: (மௌனம் காக்கிறான்)

நான்:சொல்லுடா உனக்கு என்ன புரிஞ்சிச்சு?

கோபு:ம்ம் போடா நீ புரியிற மாதிரி ஜோக்கும் சொல்ல மாட்ட,சிரிக்காட்டியும் அடிப்ப,அதான் சிரிச்சேன்.

நான்:??????

உரையாடல் 2:

நான்:ஏன்டா கோபு இப்படி டியூப் லைட்டா இருக்க?

தங்கப்பன்:ஏன் அவன எப்ப பார்த்தாலும் டியூப் லைட்டுன்னு திட்டுறே,டியூப் லைட்டுன்னா என்னா?

நான்:ம்ம் ஸ்விட்ச் போட்டவுடனேயே ட்யூப்லைட் எரியாது கொஞ்ச நேரம் கழித்துதான் எரியும் அதுமாதிரிதாண்டா இவனும் சொன்ன உடனே எதையும் புரிஞ்சிக்க மாட்டேங்குறான்.

தங்கப்பன்:அப்போ உடனேயே புரிஞ்சிகிட்டா குண்டு பல்பா?

நான்:?????????

உரையாடல் 3:

ஒருமுறை காட்டுக்கு எலந்த பழம் பறிக்கச் சென்றோம். அப்போது எலந்த மரத்தின் உச்சியில் தேன் கூடு இருந்ததைப் பார்த்த நான், கோபுவிடம்..


நான்:டேய் அங்கா பாருடா தேன் கூடு.

கோபு:எங்க?

நான்:உச்சாங் கெளையில இருக்கு பாரு.

கோபு:எங்கடா எனக்கு தெரியல.

நான்:டேய் நல்லா பாருடா எவ்வளோ பெருசா இருக்கு,பக்கத்தில கூட ஒரு பட்ட குச்சி இருக்கு பாரு.

கோபு: (கொஞ்ச நேரம் அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே) ம்ம் ஆமான்டா,எவ்ளோ பெருசா இருக்கு.

(எனக்கு அவன் இன்னும் பார்க்கல சும்மா சொல்றான்னு புரிஞ்சிடுச்சு அதனால)

நான்: பாருடா அந்த தேன் பக்கத்தில இப்போ ஒரு குருவி வந்து உட்கார்ந்திருக்கு.

கோபு:ஆமாண்டா சூப்பரா இருக்குல்ல.

நான்:எங்க இருக்கு குருவி தெரியலேன்னா தெரியலன்னு சொல்லு எதுக்கு இப்படி ..என்று வைத்தேன் தலையில் ஒரு கொட்டு.

கோபு:உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.

இன்னும் இப்படி நிறைய இருக்குங்க."பசங்க" படம் பார்த்த பிறகு எனக்கு பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.அதான் இந்த கொசுவத்தி.

அப்படியே பசங்க படம் பார்க்காதவங்க பார்த்திடுங்க, அருமையான படம். ஃபிரேம் பை ஃபிரேமா ரசிக்க வேண்டிய படம்.

வகுப்பறை காட்சிகளிளெல்லாம் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள் அத்தனை சிறுவர் சிறுமியரும். ஏதோ ஹிடன் கேமரா வைத்து படம் பிடித்தது போல் மாணவர்களின் செயல்கள், குறும்புகள் அத்தனையும் இயல்பு மாறாமல் படமாக்கப்பட்டிருக்கிறது.

பசங்களின் குறும்பு ஒரு பக்கமென்றால் விமல்,வேஹாவின் காதல் ஆஹா போடவைக்கிறது.விமல் அறிமுகமாம்,பையனின் மதுரைத்தமிழ் உச்சரிப்பு புல்லரிப்பென்றால் வேஹாவின் புருவ சுழிப்பு "பருவ செழிப்பு". இருவரும் அசத்தியிருக்கிறார்கள். "எப்பூடி" புஜ்ஜிமா வரும் சீன்களிலெல்லாம் தியேட்டரில் விசில்.

