Wednesday, June 17, 2009

மலையாளத் திரைப்படங்கள் ஒரு பார்வை-2

நேற்றைய இடுகையை படிக்காதவர்கள் இங்கே சென்று படித்துவிட்டுத் தொடரவும்.

இந்த பதிவில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த உளவியல் பாதிப்புகளை பின்னணியாக கொண்டத் திரைப்படங்களை காணலாம்.

தாளவட்டம்(1986):
இயக்கம்:பிரியதர்ஷன்

ஒரு விபத்தில் த‌ன் கண்முன்னே காதலியை(லிஸி) பறிகொடுக்கும் காதலன்(மோகன்லால்), மனநிலை பாதிக்கப்பட்டு மென்டல் ஆஸ்பிடலில் அனுமதிக்கப் படுகிறான். அவனுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்ட‌ர் (கார்த்திகா ) நாள‌டைவில் அவ‌ன் மேல் காத‌லாகிறாள். இதை அறியும் சீஃப் டாக்ட‌ரான‌ அவ‌ளின் த‌ந்தை, மோக‌ன்லாலுக்கு ட்ரீட்மெண்ட் என்ற‌ பெய‌ரில் செய்யும் காரிய‌த்தால் ந‌ட‌க்கும் எதிர்பாராத‌ நிக‌ழ்வால் டாக்ட‌ரின் ம‌க‌ள் என்னவாகிறாள் என்பதுதான் கதை. இதில் மோகன்லாலின் குறும்புத் தனங்கள் மிக சுவராஸ்யமாக ப‌ட‌மாக்க‌ப்ப‌ட்டிருக்கும். படத்தின் முடிவு நெஞ்சை கன‌க்கச் செய்துவிடும். இதே படம் தமிழில் பிரபு,சரண்யா நடிப்பில் மனசுக்குள் மத்தாப்பு என்ற பெயரில் ராபர்ட் ராஜ சேகரன் இயக்கத்தில் வெளிவந்தது.

உள்ளடக்கம்(1991):
இயக்கம்:கமல்
தன் கண்முன்னே காதலனை பறிகொடுக்கும் காதலி ம‌ன‌நிலை பாதிப்பிற்குள்ளாகிறாள், பிறகு சிகிச்சை எடுத்து நார்மலாகத் திரும்பும்போது புதிதாக அவளுக்கொரு பிரச்சனை, தனக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கும் டாக்டரின்(மோகன்லால்) சில மேனரிஸங்கள், தன் காதலனை நினைவு படுத்த உள்ளுக்குள் அவனையே தன் காதலனாக நினைக்கத் தொடங்குகிறாள்.(இது தவறு எனத் தெரிந்தும் அவளால் தனது கற்பனைகளை கட்டுப்படுத்த முடியாத‌ ப‌டியான‌ க‌தாபாத்திர‌ அமைப்பு). இவ்வேளையில் டாக்டருக்கும் ,அவரின் முறைப் பெண்ணுக்கும் (ஷோபனா) திருமண ஏற்பாடுக‌ள் ந‌ட‌க்கிற‌து. மனநிலை பாதிப்பிற்குள்ளான‌ அப்பெண் திரும‌ண‌ ச‌ட‌ங்கு ந‌டைபெறும் இட‌த்திற்கு வ‌ந்து அவளையே அவளால் கண்ட்ரோல் செய்ய முடியாமல் செய்யும் காரியத்தால் நடக்கும் அதிரிச்சியான விஷயங்களே படத்தின் ஹைலைட். இந்த படத்தில் அமலா மெண்ட்டல் பேஷன்ட்டாக கலக்கியிருப்பார். இந்தப் படத்தை மோகன்லால் நடித்திருக்கும் அமலா படம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு படம் முழுவதும் அமலாதான் தெரிவார்.

