Tuesday, June 16, 2009

மலையாளத் திரைப்படங்கள் ஒரு பார்வை

சமீப காலமாக 'உலக சினிமா'வைப் பற்றி பல பதிவுகள் இணையத்தில் பரவலாக வலம் வந்துகொண்டிருக்கும் இவ்வேளையில் நம்ம பக்கத்து மாநிலத்தில் வெளிவந்த சில படங்களைப் பற்றியது இப்பதிவு.

பத்து வருடங்களுக்கு முன்பு திரைப்படங்களுக்கான தேசிய விருது அறிவிப்பில் வங்காள மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களே ஒவ்வொரு வருடமும் மாற்றி மாற்றி சிறந்த படங்களுக்கான விருதுகளை அள்ளிச்செல்லும். எப்போதாவது தமிழ் உட்பட மற்ற மொழிப் படங்கள் அந்த வரிசையில் இடம்பெறும். அப்படி என்னதான் இருக்கிறது இந்த மலையாளப் படங்களில் வாங்க கொஞ்சம் மேலோட்டமா பார்க்கலாம்.

விருது வாங்குகிற படங்களை பார்ப்பதென்றாலே நம்மில் பலருக்கு ஆயாசமாய் இருக்கும்.ஆனால் நான் இங்கே பகிர்ந்து கொள்ளப் போகும் படங்கள் அசத்தலான திரைகதையால் நம்மைக் கட்டி போடும் மலையாளப் படங்களைப் பற்றியது, அதனால் பயப்படாமல் தொடருங்கள்.

பேரரசு,இளைய,சின்ன,புரட்சி தளபதிகளின் படங்களையே பார்த்துவிட்டு திடிரென உலக சினிமாவை பார்ப்பதற்குப் பதிலாக முதல் கட்டமாக வார்ம் அப் செய்து கொள்ளும் விஷயமாக இந்த மலையாளப் படங்களைப் பார்க்கலாம்.(இப்போது வரும் மலையாளப் படங்களுக்கு பேரரசுவின் படங்களை மூன்றுமுறை தியேட்டரிலேயேப் பார்க்கலாம்).நான் இங்கே சொல்லப் போகும் படங்கள் கொஞ்சம் பழைய படங்களே.

மலையாள சினிமாக்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.முதலாவதாக அழுத்தமான கதைகளோடு ய‌தார்த்தமான திரைக்கதையமைப்பில் வெளிவந்த கலைப்படங்கள்(ரொம்பப் பொறுமையை சோதிக்கும் படங்கள்),இரண்டாவது புதுமையான/வித்யாசமான கதையமைப்பும் நிறைய ய‌தார்த்தமும் கொஞ்சம் மசாலாவும் கலந்தவை(இந்த வரிசையில் எக்கசக்க அசத்தல் படங்கள் இருக்கு),மூன்றாவது நடுத்தர வர்கத்தின் பிரச்சனைகளை பேசும் குடும்பப் படங்கள் மற்றும் லாஜிக்கெல்லாம் இல்லாத முழுநீள நகைச்சுவைப் படங்கள்.(இயக்குனர் பிரியதர்ஷனின் நிறைய படங்கள் இதில் அடங்கும்). நான்காவதாக ஆக்சன் படங்கள்(தமிழ் படங்களின் பாதிப்பால் சும்மா பறந்து பறந்து அடிக்கும் படங்கள் ) .

(ஐந்தாவதாக 'அந்தப்' படங்களையும் சேர்துக்கலாம் என நீங்க முணுகுவது கேட்குதுங்க,கொஞ்சம் மெதுவா)

இங்கே முதலில் நான் எடுத்துக்கொள்ளப் போவது மோகன்லால் நடித்தத் திரைப்படங்களை மட்டுமே.

மேற்சொன்ன நான்கு பிரிவுகளிலும் மோகன்லால் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். எனது பார்வையில் மோகன்லால் படங்களுக்கு மற்றுமொரு பிரிவை ஒதுக்குவேன்,அது உளவியல் ரீதியான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்ட படங்கள்.

கலைப்படங்கள்:

வானப்பிரஸ்தம்(1999):மோகன்லாலுக்கு இரண்டாவது தேசிய விருதை பெற்றுத் தந்தத் திரைப்படம்.ஒரு ஏழை கதகளி கலைஞனின் வாழ்க்கையை பேசிய படம். ரொம்ப பொறுமையாகப் பார்த்தும் பாதி புரியாத படம். நம்ம ஊர் சுஹாசினிதான் இதில் கதாநாயகி. இந்த வரிசையில் இன்னும் சில படங்கள் இருப்பினும் இது ஒன்று போதும் எப்படியிருந்தாலும் நீங்க பார்க்கப் போவதில்லை.