அன்புக்கரசு,ஜீவா,பக்கடா,மணி,"அப்பத்தா மங்கலம்" ஆகிய இந்த பசங்கள அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. பசங்க சும்மா பூந்து வெளையாடியிருக்கானுங்க. கூட அந்த குட்டி பொண்ணும் குறைவான காட்சியில் வந்தாலும் மனதில் நிறைவாக தங்கிவிடுகிறாள்.

ஜீவாவின் அப்பாவாக நடித்திருப்பவர் சின்ன சின்ன முக பாவங்களில் அசத்துகிறார். குறிப்பாக "ஸார் உங்கள ஹெட்மாஸ்டர் கூப்பிடுறார்"என்று பியூன் சொல்லும் போது அவர் கொடுக்கும் அந்த சின்ன தலையாட்டலே அத்தனை தேர்ந்த நடிப்பு.அன்புவின் அம்மா அப்பாவாக நடித்திருப்பவர்களின் நடிப்பிலும் வெகு யதார்த்தம். அன்புவின் வீட்டில் நடக்கும் காட்சிகள் அத்தனை அழகு. அவர்கள் நிஜமாகவே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலவே நினைக்கத் தோன்றுகிறது படம் முடிந்த பின்னும்.

"ஒரு வெட்கம் வருதே","அன்பாலே அழகாகும் வீடு"என ஜேம்ஸ் வசந்தனும் தன் பங்கிற்கு மனதை வருடுகிறார். ஒளிப்பதிவு அருமை குறிப்பாக "ஒரு வெட்கம் வருதே" பாடலில் மழை நம்மீது பொழிவதுபோல் காட்சி படுத்தியிருக்கிறார்கள். இயக்குனர் பாண்டியராஜ் அவர்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. அவருக்கு நிறைய நன்றிகளும் வாழ்த்துகளும்.


உரையாடல்:சிறுகதைக்கான எனது சிறுகதை இங்கே

22 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பார்த்துடுவோம்

இய‌ற்கை said...

//உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.
//
இதை சொல்லும்போது அவ‌ர் face reaction எப்பிடி இருக்கும்ன்னு நென‌ச்சு பாத்தேன்..குபீர்ன்னு சிரிச்சுட்டேன்

சூரியன் said...

இன்னும் பல கொசுவர்த்தி ஓட்டுங்க ..

Hariharan # 03985177737685368452 said...

//உங்கிட்ட அடிவாங்கனும்னே என்னிய நேந்து உட்டுருக்காய்ங்க போலருக்கு.
//

Testament to Ego Free Friendship during school days!

Jothig said...

nambikkai Otteya padam

எம்.ரிஷான் ஷெரீப் said...

நல்ல படம்.
நடுத்தரக் குடும்பங்களைக் கண்முன்னே நிறுத்தும் அந்தப் பெற்றோரைப் பற்றி எதுவுமே சொல்லவில்லையே நீங்கள்? அதுவும் ஹீரோவின் அண்ணனாகவும், அண்ணியாகவும் வருபவர்கள் வெகு இயல்பாக சண்டை போடுகிறார்கள். நடிப்பென்றே சொல்லமுடியாமல் அவர்களது சண்டையை ஒளிந்திருந்து பார்த்தது போல இருக்கிறது அல்லவா?

நாடோடி இலக்கியன் said...

@ SUREஷ்

கண்டிப்பா பார்த்திடுங்க.பார்த்துவிட்டு உங்க பார்வையையும் பதிவிடுங்க.

@இய‌ற்கை,

ரொம்ப சந்தோஷம்ங்க இயற்கை.

@சூரியன்,
அது எக்கச்சக்கமா இருக்கு நண்பா.அப்பப்போ கொளுத்திடுவோம்.

@ஹரிஹரன்,
கண்டிப்பாங்க ஈகோவே எங்களுக்குள் இன்றுவரை கிடையாது.நாந்தாங்க அவனை அடிப்பேன் வேற யாராவது அவனை திட்டினால்கூட சண்டைக்கு போயிடுவேன்.அந்த நட்பு இப்பவும் எந்த மாற்றமும் இல்லாம தொடர்கிறது.

