Monday, June 29, 2009

நாடோடிகள் என் பார்வையில்..........


நண்பனின் காதலுக்கு உதவும் மூன்று நண்பர்களைப் பற்றிய கதை. பெரும்பாலும் இந்த மாதிரிக் கதைகளில் காதலர்களைப் பற்றி இடைவேளை வரையிலும், அதன் பிறகு காதலர்களுக்கு வரும் பிரச்சனைகளை சாமாளித்து, நண்பர்கள் அவர்களைப் பத்திரமாக ட்ரெயினிலோ, பஸ்ஸிலோ அல்லது நெடுஞ்சாலைகளில் செல்லும் ஏதோ ஒரு வாகனத்திலோ பல கஷ்டங்களுக்கிடையே வழியனுப்பிவிட்டு டாட்டா காட்டுவதோடு படம் முடிவடையும். ரசிகனும் நட்புன்னா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வெளியே வருவான்.ஆனால் இயக்குனர் சமுத்திரகனி காதலுக்கு உதவும் நண்பர்களை முக்கிய கதாப்பாத்திரங்களாக்கி காதலர்களைச் சேர்த்து வைத்தபிறகு நண்பர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களையும்,நட்பு என்றப் பெயரில் இளமை வேகத்தில் பின்விளைவுகள் எதையும் யோசிக்காத இளைஞர்களுக்கு ஒரு பாடத்தையும் இந்தப் படத்தின் மூலம் மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அறிவுரைக் காட்சிகளை நேரடியாக வைக்காமலேயே இளைஞர்களும் ஏற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

சிறந்த இயக்குனராக மற்றும் தயாரிப்பாளராக ஏற்கனவே வெற்றிப் பெற்றிருக்கும் சசிக்குமார், தான் ஒரு சிறந்த நடிகர் என்பதையும் இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். சுப்ரமணியபுரத்திலேயே அவரின் நடிப்பு நன்றாக இருந்தது அதைவிட இந்தப் படத்தில் நிறைய ஸ்கோப் நடிப்பில் ஸ்கோர் செய்ய. ரொமான்ஸ், காதலர்களைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சிகளில் காட்டும் வேகம், குடும்பத்தாரிடம் காட்டும் பாசம், நண்பர்களோடு அடிக்கும் லூட்டி என எல்லா ஏரியாவிலும் பட்டாசாய் இருக்கும் சசி, டான்ஸ் மூவ்மென்ட்ஸ்களில் நிறையவே சிரமப்படுகிறார், எனினும் நல்ல முயற்சியே. (ஆட்டோகிராஃப் படத்தில் சேரன் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்போய் அவர் அதையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு தான் இயக்கும் எல்லாப் படங்களிலும் அவரே நடித்து எப்படி சேரன் படமென்றாலே அலறும் அளவிற்கு கொண்டுவந்து விட்டாரோ, அதுமாதிரி ஏதும் செய்துவிடாதீர்கள், உங்களின் இயக்கத்தில் நிறையப் படங்களை எதிர்ப்பார்க்கிறோம்).
சசியின் நண்பர்களாக வரும் விஜயும், பரணியும் தத்தம் கதாப் பாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக பரணியின் நடிப்பை ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போக முடியாது. தான் வரும் அத்தனைக் காட்சிகளிலும் தூள் கிளப்பியிருக்கிறார். காமெடிக் கலந்த குணச்சித்திர வேடங்களுக்கு நல்லதொரு நடிகராக பரணி கிடைத்திருக்கிறார்.

கதாநாயகிகளில் சசியின் ஜோடியாக நடித்திருப்பவர் கொஞ்சம் "தூள்" ஜோதிகாவையும், கோபிகாவையும் நினைவூட்டும்படியான முகவெட்டு. குறைவான காட்சிகளில் வந்தாலும் அழகிலும், நடிப்பிலும் நம் மனதில் நிறைகிறார். சசியின் தங்கையாக நடித்திருக்கும் அந்த அழகுப் பெண் உண்மையில் காது கேட்காத வாய் பேச இயலாதவராம். ஆனால் இது ஒரு மேட்டரே இல்லை என்பதுபோல் அத்தனை அசத்தலாய் நடித்திருக்கிறார். அவரை வசனம் பேச வைத்து சிறப்பான நடிப்பையும் வாங்கியிருக்கும் இயக்குனர் சமுத்திரகனிக்கு ஒரு பெரிய சல்யூட்.