புதுமை மற்றும் வித்யாசமான கதைக்களங்கள்:

கண்டிப்பா மிஸ் பண்ணக் கூடாத படங்கள் என நான் நினைக்கும் படங்கள், இப்பிரிவில். ரொம்பப் பெரிய இன்ரோவெல்லாம் கொடுக்கப் போறதில்லை. சும்மா ஸ்டோரியின் ஒன்லைன் மாதிரி சொல்கிறேன்.

தசரதம்(1989):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்

த‌ன் தாய் செய்த துரோகத்தால், பெண்களை வெறுத்து கல்யாணம் செய்துகொள்ளாமலேயெ குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்படும் கோடீஸ்வரன் ஒருவனுக்கும்(மோகன்லால் ), தனது கணவனின்(முரளி) உயிரைக் காப்பாற்ற, சூழ்நிலையால் வாடகைத் தாயாக இருக்க சம்மதிக்கும் பெண்ணொருத்திக்கும்(ரேகா) இடையே குழந்தைப் பாசத்தை வைத்து நடக்கும் போராட்டமும், பெண்கள் மேல் அவன் வைத்திருக்கும் தவறான கருத்தை எப்படி அவள் தகர்க்கிறாள் என்பதுமே கதை. மோகன்லாலின் மிகச் சிறந்த படமாகவும், அவராலேயே மீண்டும் நடிக்க முடியாத கதாபாத்திரமாகவும் நான் நினைப்பது இப்படத்தின் 'ராஜிவ்' கதாபாத்திரத்தைத்தான். சிபிமலயில் இயக்கத்தில் இப்படம் ஒரு மைல்கல். ஏற்கனவே இப்படத்தைப் பற்றி முழு விமர்சனத்தையும் இங்கே எழுதியிருக்கிறேன்.

தேவாசுரம்(1993):
இயக்கம்:ஐ.வி.சசி
கதை:ரஞ்சித்

பாரம்பரியமிக்க குடும்பத்தின் ஊதாரியான வாரிசு(மோகன்லால்), அவனை பழிவாங்கத் துடிக்கும் பரம்பரை எதிரி(நெப்போலியன்) என்று சாதாரணமாக துவங்கும் கதையில், நாயகனின் பிறப்பின் ரகசியம் தெரிய வரும்போது காதநாயகனிடம் ஏற்படும் மாற்றங்களை ரொம்ப உணர்வு பூர்வமாகப் பேசிய படம். இப்படம் தேவர் மகன் படம் பார்த்த எபெஃக்டைக் கொடுக்கும். ரௌடித்தனத்தின் உச்சமாக மோகன்லால், பரதநாட்டிய கலைஞரான ரேவதியை தனக்கு மட்டும் அவரை ஆடிக்காட்ட நிர்பந்திக்கும் போது வேறு வழியில்லாமல் ஆடிவிட்டு பிறகு ரேவதி விடுக்கும் சவால் படத்தின் முக்கியமான காட்சிகளில் ஒன்று. கதாநாயகியாக நடித்த ரேவதிக்கும் அவர் பிலிம் கேரியரில் இது முக்கியமான படம்.

கிரீடம்(1989):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்


தமிழில் அஜித் நடிப்பில்(?) வெளிவந்தது. அதே கதைதான் தமிழில் இருந்ததைப் போல மொக்கையாக இருக்காது. தன் மகனை பெரிய போலிஸ் ஆபிஸராகப் பார்க்கத் துடிக்கும் போலிஸ் தந்தை, சூழ்நிலையால் அதே மகனை குற்றவாளியாக பார்க்க நேர்ந்தால் என்னவாகும் என்பது கதை. தந்தையாக நடித்திருக்கும் திலகனின் நடிப்பிற்காகவே இப்படத்தை பலமுறை பார்க்கலாம். மோகன்லாலிற்கு சிறப்பு ஜூரி அவார்ட் வாங்கித் தந்தப் படம். இதன் இரண்டாவது பாகம் செங்கோல் என்ற பெயரில் வெளிவந்தது.