மணிச்சித்ரதாழு(1993):
இயக்கம்:ஃபாசில்
கதை:மதுமுட்டம்
ஸ்பிலிட் பர்ஸனாலிட்டி என்னும் நோயால் பாதிக்கப் பட்டிருக்கும் நாய‌கி (ஷோபனா) தான் படித்தும் கேட்டும் அறிந்த ஒரு கதையின் நாயகியாக தன்னையும், தன் வீட்டிற்கு எதிரில் குடியிருக்கும் இளைஞனை அக்கதையில் நாயகனாகவும் , அவனோடு சேர்வதற்கு தடையாய் இருக்கும் வில்லனாக தனது கணவனையும்(சுரேஷ் கோபி) பாவித்து, கணவனையே கொல்வதற்கு நாள் குறிக்கிறாள். பிறகு அவளது கணவனின் நண்பனான மனோதத்துவ டாக்டர் ச‌ன்னி (மோகன்லால்) , அவளை எப்படி அவள் வழியிலேயே சென்று குணப்படுத்துகிறார் என்பதுதான் கதை. "ஒரு முறை வந்து பார்த்தாயா" என்ற அருமையான தமிழ் பாடல் இப்படத்தின் இறுதிக் காட்சியில் அமைந்திருப்பது சிறப்பம்சம். ஷோபனாவிற்கு முதல் தேசிய விருதை வாங்கித் தந்தப் படம் .ஃபாசிலின் திரைக்கதை அசத்தலாக இருக்கும். இதே படத்தை சந்திரமுகி என்ற பெயரில் வாசு காமடி பண்ணியது அனைவரும் அறிந்ததே.

விஸ்மயதும்பத்து(2004):
இயக்கம்:ஃபாசில்
மருத்துவக் கல்லூரி மாணவியான கதாநாயகி(நயந்தாரா) சிறந்த மாணவியாக தேர்ந்தெடுக்கப்பட்டு மேற்படிப்பிற்கு அமெரிக்கா செல்லும் வாய்ப்புக் கிடைக்கிறது. அவ‌ளை ஒருத‌லையாக‌க் காத‌லிக்கும் ப‌யிற்சி ம‌ருத்துவ‌ர் அவளை அமெரிக்கா போகக்கூடாதென தடுக்கிறான், அவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதத்தில் எதிர்பாரா விதமாக அவளை பிடித்து தள்ளிவிடுவதில் அவள் சுய நினைவை இழக்கிறாள். பிறகு யாரும் அறியாது ஒரு வீட்டில் ஒளித்து வைக்கிறான். அவளை பற்றிய மர்மத்தை கண்டுபிடிக்க போலிஸ் வலைவீசி தேடுகிறார்கள். அப்போது அந்த ஊருக்கு புதிதாக வரும் மோகன்லால் கதாபாத்திரத்திடம்(ஆவிகளுடன் பேசக்கூடிய சக்தியுடையவர்) கோமா ஸ்டேஜில் இருக்கும் நாயகியின் ஆத்மா உதவியை நாடுகிறது.பிறகு அவளின் ஆத்மாவையும்,உடலையும் எப்படி ஒன்று சேர்த்து அவளை காப்பாற்றுகிறார் என்பது கதை. இதில் நயந்தாராவின்ஆத்மா மோகன்லாலை காதலிக்கத் தொடங்கும், ஆனால் ஆத்மாவை உடலோடு பொருத்தும்போது இந்த காதல் மறந்துபோய்விடுமோ என பயப்படும் அவளின் ஆத்மா உடலோடு சேர மறுக்கும் காட்சியெல்லாம் செம்ம விறு விறுப்பாக இருக்கும். இது நயந்தாராவிற்கு இரண்டாவது படம், அற்புதமான நடிகை என்பது இப்படத்தை பார்த்தவர்களுக்குத் தெரியும். இப்போது டோட்டலா வேஸ்டடிக்கப் படுகிறார். படத்தின் பெரிய பலம் செம்ம விறு விறுப்பாக இருக்கும் திரைக்கதை .