கஞ்சா கருப்புக்கு இது இன்னொரு டக்ளஸ் கேரக்டர்.அவரும் பரணியும் பேசிக் கொள்ளும் இடத்திலெல்லாம் தியேட்டரே குலுங்கிச் சிரிக்கிறது. காதலர்களின் பெற்றோர்களாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றும் அந்த அரசியல் பெண்மணியும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் கதிரின் கேமரா.காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க நடக்கும் அந்த சேஸிங் காட்சிகளில் ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார். கண்ணுக்கு குளிர்ச்சியாக புதுப்புது லொகேஷன்களை அருமையாக காட்சிப் படுத்தியிருக்கிறார்.
பின்னணி இசையில் கலக்கியிருக்கும் சுந்தர்.சி பாபு பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார். இருப்பினும் இந்த படத்திற்கு பாடல்களே தேவையில்லை என்பது என் கருத்து.

படத்தின் இன்னொரு பெரிய பலம் வசனங்கள் குறிப்பாக ஜெயப்பிரகாஷ் சசியிடம் சொல்லும் "நட்புன்னா அதற்குள் எல்லா உறவும் அடங்கிடும்னு சொன்ன, இப்போ என்னாச்சு" என ஆரம்பித்து பேசும் வசனங்களும், காதலர்களுக்கு காவலாக இருக்கும் நபர், பப்ளிக் டாய்லெட்டைக் காட்டி "அவனுங்க காதலிக்க இந்த இடம் போதும்டா" என பேசும் வசனங்களும் ரொம்ப ஷார்ப்.

விளம்பர விரும்பி அரசியல்வாதி,எதற்கெடுத்தாலும் தற்கொலை மிரட்டல் விடுத்துக் காரியம் சாதிக்கும் கதாநாயகியின் அப்பா, இளைய மனைவிக்குப் பயந்து மூத்த மனைவியின் மகனை திட்டுவதுபோல் நடிக்கும் பரணியின் அப்பா மற்றும் விஜயின் அப்பாவாக வரும் எக்ஸ் மிலிட்டரிமேன் கேரக்டர் என ரசனையான கேரக்டர்களை செதுக்கியதில் இயக்குனரை பாராட்டலாம் என்றாலும் அந்த கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களிடம் ஒரு செயற்கைத்தனம் படம் நெடுக தெரிந்ததையும் மறுப்பதற்கில்லை. அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது, நடிப்பையும் கேமராவையும் பற்றி அறிந்திராத அவர்களை படத்தின் நேட்டிவிட்டிக்காக பயன்படுத்த நினைக்கும்போது இயக்குனர்தான் மிகுந்த சிரத்தையோடு வேலை வாங்கியிருக்க வேண்டும். (பருத்தி வீரனில் இந்த மாதிரியான கதாப்பாத்திரங்களிடம் அமீர் வேலை வாங்கியிருந்த நேர்த்தி இப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது).

இயக்குனர் சமுத்திரகனி, படத்தை ரொம்பவும் யதார்த்தமாக எடுக்க நினைத்த இன்னும் சில காட்சிகளிலும் செயற்கைத்தனம் தெரிகிறது, குறிப்பாக சசியின் நண்பன் தற்கொலைக்கு முயலும் காட்சியிலும், கதாநாயகியின் அப்பா தற்கொலைக்கு முயலும் காட்சியிலும் காப்பாற்ற ஓடிவருபர்கள் ரெடியாக நிறுத்தி வைக்கப்பட்டு ஓடிவருவது அப்பட்டமாகவேத் தெரிகிறது. விளம்பர விரும்பி அரசியல்வாதியிடம் சமையல் கான்ட்ராக்ட் கேட்கபோய் திரும்பும் சசி டீம் திரும்பிச் செல்லும்போது அவர்கள் நடையின் வேகமே திரும்பவும் அரசியல்வாதி கூப்பிடப் போகிறார் என்பதை உணர்த்திவிடுகிறது.

படம் ஆரம்பித்து முதல் பத்து நிமிடங்கள் கொஞ்சம் மொக்கையாகவே செல்வது, நண்பனின் காதலை அவ்வளவு ரிஸ்க் எடுத்து சேர்த்து வைக்கும் சசியின் கேரக்டர் தனது காதலை எளிதாக விட்டுக் கொடுப்பது, படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் வரும் அந்த குத்துப் பாடல் என சில குறைகளும் இருப்பினும் மேற்சொன்ன நல்ல விஷயங்களில் இவை காணாமல் போகின்றன.

