Thursday, June 25, 2009

நான்.... அவள்..... நட்பு....!

பாலின வேறுபாடுகள் கூட அறிந்திராத வயதிலிருந்தே நமக்குள் அறிமுகம். காக்காக்கடி கல்கோனாவிலிருந்து காடையன் தோட்டத்தில் திருடித் தின்ற மாங்காய்வரை உன்னுடனான எத்தனையோ நினைவுகள் என்னோடு பயணித்துக்கொண்டே இருக்கின்றது.

ஆரம்பப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த அன்று மருதப்பன் ஆசிரியர், "ஆம்பள பசங்க தனியாகவும், பொம்பள புள்ளைங்க தனியாகவும் உட்காருங்க" என்று ஒன்றாக அமர்ந்திருந்த நம்மை பிரித்து உட்கார வைத்தபோது ஏனென்று புரியாமல் விழித்தது, ஓணாங்கொடி பஸ் விளையாட்டில் ஓட்டுனராய் இருந்த நான் எனது சட்டைப் பொத்தான்களை அவிழ்த்துவிட்டு வேகமாய் பஸ் ஓட்டியபோது காற்றில் படபடக்கும் எனது சட்டையில் ஒரு குட்டி ரஜினியாய் என்னைப் பார்த்ததும், பின்பக்கம் பொத்தான் வைத்து காலர் இல்லாத பெண்பிளைகள் சட்டையில் இருந்த நீ, ஒரு உப்பு மாங்காய் கீற்றை லஞ்சமாகக் கொடுத்து என்னுடைய சட்டையை ஓசியில் வாங்கி அணிந்து நீயும் ரஜினியானது என என்னின் பால்யத்தின் மலரும் நினைவெங்கும் ஆக்ரமித்துச் சிரிப்பவள் நீ.

ஆறாம் வகுப்பு வந்ததும் உன்னை வெளியூர் பள்ளியில் தங்கும் விடுதியில் சேர்த்தபோது, ஒவ்வொரு விடுமுறை நாட்களுக்காகவும் காத்திருந்து உன் வருகையைக் கொண்டாடும் மனது. நீ உனது புதிய பள்ளியின் கதைகளைச் சொல்லச் சொல்ல ஆசையாய்க் கேட்டுக் கொண்டிருப்பேன். "எங்க பள்ளிக்கொடத்துல காரு, பஸ்ஸு, ஏரோப்பிளேனு, எலியாப்டருலெயெல்லாம் பிள்ளைங்க படிக்க வருவாங்க" என்று நீ விட்ட புருடாக்களை ஆச்சரியமாய் கேட்டுக் கொண்டிருந்ததையெல்லாம் இப்போது அடிக்கடி நினைத்துச் சிரித்துக் கொள்வேன்.

கால ஓட்டத்தில் நான் கட்டவிழ்ந்த காளையாகவும், நீ மொட்டவிழ்ந்து மலராகவும் ஆன பின்பு எப்போதும் போல் நானிருக்க, உன்னிடமோ நிறைய மாற்றங்கள். கொஞ்சம் வெட்கம்,கொஞ்சம் தயக்கமுமாய் என்னிடமிருந்து மெல்ல விலக ஆரம்பித்த உனது நட்பு "நல்லாயிருக்கியா?" என்ற சம்பிரதாய விசாரிப்புகளாய், ஒன்றிரண்டு வார்த்தைகளாய் சுருங்கி பின் கடந்து போன ரயிலின் ஓசையாய் மெல்ல மெல்ல சிறு புள்ளியாய் தேய்ந்து மறைந்தே போனது.

என்னிடமிருந்து உன்னின் விலகலுக்கான காரணம் உன்னையும் என்னையும் நம்பிய உனது வீட்டாருக்கு அச்சுறுத்தியது நமது வயதே என்பதை நான் அறிந்து கொண்டபோது கல்லூரியில் அடி வைத்திருந்தேன்.