பரதம்(1991):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்

சங்கீதத்தைப் பிண்ணனியாகக் கொண்ட பெரிய குடும்பத்தின் மூத்த வாரிசுக்கும் (நெடுமுடி வேணு),இளைய வாரிசுக்கும்(மோகன்லால்) இடையே நடக்கும் ஈகோதான் கதையின் அடிநாதம். மோகன்லாலின் நடிப்பில் இப்படமும் ஒரு மாஸ்டர் பீஸ். இப்படத்தின் மூலமே மோகன்லாலுவிற்கு முதல் தேசிய விருது கிடைத்தது. நெடுமுடி வேணுவும்,மோகன்லாலுவும் நடிப்பில் நீயா? நானா நடத்திக் காட்டிய படம். இறுதிக்காட்சியில் எப்படிப் பட்டவராக இருப்பினும் கண்கள் கலங்கிவிடும். பல உணர்ச்சிமயாமான காட்சிகளோடு ரசிகனை ஒன்றவைக்கும்படி இருக்கும் இப்படத்தைத் தான் பி.வாசு 'சீனு'வாக்கி குதறித் தள்ளியிருந்தார். பி.வாசுவின் லீலைகளை இந்த பதிவில் இன்னும் விளக்கமாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.

ஸ்படிகம்(1995):
இயக்கம்:பரதன்
கதை:பரதன்

தன் மகனின் விருப்பத்திற்கு மாறான படிப்பை, வலுக்கட்டாயமாக திணிக்க முயற்சிக்கும் ஸ்ட்ரிக்டான ஆசிரியத் தந்தைக்கும்(திலகன்), அதனால் தந்தையையே பிடிக்காமல் நாளைடைவில் ரௌடியாகும் மகனுக்கும் (மோகன்லால்) இடையே நடக்கும் பனிப்போர்தான் கதை.கேரளாவில் சக்கை போடு போட்ட படம். இப்படத்தில் சில்க் ஸ்மிதாவும் இருக்கிறார்.தமிழில் "வீராப்பு" என்ற பெயரில் சுந்தர்.சி நடித்து வெளிவந்தது.தமிழிலும் நன்றாகவே எடுத்திருந்தார்கள்.

ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா(1990):
இயக்கம்:சிபிமலயில்
கதை:லோகிதாஸ்

நெடுமுடி வேணு ஒரு ஜ‌மின்தார் , அவரின் சொத்துக்களை அப‌க‌ரிக்கும் பொருட்டு உற‌வின‌ர்க‌ளே அவ‌ரைத்தீர்த்து க‌ட்ட‌ ஒரு ரௌடியை வ‌ர‌வ‌ழைகின்ற‌ன‌ர். ஆரம்பத்தில் கொலை செய்ய தக்க சமயம் பார்த்திருக்கும் ரௌடி எப்படி அப்பெரியவரின் உயிரையும், சொத்துக்களையும் உறவினர்களிடமிருந்து காப்பாறுகிறான் என்பது கதை. கதையின் நாயகி கௌதமி. என்றைக்குமே நிலைத்து நிற்கும் அமரகானமான "பிரமதவனம் வீண்டும்" பாடல் இந்த படத்தில்தான் இடம்பெற்றது.ரவீந்திரனின் அனைத்து பாடல்களுமே அசத்தலாக இருக்கும் இப்படத்தில்.


இதேப் பிரிவில் சதயம்,தூவானத் தும்பிகள்,நமக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள், பவித்ரம்,லால் சலாம் என இன்னும் சில படங்களும் இருக்கின்ற‌ன‌.


உளவியல் ரீதியான படங்களையும், நகைச்சுவைப் படங்களையும், மோகன்லால் படங்களில் எனக்கிருக்கும் விமர்சனத்தையும் நாளைய பதிவில் பார்ப்போம்.

கொசுறு:மம்முட்டி நடித்தப் படங்களை அடுத்தத் தொடரில் எழுதுகிறேன்.

18 comments:

rapp said...

என்ன அர்த்தத்துல கிரீடம் படத்தை, தமிழ்ல அப்டி சொதப்பினாங்கன்னே புர்ல.

80களின் பிற்பகுதியும், 90களின் முற்பகுதியும் மலையாள சினிமாவின் பொற்காலம்னு தோணும்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஹிஸ்ஹைனஸ் அப்துல்லா, தனம், ராசாவிண்டே மகன் - இவைகளை விட்டுவிட்டீர்களே..!