'சுப்ரமணியபுரம்' சசிக்குமார் நடித்தப் படம் என்ற பெரிய எதிர்ப்பார்ப்பில் செல்லாமல் "உன்னைச் சரணடைந்தேன்","நெறஞ்ச மனசு" படங்களை இயக்கிய சமுத்திரகனியின் படம் என்று நினைத்து பார்த்தால் கண்டிப்பாக நெறஞ்ச மனசோடுத் திரும்பலாம்.
பொதுவாக நல்ல படங்கள் ரிலிஸாகும்போது, "ரொம்ப நாள் கழித்து நல்லதொரு படம் பார்த்தேன்" என்று சொல்வார்கள், ஆனால் "பசங்க" என்ற அற்புதமான படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழ் சினிமா நல்லதொரு பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதத்தில் அடுத்ததாய் வந்திருக்கிறது இந்த நாடோடிகள்.

நாடோடிகள் - நிரந்தர முகவரியோடு.

29 comments:

முரளிகண்ணன் said...

நாடோடி (இலக்கியன்) சூப்பர்

☼ வெயிலான் said...

அட! இவ்வளவு விசயமிருக்கா படத்துல. உம் பக்கத்துல தான்யா உக்காந்து நானும் பாத்தேன்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி முரளி கண்ணன்.(படம் பார்த்திட்டீங்களா?)

நாடோடி இலக்கியன் said...

நன்றி வெயிலான்(படம் பார்த்தா முழுசா பார்க்கணும்,நொடிக்கொருதரம் கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றால் என்னத்த புரியும் .....ஆமா ரொம்ப மொக்கையா எழுதிட்டேனோ)

நாஞ்சில் நாதம் said...

நன்றாக இருக்கிறது விமர்சனம்.

முரளிகண்ணன் said...

இலக்கியன்,

இன்னும் படம் பார்க்கவில்லை.

எங்கள் ஏரியாவில் ரூ 10 டிக்கட்டில் படம் பார்ப்பதுதான் என் பொருளதாரத்துக்கு ஏற்புடையது.

(வேளச்சேரி ராஜலட்சுமி)

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில் நாதம்,

//நன்றாக இருக்கிறது விமர்சனம்//
நெசமாத்தானே சொல்றீங்க.
:)

நாஞ்சில் நாதம் said...

தெளிந்த நீரோடை போல உள்ளது உங்களது எழுத்து நடை. அதை தான் சொன்னேன். மம்மூட்டி பதிவு எப்போது

நாடோடி இலக்கியன் said...

மறுக்கா வந்த முரளிக்கு ஒரு பெரிய நன்றி.சீக்கிரம் பாருங்க நண்பா.அந்த தியேட்டர் பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

நாடோடி இலக்கியன் said...

ரொம்ப ரொம்ப நன்றிங்க நாஞ்சில்நாதம்.
மும்முட்டி பதிவு விரைவில் எழுதுகிறேன் நண்பா.

சூரியன் said...

(ஆட்டோகிராஃப் படத்தில் சேரன் நன்றாக நடித்திருப்பதாக சொல்லப்போய் அவர் அதையே விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு தான் இயக்கும் எல்லாப் படங்களிலும் அவரே நடித்து எப்படி சேரன் படமென்றாலே அலறும் அளவிற்கு கொண்டுவந்து விட்டாரோ, அதுமாதிரி ஏதும் செய்துவிடாதீர்கள், உங்களின் இயக்கத்தில் நிறையப் படங்களை எதிர்ப்பார்க்கிறோம்).

ஆமா தலை இந்த மாதிரி ஆளுக நடிக்கிரேனு இயக்குறத மறந்துற போறாங்க ...

நாடோடி இலக்கியன் said...

நன்றி சூரியன்,
//இந்த மாதிரி ஆளுக நடிக்கிரேனு இயக்குறத மறந்துற போறாங்க ...//

ஆமாம் நண்பா,

சசிக்குமார் அடுத்தாக ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்.

சூரியன் said...

//சசிக்குமார் அடுத்தாக ஒரு படத்தை இயக்கப் போகிறாராம்//

ரொம்ப சந்தோஷம் ..

☼ வெயிலான் said...

// நொடிக்கொருதரம் கைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றால் //

என்ன பண்றது? அதான் பாஸ் திருப்பூர் வேலை.

மொக்கையெல்லாம் இல்லை. சக்கையாப் பிழிஞ்சு எழுதியிருக்கீங்க :)

நாடோடி இலக்கியன் said...

மறுவருகைக்கு மிக்க நன்றி சூரியன்.

நன்றி வெயிலான்(திருப்பூர் வாழ்க்கைப் பற்றி ஓரிரு வருடங்களாகவே அவதானித்து வைத்திருக்கிறேன்.எறும்பு கூட சுறுசுறுப்பில் திருப்பூர்வாசிகளிடம் தோற்றுத்தான் போகணும்,எனி டைம் பிஸி மனிதர்கள்.அப்புறம் நீங்க வெளியே சென்றிருந்த அந்த கால் மணி நேரத்தில் பல சுவராஸ்ய காட்சிகளை மிஸ்பண்ணிட்டீங்க நண்பா).