வடக்கும் நாதன்(2006):
இயக்கம்:ஷாஜூன் கார்யல்
ஒழுக்க சீலர் மற்றும் அறிவுஜீவியான கல்லூரி பேராசியருக்கும்(மோகன்லால்), அவரது முறைப்பெண்ணுக்கும்(பத்மப்பிரியா) திருமண ஏற்பாடுக‌ள் ந‌ட‌க்கையில், பேராசிரியர் திடிரென "இந்த பந்தங்களை கடந்து செல்கிறேன்" என கடிதம் எழுதிவைத்துவிட்டு எங்கோ சென்றுவிடுகிறார். அவர் ஏன் அப்படி செய்தார், திரும்பவும் வந்தாரா போன்ற பல கேள்விகளுக்கு மிகவும் அருமையாகவும், அசாத்தியமான பொறுமையுடனும் கதை சொல்லியிருப்பார் இயக்குனர். இந்த படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது சிலாகித்துப் பேச. அதிகம் படித்துக் கொண்டே இருப்பதாலேயோ என்னவோ மோகன்லால் "Bipolar Disorder" என்ற மனப்பிறழ்வு நோயால் பாதிக்கப்படுகிறார். மற்றவர்களிடமிருந்து அதை மறைக்க அவர் செய்யும் செயல்கள் அருமையாக படமாக்கப் பட்டிருக்கும். உண்மை எல்லோருக்கும் தெரிய வரும்போது, "நாம வரப்பில் நடந்து போகும்போது தடுமாறுவதில்லையா அதுபோலத்தான் இதுவும்" என சிரித்துக் கொண்டே அவர் சொல்லும்போது நமக்கு என்னமோ போலாகிவிடும். மோகன்லால் ஒரு பிறவிக் கலைஞன் என்பதை நிரூபித்த‌ ப‌ட‌ங்க‌ளில் இதும் ஒன்று.


இதே வரிசையில் இடம் பெற்ற "தன்மாத்ரா" படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. அருமையான படமென்று பலர் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன்.

மேற்சொன்ன படங்களை பார்க்கும்போது ஒரு சிறிய இடைவெளிவிட்டு பார்த்தால்தான் நன்றாக இருக்கும். தொடர்ச்சியாக பார்த்தால் என்னடா எல்லாப் படத்திலேயும் ஏதோ நோயாகவே இருக்கிறதே என்றுத் தோன்றும்.

குடும்பப் பிரச்சனைகளை எதார்த்தமாக அனுகிய படங்கள்,காமெடி வித் ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் படங்கள் ஆகியவவை நாளைய பதிவில்.

கொசுறு:மம்முட்டி நடித்தப் படங்களை அடுத்தத் தொடரில் எழுதுகிறேன்.

13 comments:

நாஞ்சில் நாதம் said...

தன்மாத்ரா பார்ப்பதற்கு முன் கிலுக்கம் பாருங்க. அருமையான காமெடி படம். ஆறாம் தம்புரான் ஒரு விறு விறுப்பான படம். இரண்டும் மோகன்லால் படங்கள்.

நல்ல படங்கள் நிறைய உள்ளன. நீங்க எங்க மலையாள படம் வாங்குவீர்கள் என்பதை தெரியப்படுத்தவும்.

நன்றி

முரளிகண்ணன் said...

மீண்டும் ஒரு அருமையான பதிவு.
மம்மூக்காவுக்கு வெயிட்டிங்

நாஞ்சில் நாதம் said...

எல்லா படங்களயும் பாத்திருப்பீங்க போல. உங்கள் மலையாளம் பிரிவை பார்த்தவுடன் தெரிந்தது. அறிவுரைக்கு மன்னிக்கவும்.
ஆகாச தூது பாத்தீங்களா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

தன்மந்திரா அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

அதேபோலத்தான் கிலுக்கம்..

இடையில் சிபிமலயில் இயக்கத்தில் வெளிவந்த ஒரு திரைப்படம். மோகன்லால் நடித்தது. அவர் ஒரு ஓவியர். அவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் விபச்சார விடுதியில் ஒரு அப்பாவி பெண்ணைக் காப்பாற்றப் போய் ஒரு கொலையை செய்துவிடுவார்.

