Thursday, June 4, 2009

சின்னு

"இப்புடியேத் தூணுக்குத் தொணையா குந்திக்க,ஒரு ரெண்டாயிர்ருவாப் பொறட்டறதுக்குத் துப்பு இல்ல,நீயும் ஒரு ஆம்பள" என்று தனது கணவன் சங்கரனைக் காலையிலேயே அர்ச்சனைச் செய்துக்கொண்டிருந்தாள் விஜயா.

"நிறுத்துடி,காலையிலேயே ஒ ராமாயணத்தை ஆரம்பிக்காத நா என்ன சும்மாவா இருக்கே நாலு இடத்திலே சொல்லிவச்சிருக்கேன் பாப்போம்"

"ஆமா கிழிச்ச இன்னேரம் ஒ அக்கா தங்கச்சி வூட்டு தேவைன்னா என்னா பரபரப்ப, இன்னும் நாலு நாளுதா கெடக்கு ஏ அண்ண புள்ளயக் காதுகுத்து அதுக்குள்ள எதுனா தோது பண்ணல அப்பற நா மனுஷியாவே இருக்க மாட்டே"

ஒரு வாரமா இந்த பஞ்சாயத்துதான் ஓடிக்கிட்டு இருக்கு, சங்கரனும் பட்டாளத்தார் வீடு, கிட்டங்கிக்கார வீடு, காரவீட்டு அய்யாத்தொரன்னு பலபேருகிட்டக் கேட்டுப் பாத்துட்டான் ஒன்னும் வேலைக்காகல.

விஜயா இன்னும் ஏதோத் திட்டிக்கிட்டே இருக்குறாங்றது வீட்டுக்குள்ள பாத்திரங்கள் உருளும் சத்தத்திலேயேத் தெரிந்தது, இனியும் இங்கே உட்கார்ந்திருந்தா இருக்கிற மானத்தையும் ஏலம் போடுவான்னு நினைத்து கொடியில் கிடந்தக் காசித்துண்டைத் தோளில் போட்டுக்கொண்டு கூரையில் சொருகி வைத்த கணேஷ் பீடி கட்டில் பீடி ஒன்றையெடுத்துப் பத்த வைத்தபடியேக் கட்டிய லுங்கியோடு வெளியேக் கிளம்பினான் சங்கரன்.

சங்கரன் நல்ல பாட்டாளி,விவசாய சம்பந்தமான அத்தனை வேலைகளையும் செய்வான். வேலையில் படுசுத்தம், வாங்குற காசுக்கு வஞ்சகமில்லாம உழைப்பான்.ஆனா சம்பாதிக்கிற காசுல சாராயத்துக்கும், பீடிக்குமே பாதியைச் செலவழிச்சிடுவான்.


சங்கரனுக்கு சொத்துன்னு பார்த்தா நாலு செண்ட் இடமும், ஒரு சின்னக் குடிசையும், நாலு பசுமாடுகளும்தான்.மாடுகளை கவனித்துக் கொள்வது சங்கரனின் அம்மா சொர்ணம். சொர்ணத்திற்கு அந்த மாடுகள்தான் உசுரு.

வீட்டிலிருந்துக் கிளம்பிய சங்கரன் கறம்பக்குடியான் டீக்கடையில் நுழைந்தான். எட்டுக்கு ஆறு அளவில் மூனுபக்கம் களிமண்ணால் எழுப்பப்பட்டக் கட்டைச் சுவரும், சிமெண்ட்டால் பூசப்பட்ட ஒரு அடுப்பு மேடையும், கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் "காதல் பரிசு" ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக இருப்பதுதான் கறம்பக்குடியான் டீக்கடை.