நீ என்னிடம்தான் பேசுவதை நிறுத்திவிட்டாலும் எனது தங்கையிடம் என்னைப் பற்றி விசாரித்துக் கொள்வதை நான் அறிந்தே இருந்தேன். கல்லூரிப் பேச்சு போட்டிக்கு நான் தயாராகும் போது இலக்கியத்தில் அப்போதே ஆர்வமாய் இருந்த உன்னிடம் குறிப்புகள் கேட்டு என் தங்கையை அனுப்பும்போதெல்லாம் அவ்வளவு ஆர்வமாய் எனக்காக பல புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எடுத்து உன் கையாலேயே எழுதிக் கொடுப்பாய்.குண்டு குண்டாய் கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும் உனது கையெழுத்து.
விடுமுறை நாட்களில் ஊரில் இருக்கும்போதும் கூட சில சமயம் உன்னை நேரில் காண நேரிடும்போதும் காணாதது போலவே சென்றுவிடுவாய். எனக்குத் தெரியும், சிறு வயதில் சுற்றித் திரிந்த அதே ஊர், அதே மக்கள்தான் என்றாலும் அதே பார்வை இருக்குமா? லேசாக சிரித்துவிட்டால் கூடப் போதுமே எனது மீசையும், உனது தாவணியும் அவர்களுக்கு ஆயிரம் புனைவுகளுக்கான 'கரு'க் களஞ்சியமாகிவிடுமே. ஆனால் எந்த ஒரு சூழலிலும் சிறுவயதில் உன்னை எப்படிப் பார்த்தேனோ அதே பார்வைதான் என்னிடத்தில். உனக்கும் அப்படித்தான் என்பதையும் அறிவேன்.

நான், பட்ட மேற்படிப்பை படித்துக் கொண்டிருந்த போதே உனக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது.திருமணக்கோலத்தில் உன் கணவருடன் மேடையில் நின்ற உன்னருகே நானும் எனது தங்கையும் பரிசுப் பொருட்களோடு வந்தபோது, "இவங்க பக்கத்து வீட்டு பசங்க" என்றபடியே எளிதாக முடிந்துபோனது நம் ஏரோப்பிளேன் கதைகள்.

கால ஓட்டத்தில் என் வாழ்விலும் ஒருத்தி, இதோ இன்று வேண்டியவங்க வீட்டுத் திருமணத்திற்கு ஊருக்கு வந்திருக்கிறோம் நான் என்னவளோடும், நீ உன்னவனோடும். இப்போதும் பார்த்தும் பார்க்காத மாதிரியே போய்க் கொண்டிருக்கிறாய், அன்று ஊர்க் கண்களுக்காய்த் தவிர்த்தாய்,இன்று யார் கண்களுக்காய்த் தவிர்க்கிறாய் என்பதையும் அறிவேன். சின்ன சின்ன குழந்தைகள் பந்தலில் அங்கும் இங்கும் பாலின வேறுபாடின்றி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள், நம் பால்யத்தை நினைவூட்டியபடியே. இப்படி நிறையச் சந்தர்ப்பங்களில் உன்னை நான் நினைத்துக் கொள்வேன், ஆனால் உனக்கு அப்படி இருக்காதோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்தபோது என் தங்கையிடம் சேட்டை செய்துகொண்டிருந்த என் மகனை, யாரும் அறிமுகப் படுத்தாமலே, "இது உன் அண்ணன் மகன் தானே அப்படியே அவனை மாதிரியே இருக்கான்,அதே சேட்டை" என்று கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டபடியே நகர்ந்து செல்கிறாய். எனக்கு கண்கள் லேசாய் கலங்குவது போல் உணர்ந்து அவசரமாய்த் துடைக்க முற்படுகையில் கையில் தட்டுப்பட்டது நீ சிலேட்டால் வெட்டிய கன்னத் தழும்பு.

"பள்ளித் தோழர்களின் நட்பு
அப்படியே இருக்க,
தோழிகளின் நட்போ
நினைவில் ஏதேதோவாய்
எதிரிலே ஏதுமற்றதாய்
..!"

21 comments:

RR said...

//பள்ளித் தோழர்களின் நட்பு
அப்படியே இருக்க,
தோழிகளின் நட்போ
நினைவில் ஏதேதோவாய்
எதிரிலே எதுவுமில்லாததாய்..!"//

சரியாக சொன்னீர்கள். நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்

அருண்மொழிவர்மன் said...

//என்னிடமிருந்து மெல்ல விலக ஆரம்பித்த உனது நட்பு "நல்லாயிருக்கியா?" என்ற சம்பிரதாய விசாரிப்புகளாய், ஒன்றிரண்டு வார்த்தைகளாய் சுருங்கி பின் கடந்து போன ரயிலின் ஓசையாய் மெல்ல மெல்ல சிறு புள்ளியாய் மறைந்தது.
//
எல்லாருமனேகமாக கடந்து வந்த அனுபவம் இது....

நல்ல பகிர்வு

நாடோடி இலக்கியன் said...

நன்றி RR.

நன்றி அருண்மொழிவர்மன்.

Barari said...

INTHA PADHIVU MEENDUM ENNAI PAALYATHTHIRKE KONDU SENDRU VITTATHU.ENAKKU THOONGGA IRAVUKALI ALITHTHU VITTAAI SAKOTHARA.

நாடோடி இலக்கியன் said...

ரொம்ப நன்றிங்க Barari

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!!

Nila said...