வெங்கிராஜா said...

பரதத்தை சீனு என்று கார்த்திக்கை வைத்து பி.வாசு கொடூரமாக எடுத்தது நினைவில்லையா?

தருமி said...

தொடர வாழ்த்துக்கள்.

நன்றி

Raj said...

பவித்ரம் னு ஒரு அருமையான படம் இருக்கு...மோஹன்லால்..ஷோபனா நடிச்சது

நையாண்டி நைனா said...

/*வார்ம் அப் செய்து கொள்ளும் விஷயமாக இந்த மலையாளப் படங்களைப் பார்க்கலாம்*/

நான் "வார்ம் அப்புக்காக" பார்த்த மலையாள படங்கள் எதுவுமே இந்த லிஸ்ட்லே இல்லியே... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்

நாடோடி இலக்கியன் said...

நன்றி ராப்
//என்ன அர்த்தத்துல கிரீடம் படத்தை, தமிழ்ல அப்டி சொதப்பினாங்கன்னே புர்ல//
அதாங்க எனக்கும் புரியல.
தமிழ் கிரிடத்தின் ஆரம்பக் காட்சியிலேயே சொதப்பல் தொடங்கிவிட்டது.மலையாளத்தில் மோகன்லாலுக்கும், பார்வதிக்கும் இருக்கும் காதலை ரொம்ப அழகாக சொல்லியிருப்பார்கள் தமிழில் திரிஷாவும், அஜித்தும் சேர்ந்து ..ஐயகோ..சரியான மொக்கை சீன்கள்).

80 -90 பொற்காலத்தைப் பற்றி இந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன், முடிந்தால் பாருங்கள்.


நன்றி உண்மைத் தமிழன்,
ஹிஸ் ஹைனஸ் அப்துல்லாவை காமெடியில் கூறலாமென்று நினைத்தேன்.ஆனால் இதில் சேர்ப்பதுதான் சரியாக இருக்கும் என தோன்றியதால் இதோ இப்போது சேர்த்துவிட்டேன் நண்பரே.
மற்ற இரண்டு படங்களும் இன்னும் பார்க்கவில்லைங்க.


நன்றி வெங்கிராஜா,
சீனுவைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறேனே நண்பா. சரியாகப் பார்க்கவும். மேலும் உங்களின் பார்வைக்காக அருகிலேயே மற்றுமொரு லிங்க்கையும் இணைத்திருக்கிறேன்

நாடோடி இலக்கியன் said...

நன்றி தருமி,

நன்றி ராஜ்,(மற்றும் பல படங்களில் பவித்திரத்தையும் குறிப்பிட்டுள்ளேன் நண்பரே,பவித்ரத்தையும் விரிவாக எழுதியிருக்கலாம்)

நன்றி நையாண்டி நைனா,(நீங்க பார்த்த லிஸ்டையும் கொடுங்க நண்பா ஆவலாக இருக்கிறேன் :) )

ஊர்சுற்றி said...

ரொம்ப நாளா மலையாளம் கத்துக்கணும்னு ஆசை. இந்தமாதிரி படங்களைப் பார்த்தாவது கத்துக்கறேன். தொடருங்கள் இந்தத் தொடர்பதிவை...

Edwin said...

மம்முட்டி நடித்த 'மிருகயா' ஒரு நல்ல படம்.

azhagan said...

Oru Vadakkan veera katha, chitram, Oru CBI diary kurippu, CBI diary kurippu II, no.20 madras mail, Nerariyaan CBI, innatha chintha vishayam, chinthamani kola case, rasathantram, achuvinte amma, kilukkam, and so many more. I havenot listed them in the order of release, I have just mentioned a few films which came to my mind while reading your article. To be frank we watch more malayalam films than Tamil films. We watched twenty 20 just an hour ago. good film.

குப்பன்_யாஹூ said...

its nice post. but i wonder why u missed maomooty films like yaathraa, madilukal, mrugayaa, iyer the great, bala ettan...

even mohanlal there r more films like CPI, iy aalu kadhai eludunnu..

அருண்மொழிவர்மன் said...

நல்ல பதிவு. யாராவது பரிந்துரை செய்தால் மட்டுமே நல்ல மலையாளாப் படங்களை அந்தப் பெயர் சொல்லி கடையில் எடுத்துப் பார்ப்பது வழக்கம். முன்பு கானா பிரபா இது போல நிறைய மலையாளப் படங்களி அறிமுகம் செய்தார். தொடர்ந்த் அறிமுகம் செய்யுங்கள்.

