Thursday, December 3, 2009

ஆப்பிள் குழி

கிராமத்தில் உள்ள எங்களது வீட்டின் முன்பக்கம் தானியங்கள் காயவைப்பதற்காக கான்கிரீட் தளம் போடப்பட்டிருக்கும். அத்தளத்தில் வீட்டை ஒட்டிய ஓரிடத்தில் சதுர வடிவில் ஒரு சிறிய குழியிருக்கும். எங்க‌ள் வீட்டிற்கு புதிதாக வ‌ருப‌வ‌ர்க‌ள் "ஏன் அங்கேட்டும் கான்கிரீட் போடவில்லை?" என்று கேட்பார்கள் . அப்படி எல்லோரையும் கேட்க வைக்கும் குழிதான் ஆப்பிள் குழி, அக்குழியின் பின்னணியில் ஏழு ருட‌ சுவாரஸ்ய கதையொன்று இருக்கிறது.

கி.பி 2000ம் ஆண்டு ஒரு நாள் காலை தெருவில் பழக்கன்றுகளை விற்றுக்கொண்டு வந்தவரிடம் மாதுளை,ஆப்பிள் மற்றும் சப்போட்டா ஆகியவற்றில் வகைக்கொன்றாய் வாங்கி வீட்டிற்கு முன்பாக இருக்கும் தோட்டத்தில் நட்டுவைத்தேன். நாட்கள் வாரங்களானது வாரங்கள் மாதங்களானது ஆனால் அந்த மூன்று செடிகளும் வைத்தபடியே இருந்தன. ”வைத்த கன்/ண் வைத்ததுதானோடி அப்படியே நிற்கின்றாய்” என்ற பாடல் மட்டும் 2000ம் வருடத்தில் வந்திருந்தால் அம்மூன்று செடிகளுக்கும் பொருத்தமாய் இருந்திருக்கும்.

மாதங்கள் வருடங்களாவதற்குள் பெய்த ஒரு பெருமழைக்காலத்தில் ஆப்பிள் கன்று மட்டும் சிறிது இரக்கம் கொண்டு வளரத்தொடங்கியது. மற்ற இரண்டு செடிகளுக்கும் இயற்கை,செயற்கையென ஊட்டச்சத்துகள் கொடுத்தும் “யாருகிட்ட” என்பதாய் நட்டபோது இருந்த நான்கு இலைகளோடு அப்படியே இருந்தன.

ஆப்பிள் செடி வேகமெடுத்து வளரத்தொடங்கியபோதுதான் கான்கிரீட் தளம் போடுவதற்கான வேலை ஆரம்பமானது. சரியாக ஆப்பிள் செடி மட்டும் தளத்தின் எல்லைக்குள் சிக்கிக்கொண்டது. எனது குடும்பத்தார், நண்பர்கள், கொத்தனார் என பலரும் என்னிடம் அந்தச் செடியை வேரோடு பெயர்த்து வேறி்டத்தில் நட்டுவிடலாம் என்றுச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்துவிட்டதால் வேறு வழியின்றி ஆப்பிள் செடியை அப்படியே வைத்து சுற்றிலும் தளம் போட்டுவிட்டார்கள்.

2000-2004 ஆண்டுவரை 4ஆம் வகுப்புத் தொடங்கி 12ஆம் வகுப்புவரையான மாணாக்கர்களுக்கு சிறப்பு வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தேன். அக் காலக்கட்டத்தில் எங்கள் வீடு ஒரு குருகுலம் போல இருந்தது. மாலை நேரத்தில் மட்டுமே பாடம் எடுப்பேன் என்றாலும் விடுமுறை நாட்களில் காலை ஆறு மணியிலிருந்தே எங்கள் வீட்டை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். (அந்த நாட்களைப் பற்றி தனியே ஒரு பதிவிடலாம் அத்தனை சுவாரஸ்யங்கள் அடங்கியவை). மாணவர்களும் என்னுடன் சேர்ந்து ஆப்பிள் செடி வளர்ப்பில் ஆர்வமாய் இருந்தனர். நான் ஊரில் இல்லாவிட்டாலும் யாராவது ஒருவர் தவறாமல் அதற்கு தண்ணீர் ஊற்றி பாராமரித்து வந்தனர்.