@Jothig ,
நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு புரியலீங்க.

@எம்.ரிஷான் ஷெரீப்,
அன்பின் ரிஷான்,
ஐந்தே நிமிடத்தில் எழுதி வலையேற்றிவிட்டேன்.அந்த அவசரத்தில் "பசங்க"ளின் பெற்றோரின் நடிப்பை குறிப்பிடாமல் விட்டுவிட்டேன்.இதோ இப்போது சேர்த்துவிட்டேன். அன்புவின் அப்பாவும் அம்மாவும் பேசும் வசனங்கள் அத்தனை யதார்த்தம். என்னுடைய சொந்த ஊரும் இந்த கதை நடக்கும் ஊர் பக்கம்தான். அதனால் அவ்வளவு ஒன்றிபோய் பார்த்தேன்.

நன்றி..! ரிஷான் மீண்டு(ம்) வந்தற்கு வாழ்த்துகளும்.

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...கண்டிப்பா பார்த்தே தீரணும்னு தோன்றுகிறது இதைப் படித்தவுடன்!

நாடோடி இலக்கியன் said...

@அன்புடன் அருணா ,
கண்டிப்பா பாருங்க அருணா.
மீண்டும் பள்ளிவாழ்க்கையை எல்லோருக்கும் திரும்ப ஒரு இரண்டரை மணி நேரம் வாழ்ந்து பார்ப்பது இந்த படத்தின் மூலம் சாத்தியமாயிருக்கிறது.படம் பார்க்கும் உணர்வே வராது அத்தனை யதார்த்தம்.பார்த்துவிட்டு சொல்லுங்க.

புதுகைத் தென்றல் said...

சரியா சொன்னீங்க. அருமையான படம்.

எனக்கும் பெரிய சைஸ் கொசுவத்தி சுத்துச்சு. படம் பார்த்துட்டேன். எங்க ஊரு பசங்க, எங்க ஊரு டைரக்டர், எங்க ஊரு ஃப்ரேம் பை ஃப்ரேம். :)))

நாடோடி இலக்கியன் said...

@புதுகைத் தென்றல்,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
உங்க கொசுவத்தியையும் கொளுத்துங்க.
(நானும் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்தவந்தாங்க).

கார்த்திகைப் பாண்டியன் said...

உங்களுடைய முந்தைய பதிவுகளை படித்தேன் நண்பா.. குறிப்பா சின்னப் பசங்க நாங்க.. அருமை.. பால்யத்தில் கிராமத்தில் இருக்க நீங்கள் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.. நல்லா எழுதுறீங்க.. தொடருகிறேன்..

புதுகைத் தென்றல் said...

http://pudugaithendral.blogspot.com/2009/06/blog-post_04.html//

என்னோட பதிவு

Nagarajan said...

நன்றி நண்பா உங்கள் பதிவுக்கு நான் இந்த படத்த நான்கு முறை பாத்தேன் மிகவும் அருமை ...

thubairaja said...

Good Kosuvathi

நாடோடி இலக்கியன் said...

@புதுகைத் தென்றல்,
நீங்க கொடுத்த சுட்டி திறப்பதில் ஏதோ பிரச்சனையிருக்கிறது சகோதரி.

@கார்த்திகை பாண்டியன்,
எனது முந்தைய பதிவுகளையும் படித்தமைக்கு மிக்க நன்றிங்க.
பால்யம் கிராமத்தில் அமைந்த எல்லோருமே கொடுத்து வைத்தவர்கள்தான்.வாழ்க்கையை வாழ்ந்தது அந்த பருவத்தில்தான்.
இதோ என்னோடு கோலி விளையாடியவனுக்கு நாளை ஊரில் திருமணம் ஊருக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன்.

@நாகராஜன்,
நான்கு தடவையா ... நான் ரெண்டு தடவைதான் பார்த்திருக்கிறேன். இன்னும் பார்ப்பேன்.வருகைக்கு நன்றிங்க.