எதிர்பாராமல் செய்த கொலைதானே என்றில்லாமல் மோகன்லாலுக்கு மரணதண்டனை கொடுத்துவிடுவார்கள். இத்திரைப்படம் எப்பேர்ப்பட்ட மனநிலை கொண்டவனையும் நிச்சயம் அசைத்துப் பார்த்துவிடும்.

இன்னொன்று காமெடி கலந்த சீரியஸ் திரைப்படம். ஏய் ஆட்டோ..
வேணு நாகவள்ளி இயக்கியது.. இதையும் பாருங்கள்..

அடுத்து பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் ஊர்வசியுடன் நடித்தது. ரோடு கான்ட்ராக்டராக வருவார் மோகன்லால்.. பாதி காமெடியும் மீதி சீரியஸாகவும் இருக்கும்.

மோகன்லாலில் பழைய படங்களில் முக்கால்வாசி நகைச்சுவை கலந்த சீரியஸ் திரைப்படங்கள்தான்..

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில் நாதம்,
நாளைய பதிவில் நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களை பற்றி எழுதுகிறேன் நண்பா.
"ஆகாச தூது" பார்த்திருக்கிறேன். எல்லோரும் பார்க்க வேண்டிய படமும்கூட.(கிளைமேக்ஸ்ல அழாமல் இருந்தீங்களா?)


நன்றி முரளி கண்ணன்(ஜூலையில் எழுதுகிறேன்)


நன்றி உண்மைத்தமிழன்,

நீங்க குறிப்பிட்டுள்ள "கிலுக்கம்","ஏய் ஆட்டோ" ஆகிய படங்களைப் பார்த்திருக்கிறேன்.

இரண்டாவதாகக் குறிப்பிட்டுள்ள ஓவியர் படம் பார்த்ததில்லை.

மோகன்லால், ரோடு காண்ட்ராக்டராக வரும் படத்தின் பெயர் "வெள்ளானக்களூடே நாடு" அருமையாக இருக்கும்.இதில் மோகன்லாலுக்கு ஜோடி ஷோபனா. ஊர்வசி நடித்தது வேறு ஒரு படம் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதை படத்தின் பெயர்"மிதுனம்".இரண்டுமே பிரியதர்ஷனின் இயக்கம்.

நாடோடி இலக்கியன் said...

நாஞ்சில் நாதம்,
//நீங்க எங்க மலையாள படம் வாங்குவீர்கள் என்பதை தெரியப்படுத்தவும்.
//
நீங்க எங்கே இருக்கீங்க நண்பா, சென்னை என்றால் ஸ்பென்சர் பிளாசாவில் நிறைய டிவிடி கிடைக்கிறது. ஆன்லைனிலே நிறைய தளங்களில் நல்ல படங்களின் தொகுப்புகள் இருக்கின்றது.

ஸ்ரீமதி said...

:)))

நாடோடி இலக்கியன் said...

welcome back srimathi.
// :))) //

இந்த பின்னூட்டத்திற்கு என்ன அர்த்தம்?புரியல சகோ

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

நாடோடி இலக்கியன் said...

தகவலுக்கு நன்றி தமிழினி.

meera said...

hello sir you blog is superb ,i am very big fan of actor karthick sir .By accidently i came to your blog i have read about mohanlal movies it was nice sir(before i saw siraichalai only)dasharatham movie was excellent please write about our navarasa nayagan nowadays no one is like this type of heroes even iam from this generation no one is equal to their natural acting thank you for wrote those unknown movies.

meera said...

hello sir you blog is superb ,i am very big fan of actor karthick sir .By accidently i came to your blog i have read about mohanlal movies it was nice sir(before i saw siraichalai only)dasharatham movie was excellent please write about our navarasa nayagan nowadays no one is like this type of heroes even iam from this generation no one is equal to their natural acting thank you for wrote those unknown movies.

Vivek N said...

மோகன்லால் ஓவியராக வரும் படம் பேரை சொல்லுங்கள்