வழக்கமாய் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில் பள்ளியிலிருந்து திரும்பிய மாணவனொருவன் மைதானத்தில் இருந்த என்னிடம் ஆப்பிள் செடியை ஆடுகள் சேதப்படுத்திவிட்டதாக சொன்னதையடுத்து வேகமாக வீடு திரும்பினால் அத்தனை மாணாக்கர்களும் யூனிஃபார்மோடு சோகத்தோடு வாசலிலேயே உட்கார்ந்திருந்தனர். என்னைப் பார்த்ததும் ”அண்ணே எல்லாம் போச்சு” என்றபடியே அழவே தொடங்கிவிட்டாள் பத்தாம் வகுப்பு மாணவியொருத்தி.பெரும்பான்மையான நாட்களில் அந்த மாணவிதான் ஆப்பிள் செடியை சிரத்தையோடு கவனித்து வந்தவள்.

செடியில் இருந்த கிளைகள்,இலைகள் ஏதுமின்றி வெறும் குச்சி மட்டுமே மிச்சம் இருந்ததைப் பார்த்து வெகுண்டெழுந்த நான் எனது மாணவப் படைகளோடு ஆடுகளுக்குச் சொந்தக்காரர் வீட்டிற்குச் சென்றேன். “ஆடுகளை சும்மா பொத்தாம் பொதுவில் அவுத்து விடுகிற வேலையெல்லாம் இத்தோடு நிறுத்திக்கோங்க” என்று நான் ஆரம்பித்ததுதான் தாமதம் என் மாணவக் கண்மணிகள் ”இனிமேல் ஆடுகள் எங்க வீட்டு பக்கம் வந்தால் பிரியாணிதான்” என்கிற ரேஞ்சில் ஆளாளுக்கு பொங்கி எழுந்துவிட்டனர்.

பிறகு இலைகள் ஏதுமற்ற அந்த ஆப்பிள் செடியைச் சுற்றி வேலியடைத்து வைத்ததில் மீண்டும் வளரத்தொடங்கியது.முன்னை விட நிறைய கிளைகள் பரப்பி தளதளவென்று வேகமெடுத்து வளர்ந்ததைப் பார்த்த குறும்புக்கார மாணவனொருவன் இன்னும் அடமாய் நான்கு இலைகளோடு இருந்த மாதுளையையும்,சப்போட்டாவையும் பார்த்து ”ஒரு தடவ இந்தச் செடிகளையும் ஆடுகளை விட்டு மேயவிடணும்” என்றான்.

ஆப்பிள் செடி மீண்டும் வேகமாய் வளர்ந்து கிட்டத்தட்ட ஒரு மினி சைஸ் மரம் போன்று இருந்தபோது எனது அண்ணனின் திருமணத்தை முன்னிட்டு பந்தல் போடுவதற்காக கான்கிரீட் தளத்தின் உயரத்திற்கு நிகராக மற்ற இடங்களிலும் மண் பரப்பியபோது ‘என் கடன் வளராமல் இருப்பதே’ என அதே நான்கு இலைகளோடு இருந்த மாதுளையையும், சப்போட்டாவையும் பார்த்த வேலையாட்கள் அவற்றின் பின்னணி தெரியாமல், ”நல்ல கன்னுகளா இருக்கே தம்பி வேறிடத்தில் பிடுங்கி நட்டு வைக்கலாமே” என்றனர் . பதறிப்போய் “வேண்டாம் வேண்டாம் அப்படியே வைத்து மூடிவிடுங்க” என்றேன்.