Suresh said...

நண்பா நானும் நாடோடி விமர்சனம் எழுதியுள்ளேன் 98/100 மார்க் என்னை பொருத்த வரை கொடுத்து இருக்கிறேன்..
படிச்சிட்டு சொல்லுங்க

உங்க ஒரு கேள்விக்கு பதில் என் பதிவில் இருக்கு

உங்க விமர்சனம் நல்லா இருக்கு அதில் நீங்கள் கூறிய சிறு குறைகள் இருந்தாலும் படம் பட்டாசு

நாடோடி இலக்கியன் said...

நன்றி சுரேஷ்,(நீங்கள் சொல்வதுபோல் படம் பட்டாசேதான்.உங்க விமர்சனத்தையும் படிக்கிறேன் நண்பா)

சென்ஷி said...

//Blogger முரளிகண்ணன் said...

நாடோடி (இலக்கியன்) சூப்பர்//

வழி மொழிந்து கொள்கிறேன். எழுத்து நடை அசத்தல் :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி சென்ஷி,(ரொம்ப சந்தோஷமா இருக்குங்க,அடிக்கடி வாங்க நண்பா)

நர்சிம் said...

கலக்கலா எழுதி இருக்கீங்க பாஸ்.

அதுவும் ‘நிரந்தரமுகவரி’ நச் வார்த்தை.

நாடோடி இலக்கியன் said...

நன்றி நர்சிம்.(அந்த கடைசி வார்த்தைகளைக் குறிப்பிட்டு பாராட்டியது மிக்க மகிழ்ச்சியா இருக்கிறது நண்பா .)

இங்கிலீஷ்காரன் said...

தலைவா நான் விமர்சனம் எழுதுவதற்கு முன்பே நீங்க எழுதிய இந்த விமர்சனத்தை படிச்சுட்டேன்.பின்னூட்டமும்,வோட்டும் தான் போடா மறந்துட்டேன்.இப்போ போட்டாச்சு.

உங்கள் விமர்சனமும் அருமை.
அன்புடன்,

நாடோடி இலக்கியன் said...

நன்றி இங்கிலீஷ்காரன்.

ஸ்ரீமதி said...

நல்ல கண்ணோட்டம் அண்ணா :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி ,

கட்டியக்காரன் said...

இந்தப் படத்தில் நீங்கள் குறையாகச் சுட்டிக்காட்டியிருக்கும் எல்லா விஷயங்களும் சரியே. பாராட்டும் விஷயங்களில்தான் பிரச்னை. படத்தில் அறிவுரை காட்சியே இல்லை என்கிறீர்களே சுவாமி. இடைவேளைக்குப் பிறகு வெறும் நீதி போதனைதானே? அது சரி, உண்மையைச் சொல்லுங்கள், உங்களுடைய புனைப்பெயரில் இந்தப் படம் வந்திருப்பதால்தானே இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள்? தெரியுமய்யா உங்களை மாதிரி ஆட்களையெல்லாம்..

நாடோடி இலக்கியன் said...

நன்றி கட்டியக்காரன்.

நட்பின் பெருமை பேசும் பல வசனங்களின் ஊடாக வேறு விஷயத்தை சொல்லியிருப்பதாகத்தான் உங்க பதிவிலும் கூறியிருக்கிறேன்.

உண்மையில் அந்த நட்பைப் பற்றி அடிக்கடி பேசும் வசனங்கள் எனக்கும் பிடிக்கவில்லை(இதைத்தான் எனக்கும் சில விமர்சனங்கள் உண்டு என்று கூறியிருந்தேன்).நீங்கள் சொல்ல வருவது எனக்கு முற்றிலும் புரிகிறது நண்பா.

//உங்களுடைய புனைப்பெயரில் இந்தப் படம் வந்திருப்பதால்தானே இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள்?//

இதற்கு நான் என்ன சொல்வதுன்னு உண்மையிலேயே தெரியலைங்க. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.

நித்யகுமாரன் said...

இனிய நண்பருக்கு,

படம் உண்மையிலேயே மிகச் சிறப்பு. வசனங்களும் பின்னணி இசையும் திரைக்கதையும் மிகச் சிறப்பு.

அன்பு நித்யன்

கட்டியக்காரன் said...

//உங்களுடைய புனைப்பெயரில் இந்தப் படம் வந்திருப்பதால்தானே இப்படி வக்காலத்து வாங்குகிறீர்கள்?//

இது சும்மா கிண்டலுக்குச் சொன்னது ஐயா.. இதற்குப் போய் இவ்வளவு சீரியஸாக பீல் பண்ணுகிறீர்களே?