உள்ளூர் பெரியசாமி மக ஓடிப் போனதிலிருந்து உலக அரசியல் வரை கறம்பக்குடியானுக்கு அத்துப்படி. டீ குடிக்க வர்ற பெருசுங்க கறம்பக்குடியான் பேசுறத, கறம்பக்குடியான் பொண்டாட்டி,சானம் தெளிச்சு மெழுகி பச்சையா வச்சிருகிற வாசலை "பொளிச் பொளிச்"சுன்னு வெத்லாக்கு எச்சியைத் துப்பி சிவப்பாக்கிக்கொண்டேக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

"அண்ணே ஒரு டீ" என்ற சங்கரனிடம் டீயை நீட்டியக் கறம்பக்குடியான், "சங்கரா, ஒன்னயப் பாத்தா வீட்டுக்கு வரச் சொல்லுன்னு பச்சத்துண்டுக்காரு சொன்னாரப்பா" என்றார்.

ரெண்டு நாளைக்கு முன்னாடி பச்சத்துண்டுக்காரிடம் பணம் கேட்டிருந்தது ஞாபகம்வர அவசர அவசரமாகக் கறம்பக்குடியானின் சக்கரத் தண்ணிய வாயில ஊத்திக்கிட்டு "கணக்குல வச்சுக்கண்ணே" என்று சொல்லியபடியே பச்சத்துண்டுக்காரர் வீட்டிற்குச் சென்றான்.

பச்சத்துண்டுக்காரர் எப்போதுமேத் தோளில் பச்சைக் கலர் சால்வையை அணிந்தபடியேதான் இருப்பார். ஊரில் எல்லோரும் காசித்துண்டோடு இருக்கையில் குஞ்சமெல்லாம் வச்ச சால்வையை அணிந்து செல்வதைப் பெரிய கௌரவமாக நினைப்பார். மெட்ராஸ்ல வேல பாக்குற அவரு மகன் சுரேசு வந்தா அந்தத் துண்டை போட்டுக்க மாட்டாரு. அவனுக்கு அது புடிக்காது. "யேம்ப்பா இத போட்டுக்கிட்டு எம் மானத்த வாங்குற ஃபிரண்ஸ்ஸெல்லாம் கிண்டல் பண்றாங்க" என்பான். சுரேசுக்குத் தெரியாது ஊருக்குள்ள நிறைய பேர் பச்சத்துண்டுக்காரு மாதிரி ஒரு சால்வ வாங்கணும்னு பெரிய லட்சியத்தோட இருக்கிறது.

"வாய்யா சங்கரா,காசு கேட்டிருந்தில்ல,ஒரு ஆயிர்ரூவா சாயங்காலமா வாங்கிக்க" என்றவர் கூடவே " கொஞ்சம் நெல்லு இருக்குது டி.என்.சியில போட்டுட்டு வந்திடு" என்றார். ஆத்திர அவசரத்திற்கு ஆயிரமோ ஐநூறோ பச்சத்துண்டுகாரருதான் கொடுத்து உதவுவாரு அதனால இப்படிச் சின்ன சின்ன வேலைகளும் அவருக்கு அப்பப்போ ஓசியாச் செய்ய வேண்டியிருக்கும்.

ஆயிர்ரூவாப் பொறட்டியாச்சு இன்னும் ஆயிரந்தான் எப்படியாவது தேத்திடலாம்னு மனதிலேயெ நினைத்தவன், சொன்ன வேலையை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றான்.

"என்னாச்சு" என்றாள் விஜயா.

"ஆயிர்ருவா சாயங்காலமாப் பச்சத்துண்டுக்காரு கொடுக்குறேன்னிருக்காரு"

"ஆயிரம் ஓவாயா,அத வச்சு என்னாத்தப் பண்றது. ஏற்கனவே ஏ அண்ணிக்காரி சாட பேசுறா, நீ சபையில ஏ மானத்த வாங்காம விடமாட்ட போலிருக்கு" என்று மறுபடியும் ஆரம்பித்தவளிடம்,

"ஏண்டி எழவெடுத்தவளே, எந்தலய அடமானம் வச்சாவது பணத்துக்கு ஏற்பாடு பண்ணிர்றேன்,செத்த நொய் நொய்யிங்காம வவுத்த பசிக்குது சோத்தப் போடுறியா" என்று சங்கரன் கோபமாய் சீறியபோது,

"ம்ம்ம்ம்....மா"அலறியது பசுமாடு.