பந்தல் போடுவதற்கு ஆப்பிள் செடி இடைஞ்சலாய் இருந்ததால் எனது பங்காளி ஒருவர் யாரிடமும் கேட்காமல் அரிவாளால் ஆப்பிள் செடியை வெட்ட முற்பட்டதைப் பார்த்த எனது மாணவன் ஒருவன் பதறியோடி தடுக்கையில் ”எதுக்குடா வீட்டுக்கு எதுக்க நாவ மரத்தை வளக்குறான் உங்கண்ணன்” என்றதும், ”இது நாவ மரமில்ல ஆப்பிள் செடி” என்றிருக்கிறான். “ஆப்பிள் செடியா?நம்ம ஊர் கிளைமேட்டுக்கு ஆப்பிள் செடியெல்லாம் வளராதுடா,இது நாவ மரம் மாதிரிதான் இருக்கு” என்றபடியே இலையைக் கிள்ளி முகர்ந்து பார்த்துக்கொண்டிருக்கையில் வீட்டிற்கு திரும்பிய என்னிடம் அவர் ”டேய் இது நாவ மரம்தான் வெட்டி தூர வீசுங்கடா” என்றார். இதைக் கேட்ட நான், எங்கள் வீட்டின் பின்புறம் இருக்கும் நாவ மரத்தின் இலையையும், ஆப்பிள் செடியின் இலையையும் அவரிடத்தில் கொடுத்து கசக்கி முகர்ந்து பார்க்கச் சொன்னேன்.அவரும் முகர்ந்துவிட்டு ”ஆமாடா இது வேற வாசம்தான் அடிக்குது” என்றார். அதைத் தொடர்ந்து எனது பிளஸ் டூ ஹர்பேரியம் நினைவுக்குவர அவரிடத்தில் மால்வேஸி, அஸ்ட்ரேஸி என ஆரம்பித்து தாவரக் குடும்பங்களைப் பற்றி விளக்கி ” நாவமரமும், ஆப்பிள் செடியும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் அதனால் தான் பார்வைக்கு ஒரே மாதிரியாக தெரிகிறது” என்றேன். மேலும் நாவ இலையை ஆடுகள் திங்காது என்றுவிட்டு இந்தச் செடியை ஆடுகள் மேய்ந்த கதையையும் அவரிடத்தில் சொன்னதும்தான் அவர் நம்பினார்.

எனது கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக எனது மாணவர்களும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வீக்கோ பௌடர் விளம்பரத்தில் வரும் ஆப்பிள் செடி தொடங்கி செய்திதாள்களில் வெளியான ஆப்பிள் செடிகளின் படங்களையெல்லாம் காட்டி சந்தேகப்படும் எல்லோருக்கும் விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

பிறகு நிறைய பேர் அதே சந்தேகத்தை எழுப்ப ஒரு கட்டத்தில் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. ஒருநாள் யாருக்கும் தெரியாமல் நாவ மரத்தின் இலையையும், சந்தேகத்துக்குரிய இலையையும் பக்கத்து வீட்டு ஆடுகளிடம் கொடுத்துப் பார்க்கையில் நாவ இலையை முகர்ந்துக் கூட பார்க்காத ஆடுகள் ஆப்பிள் செடியின் இலைகளை வேகவேகமாக ஸ்வாகா செய்ததும்தான் எனக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

இப்படி பல கட்ட சோதனைகளைத் தாண்டி செழித்து வளர்ந்து கொண்டிருந்த ஆப்பிள் செடியை எனது மாணவர்களை நம்பி ஒப்படைத்துவிட்டு நான் வேலைத்தேடி சென்னைக்கு பயணமானேன். வருடங்கள் உருண்டோட ஒரு நாள் எனது மாணவியொருத்தி எனக்கு போன் செய்து “அண்ணே ஆப்பிள் செடி காய்ச்சிருக்கு” என்றாள்.”வாவ்” என்ற அலறிய நான் ”எத்தனை காய்கள்” என்றேன். “தனித்தனியா காய்க்கலண்ணே கொத்து கொத்தா காய்ச்சிருக்கு” என்றதும் எனது மகிழ்ச்சி இரட்டிப்பானது.”ஆமாமா ஆப்பிள் கொத்து கொத்தாத்தான் காய்க்கும், இந்த வாரம் சனி ஞாயிறு இதுக்காகவே நான் ஊருக்கு வரேன்” என்றதும், ”இதுக்காக வர வேண்டாம்ணே ஏன்னா எல்லாமே நாவக்காய்ணே” என்றாள். சிறிது நேர அமைதிக்குப் பிறகு “ஊருக்குள்ள யாரும் பார்ப்பதற்குள் பசங்ககிட்டச் சொல்லி அந்த சனியன வெட்டி தூர வீசச்சொல்லு” என்றபடியே போன்காலை அவசரமாகக் கட் செய்தேன்.