@துபாய்ராஜா,
ஆமா இந்த மாதிரி கொசுவத்தி நிறைய இருக்கிறது.வருகைக்கு நன்றிங்க.

அருண்மொழிவர்மன் said...

பசங்க திரைப்படம் தமிழில் வெளியான நல்ல முயற்சி. நிச்சயமாக எல்லாருக்கும் அவர்களாது பால்யத்தை நினைவூட்டியிருந்திருக்கும்

கலையரசன் said...

உங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
வாழ்த்துகள்!

http://youthful.vikatan.com/youth/index.asp

நாடோடி இலக்கியன் said...

@அருண்மொழிவர்மன்,
"பசங்க" தமிழ் சினிமாவின் ஒரு குறிஞ்சி. கண்டிப்பா எல்லோரும் பார்க்க வேண்டிய படம். ஆனா ஸ்டார் வேல்யூ இல்லாததால் பெரும்பாலான ஊர்களில் சரியாக போகவில்லை ,படத்தை பற்றிய பாஸிட்டிவான விமர்சனங்கள் மீடியாக்கள் மூலமாகவும் , ஆடியன்ஸ் மூலமாகவும் பரவுவதற்கு முன்னமே நிறைய ஊர்களில் பசங்க திரைப்படத்தை தியேட்டரைவிட்டு தூக்கிவிட்டார்கள்.இப்படி இருந்தால் அடுத்தடுத்து எப்படி நல்ல படங்களை எதிர்பார்க்க முடியும் ,ரசிகனின் மனநிலையும் கொஞ்சம் மாறவேண்டும்.

வருகைக்கு மிக்க நன்றி
அருண்மொழி.

@கலையரசன்,
மிக்க நன்றி கலையரசன் உங்க வருகைக்கும்,வாழ்த்துகளுக்கும்

காரணம் ஆயிரம்™ said...

// பசங்க கண்டிப்பா பாருங்கள்...

பார்த்தாச்சு பார்த்தாச்சு.... எத்தனவாட்டி ...??? :))

பிடித்த சீன்கள் என்றால், 'சார் Headmaster கூப்பிடுறார்' தலையாட்டல், ஆசிரியர்- அன்பு அப்பா உரையாடல், ஆகியவை...

ஒரு ஆரம்பநிலை ஆசிரியர் எப்படி பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ளவேண்டும் என்று நன்றாக நடித்திருந்தார்... சாதரணமான ஆசிரியருக்கும், குரு என்று சொல்லப்படுபவருக்கும் என்ன வித்தியாசம் என்பது இதில் புரிகிறது ...

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் எப்படி பேசுவார்கள் என்பதையும் 'பக்கத்தில் சேர் போட்டு பத்து நாள் பார்த்தமாதிரி', 'ஏலே கெழவி புருசா...' 'கெழவன் பொண்டாட்டிகளா ...'
என்று கலாய்ப்பது வேடிக்கையாக இருக்கிறது...

மீனாட்சி - சோப்பிகன்னு காதல் எபிசொட் பாடல், பாலமுரளிகிருஷ்ணா பாடல்,
எல்லாம் பிரமாதம்... :)

ஊர்சுற்றி said...

நல்ல விமர்சனம் தந்துள்ளீர்கள். :)))

இந்த நம்பிக்கையில் படத்தைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

@காரணம் ஆயிரம்,
பின்னூட்டத்திலேயே அழகான விமர்சனம் தந்த உங்களுக்கு நன்றி.
எந்த அளவிற்கு பசங்க உங்களை கவர்ந்திருக்கிறார்கள் என்பது உங்களின் பின்னூட்டத்திலிருந்தே தெரிகிறது.உங்களின் ரசனைக் குறித்து மிக்க மகிழ்ச்சி நண்பா.

@ஊர்சுற்றி,
கண்டிப்பா பாருங்க நண்பா,பார்த்துவிட்டு ஒரு பதிவையும் எழுதுங்க படிக்க ஆவலாக இருக்கிறேன்.வருகைக்கு மிக்க நன்றி..!