ஆம் ஆண்பிள்ளைகளுக்கு இடையேயான நட்பு காலங்கள் தாண்டியும் பசுமையாய் இருக்கும்.. ஆனால் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேயான நட்பு காலத்தின் கோலத்தில் அழிந்து அந்த நினைவுகள் மட்டுமே பசுமையாய் இருக்கும்... ஊரார், உற்றார், உறவினர் இப்படி எல்லோருக்குமாய் வேண்டி அழகான நட்பையும் இனிய நண்பர்களையும் கடைசிவரை பாதுகாக்க பெண்பிள்ளைகளுக்கு மட்டும் ஏனோகொடுத்துவைப்பதில்லை

நாடோடி இலக்கியன் said...

பூங்கொத்துக்கு மிக்க நன்றிங்க அன்புடன் அருணா,

நன்றி நிலா(முன்பு மாதிரி இல்லாமல் ஆண்,பெண் நட்பில் இப்போ நிறைய மாற்றம் இருப்பதுபோல் தோன்றுகிறது)

இளைய கவி said...

தல ரொம்ப நெகிழ்ச்சியாவும் கலக்கலகவும் இருக்கு தல. என்னை நானே பாத்த மாதிரி ஒரு உணர்வு தல.

நாடோடி இலக்கியன் said...

மிக்க நன்றிங்க இளைய கவி.

நாடோடி இலக்கியன் said...

@இளைய கவி,
உங்க பின்னூட்டத்தில் தல தலன்னு எத்தனை தல .
:)

Nila said...

//முன்பு மாதிரி இல்லாமல் ஆண்,பெண் நட்பில் இப்போ நிறைய மாற்றம் இருப்பதுபோல் தோன்றுகிறது//
ஆம் கண்டிப்பாக இப்பொழுது மாறி வருகிறது.... இருப்பினும் சமுதாயத்தின் பார்வையில் நல்ல நண்பர்கள் கூட கதலர்கலகவே சித்தரிக்கப்படுகிறார்கள்...

நாடோடி இலக்கியன் said...

மறுவருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க நிலா.

ஸ்ரீமதி said...

சொல்ல வார்த்தைகளே இல்லை... ரொம்ப சூப்பர் அண்ணா... :))

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி,
இந்த பதிவிற்கு உங்களின் பின்னூட்டம் எனக்கு மிக நிறைவைத் தருகிறது சகோதரி.

ஆழியூரான். said...

ஒரு சிறுகதை என்ற அடிப்படையில் இது என்னைக் கவரவில்லை. ஆனால் வாசிக்கும்போது ஒரு காட்சியை என்னால் கற்பனையில் ஓட்டிப்பார்க்க முடிந்தது. குறிப்பாக அந்த ஓணாங்கொடி. இந்த வார்த்தையைக் கேட்டே வருடங்கள் பலவாகின்றன. ஓனாங்கொடி என்ற வார்த்தையை வாசித்ததும் அத்தோடு கொஞ்ச நேரம் நின்றுவிட்டேன். அப்படியே நான் ஓணாங்கொடி வண்டி ஓட்டியதும் என் பின்னால் ஓடிவந்த பிள்ளைகளும் நினைவுக்கு வந்தார்கள். புல் அறுத்துக் கட்டி வரும்போது ஓணாங்கொடியில்தான் கட்டுவோம். உங்களிடம் வண்டல் மண்ணின் வார்த்தைகள் நிறைய கிடக்கின்றன. படிக்காத பழைய பதிவுகளை எல்லாம் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆழியூரான்,(இது சிறுகதை இல்லவே இல்லை நண்பா,புலம்பல் வகையில் ஏதோ எழுதியிருக்கிறேன்,சும்மா கட்டுரைன்னு வச்சிக்கலாம்.வண்டல் மண் வார்த்தைகள் அவ்வப்போது எடுத்துவிடுகிறேன்,சில சமயம் அது இயல்பாகவே வந்துவிடுகிறது. 'சின்னு' என்ற தலைப்பில் எழுதியிருக்கும் சிறுகதையில் ஓரளவுக்கு வண்டல் மண் வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பேன்).

விக்னேஷ்வரி said...

ரொம்பவும் ரசித்துப் படித்தேன். அழகு.

நாடோடி இலக்கியன் said...

மிக்க நன்றிங்க விக்னேஷ்வரி.

ஆடுமாடு said...

நல்லாயிருக்கு.
எல்லாருக்குமே இதுமாதிர்யான அனுபவங்கள் இருந்தாலும் அவரவர்களுக்கான அனுபவங்கள் அவரவர்களுக்கானதுதான்.

நன்றி நாடோடி.

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆடுமாடு,

//அவரவர்களுக்கான அனுபவங்கள் அவரவர்களுக்கானதுதான்.//

உண்மை நண்பரே.