மரத்தை வெட்டியெறிந்துவிட்டாலும் அந்தக் குழி நாவினால் சுட்ட வடுவாய் ஆப்பிள் கதையை ஞாபகப்படுத்தியபடியே இருக்கிறது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு முருங்கை விதை ஊன்றிக் கொண்டிருந்தபோது எங்க ஊரு பெருசு ஒன்று ”பார்த்துடா பூசணிக்காய் எதுவும் காய்ச்சுட போவுது” என்றார். முன்னெல்லாம் இப்படி நக்கலடிக்கும்போது கோபமாய் வரும் இப்போதெல்லாம் சிரிக்க ஆரம்பித்திருக்கிறேன்.பின்னே பழகிடுச்சுல்ல.

கொசுறு:எலுமிச்சை என்று வளர்த்தச் செடியொன்று இப்போது காய்த்துக் கொண்டிருக்கிறது ஆரஞ்சுகளாய். ஆரஞ்சுகளை இங்கே கிளிக்கி பார்க்கலாம்.

28 comments:

thamizhparavai said...

சூப்பர்.. அருமை...
மிகவும் ரசித்த பதிவு சமீப காலங்களில்...
வாரம் ஒரு முறையாவது பதிவிடுங்கள் இலக்கியன்...
ஆங்காங்கே சின்னச்சின்ன புன்னகையைச் சிந்த வைத்தது பதிவு...

☼ வெயிலான் said...

எழுத்து நடையில் நல்ல முன்னேற்றம்.

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா... ரசித்துப் படிக்க வைத்த நடை. ரொம்ப நல்லாருக்குங்க இலக்கியன்.

தினேஷ் said...

எளிமை குரு..

ஈரோடு கதிர் said...

மவனே.... பாட்டணி கிளாஸ் எடுத்த பங்காளி கையில மாட்டியிருக்கனும்... அப்போ தெரியும் சேதி

Unknown said...

நல்லாருக்குங்க..

இராகவன் நைஜிரியா said...

நல்லா வளர்த்தீங்க நாவல் ச்சே ஆப்பிள் மரம்...

அண்ணே அடுத்த தடவை நாவல் மரம் வாங்கி வச்சு பாருங்க... ஆப்பிள் காய்ச்சாலும் காய்க்கலாம்..:-)

Anonymous said...

எதோ பிடிக்க நினைச்சு வேற எதையோ பிடிச்ச கதை. நல்லா இருக்கு :)

அப்பாவி முரு said...

என்னக் கொடுமை சார் இது?

(இடையில கவனிச்சேன், பாடம்படிக்க வந்த பிள்ளைகளுக்கு டேர்ரரிசமும் கத்துக் கொடுத்தது கண்டிக்கத்தக்கது)

:)

ஆரூரன் விசுவநாதன் said...

அருமை நாடோடி இலக்கியன்

ரசிக்கும்படியான பகிர்வு

நாடோடி இலக்கியன் said...

நன்றி தமிழ்ப்பறவை(கண்டிப்பா நண்பரே,உங்க சிறுகதை படித்தேன் கலக்கியிருக்கீங்க).

நன்றி வெயிலான்(சந்தோஷம்,மகிழ்ச்சி).

நன்றி விக்னேஷ்வரி.

நன்றி வெற்றிக் கதிரவன்.

நன்றி சூரியன்.

நன்றி ஈரோடு கதிர்(ஹி ஹி).

நன்றி பட்டிக்காட்டான்

நன்றி நன்றிஇராகவன் நைஜீரியா(நல்ல ஐடியா அண்ணே).

நன்றி சின்ன அம்மிணி(அதேதான்).

நன்றி அப்பாவி முரு(அது வன்முறை அல்ல உரிமை போராட்டம் :) ).

நன்றி ஆரூரன்.

நாஞ்சில் நாதம் said...

நல்ல வேளை நீங்க ஆடு மாடு எதுவும் வளர்க்க முயற்சி பண்ணல

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப அருமை ..ரொம்ப அருமை.. கொசுறு டிஸ்கி எல்லாம் தனியாப் போடாம சேர்த்து வாசிச்சா நல்லதொரு சிறுகதை போல இருக்கு.. :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில் நாதம்,(எங்ககிட்டயேவா இருங்க நன்றி நாஞ்சில் நாதம் பார்ட்2 எழுதுகிறேன்).