முரளிகண்ணன் said...

அருமையான பதிவு. மம்மூக்கா படங்கள் எப்போ?

ஒரு படம் பெயர் ஞாபகம் இல்லை.

மம்மூட்டி நோயினால் விரைவில் இறந்து விடுவார் எனக் கூறிவிடுவார்கள். அதன் பொருட்டு சில காரியங்களும் செய்வார். ஆனால் உயிர் பிழைத்ததும், அவர் பிழைத்ததே சங்கடமாகிவிடும் பலருக்கு. அவருக்கும்.
நாயகி கௌதமி.

இந்த படத்தைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள்

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஊர்சுற்றி(நானும் மலையாளம் கற்றுக்கொள்ள நினைத்தே மலயாளப்படங்கள் பார்க்க ஆரம்பித்தேன், பிறகு அதுவே பழக்கமாயிடுச்சு.குறிப்பா 85ல் இருந்து 95 வரைக்கும் மலையாளத்தில் வெளிவந்த எந்த படத்தை வேண்டுமானாலும் பார்க்கலாம்,அவ்வளவு தேர்ந்த இயக்குனர்கள் இயக்கிய அற்புதமான படங்கள் நிறைய இருக்கிறது)

நன்றி எட்வின்(இன்னும் மிருகயா பார்க்கலீங்க,இந்த வாரம் பார்க்கனும்)

நன்றி அழகன்(இந்த லிஸ்டில் சில படங்களை நான் இன்னும் பார்க்கவில்லைங்க.மலையாளப் படங்களின் எதார்த்த திரைக்கதையில் படங்கள் பார்த்து பழகிவிட்டால் நம்ம தமிழில் வரும் பல படங்களை ஜீரணிப்பதே கஷ்டமாகத்தான் தெரியும்.ஆனா இப்போ தமிழில் தாங்க நல்ல படங்கள் வருது.மலையாளத்தில் இப்போ ரொம்ப கேவலமா படம் எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க )

நன்றி குப்பன்_யாஹூ(நண்பரே இதில ஆச்சர்ய படுவதற்கு என்ன இருக்கிறது நான் தான் இந்த பதிவில் மோகன்லால் படங்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என தெளிவாகச் சொல்லியிருக்கிறேனே, மேலும் இப்போது உங்களுக்காக ஒரு டிஸ்கியையும் சேர்த்திருக்கிறேன் மம்முட்டி படங்கள் அடுத்தத்தொடரில் என்று.அப்புறம் நீங்க கொடுத்திருக்கும் லிஸ்ட்டில் பாலேட்டன் மோகன்லால் நடித்தது,பதிவின் நீளம் கருதியே பார்த்ததில் எனக்கு பிடித்த சில படங்களை மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன் நண்பரே,மற்றபடி நல்ல படங்கள் நிறைய இருக்கிறது)

நாடோடி இலக்கியன் said...

நன்றி அருண்மொழிவர்மன்(நேரம் கிடைக்கும்போது இன்னும் நிறைய படங்களை அறிமுகப்படுத்துகிறேன் நண்பரே. கானா பிரபாவின் நிறைய பதிவுகளை நானும் படித்திருக்கிறேன், நல்லதொரு ரசிகர் அவர்)

நன்றி முரளி கண்ணன்,(மம்முக்கா படங்கள் தனித்தொடராக விரைவில் வரும்.மேலும் நீங்க சொன்னப் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை,படத்தின் பெயர் "சுகர்த்தம்" என்று நினைக்கிறேன்

Sudhakar said...

நல்ல முயற்சி.ஒரு அறிமுக முயற்சி என்பதால்,திரைப்படங்களை குறித்த குறிப்புகள் தரமானவையாக இருக்கவேண்டும்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி சுதாகர்,
இது நல்ல மலையாளப் படங்களை பார்க்க நினைப்பவர்களுக்கு எனக்குத் தெரிந்த சில படங்களை அறிமுகப் படுத்தவே எழுத ஆரம்பித்தேன். அறிமுகக் குறிப்புகள் தரமானவையாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கின்றீர்கள்.இப்பதிவில் ஏதேனும் தரக் குறைவாக எழுதியிருக்கிறேனா? என்பதை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்கிறேன் நண்பரே.