நன்றி முத்துலெட்சுமி(கருத்தை அமல்படுத்திவிட்டேன்).

Thekkikattan|தெகா said...

:)) hey hey great... interesting read. thanks!

நாடோடி இலக்கியன் said...

நன்றி தெகா.

Thamira said...

சுவாரசியமான அனுபவத்தை இன்னும் சுவாரசியமான எழுத்தாக மாற்றியிருக்கிறீர்கள். என்ன.. அந்த நாவலை வெட்டியிருக்கவேண்டாமோ? குறைந்தபட்சம் சனியன் என்று திட்டாமலாவது இருந்திருக்கலாம். :-))

வெயிலானுக்கு ஒரு ரிப்பீட்டு.!

Saminathan said...

அருமையான பதிவு...

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி(ஆமாம் திட்டாமல் இருந்திருக்கலாம் நான் ஏமார்ந்ததிற்கு நாவல் மரம் என்ன செய்யும்.

அது செடி என்பதாலேயெ அவ்வளவு நாள் விட்டு வைத்திருந்தார்கள்,மரம் என்று தெரிந்ததும் நான் சொன்னாலும் சொல்லாட்டாலும் வெட்டியிருப்பார்கள் காரணம் களத்தில் தானியங்கள் காயவைக்க அதன் நிழல் தடையாக இருக்கும், வீட்டின் அருகே இருந்ததால் ஓடுகளுக்கும்,சுவருக்கும் பிரச்சனை ஏற்படும்).

நன்றி ஈரவெங்காயம்.

Unknown said...

நல்ல இடுகை அண்ணா... :)) அந்த மரத்தை வெட்டினதுக்கு ஆயிரம்(?!) காரணம் சொன்னாலும் எனக்கு கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு. :(( என்ன இருந்தாலும் ஆசப்பட்டு வளர்த்ததாச்சே? ஆப்பிள விட நாவல் பழம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எந்த வகையிலும் இது அதற்கு குறைந்ததில்லை தானே? :)))

"உழவன்" "Uzhavan" said...

என்ன பண்ணுறது.. நம்ம ஒன்னு நெனச்சா வேற ஒன்னு நடக்குது :-)

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி,(கஷ்டப்பட்டு வளர்த்ததிற்கு காய்த்திருந்த நாவல் காய்கள் பழுத்த பிறகே வெட்டினார்களாம் சகோ.

நன்றாகக் கனிந்திருக்கும் நாவப்பழத்தில் உப்பிட்டு சாப்பிட்டால் அதற்கிணை ஏதுமில்லை,எங்கள் வீட்டில் ஏற்கனவே நாவ மரம் இருக்கிறது,அது ஒன்றே ஊருக்கே நாவப்பழம் சப்ளை செய்கிற அளவிற்குக் காய்க்கும்).

நன்றி உழவன்.

வால்பையன் said...

// நாவக்காய்//

நாவல் பழமா?

நாடோடி இலக்கியன் said...

@வால் பையன்,(அதே நண்பரே).

PPattian said...

சுவாரசியம்..

ஆனாலும் ஆடு எப்படி நாவல் இலையை தின்றது.. ஏதாவது புது வகை நாவலாக இருக்குமோ?

நாடோடி இலக்கியன் said...

நன்றி புபட்டியன்(அதேதாங்க எனக்கும் குழப்பம்,மேலும் அந்த மரம்/செடி செடி போன்ற உயரத்திலேயே காய்த்துவிட்டது, நாவல்மரம் கொஞ்சம் பருத்து கிளைகள் வலுவான பிறகே காய்க்கும்,ஆனால் இந்த மரத்தில் ஆட்கள் ஏறி பறிக்கிற அளவிற்கு கிளைகளும் சரி மரமும் சரி பருமனாக இல்லை.ஆனாலும் காய்த்தது நாவல் காய்கள்தான் பழுத்து சுவைத்த பிறகே வெட்டினார்கள்).

அமுதா கிருஷ்ணா said...

மிக அருமையாக இருக்கிறது ஆப்பிள் குழி....

நாடோடி இலக்கியன் said...

நன்றி அமுதா கிருஷ்ணா.