"யம்மோவ்,சின்னு கத்துது பாரு அதுக்கு ரெண்டு எரயெடுத்துப் போடு"என்று தன் தாய் சொர்ணத்திடம் கூறினான் சங்கரன்.

"ம்ம்ம் சின்ன்ன்னு" என்று அழுத்தி இழுத்த விஜயா,"ஏய்யா இந்தக் கிழட்டு மாட்ட எதுக்கு இன்னமும் வச்சுக்கிட்டு இனிமேல் அது கன்னு ஈனப் போறதில்ல எதுக்கு தீனிக்குத் தெண்டமா கெடக்கு,பேசாம அத வித்துடலாம். நீயும் யார்கிட்டயும் காசுக்காகக் கையகட்டி நிக்கவேண்டாம்"என்றாள். மேலும் "மாட்டுயாவாரி கோயிந்தன வரச்சொல்லி சட்டுப்புட்டுன்னு தள்ளிவுட்ற வழியப் பாரு" என்றாள்.

இதைக் கேட்டுக்கொண்டிருந்த சொர்ணத்திற்குத் தூக்கிவாரிப் போட்டது. பெத்தப் புள்ளயாட்டமா வளத்த மாட்ட அடிமாட்டுக்கு விக்கச் சொல்றாளே என எண்ணிக்கொண்டே சங்கரன் என்ன சொல்ல போறானோன்னு ஏற்கனவே தட்டி முடித்த ராட்டிக்கு ஒத்தடம் கொடுப்பதுபோல் மெதுவா தட்டியவாறே காதைத் தீட்டினாள்.

ஒரு வாரமா பணத்துக்காகக் கிடந்து அலைந்ததை நினைத்துப் பார்த்த சங்கரன் விஜயாவின் யோசனைக்கு சரியென்று தலையாட்டினான்.

அன்னிக்கி ராத்திரி முச்சூடும் சொர்ணத்தாலத் தூங்க முடியல, பதினஞ்சு வருசத்துக்கு முந்தி சின்னுவை ஈன்ற மூனாவது நாளே அதன் தாய், பாம்பு கடித்து இறந்து போக, சொர்ணந்தான் புட்டி பால் கொடுத்து சின்னு என்று பேர் வைத்து புள்ள மாதிரி வளர்த்து வந்தாள். சொர்ணம் கிணத்துக்குத் தண்ணி எடுக்கப் போறப்பவெல்லாம் கூடவே சின்னுவும் ஒவ்வொரு நடைக்கும் சொர்ணத்தோடவே போய் வந்துக் கொண்டிருக்கும். தண்ணியெடுக்க வரும் மற்ற பொம்பளைங்க "என்ன சொர்ணத்தக்கா ஒம்மவ ஒன்னிய விட்டு பிரியமாட்டாளா" என்று கிண்டலடிப்பார்கள். அப்போவெல்லாம் "ஆமாண்டி சொன்னாலுஞ் சொல்லாட்டியும் எம்மவதான்" என்று கூறியபடியே சின்னுவின் முகத்தை வருடி திருஷ்டி முறிப்பாள்.

சின்னு முதல் கன்றை ஈன்ற போது நல்லபடியாகக் கன்றை ஈன்றுவிட்டால் பாலத்தளி செல்லியம்மனுக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டு மொட்டை போட்டுக் கொண்டது, சின்னுவின் பால் காசில் தன் மகள் செல்வியை கட்டிக் கொடுத்தது, ஒரு முறை சங்கரன் குடித்துவிட்டு வந்தபோது சொர்ணம் அவனை ஏதோத் திட்டிவிட,சங்கரன் கோபத்தில் சொர்ணத்தைக் கீழேத் தள்ளிவிட்டபோது பக்கத்தில் நின்ற சின்னு சங்கரனை ஆக்ரோஷமாக முட்டியது என ஒன்னு ஒன்னா நினைவுக்கு வந்து அவளைத் தூங்கவிடாமல் செய்தது. பாதி ராத்திரியில் எழுந்துக் கொட்டடியில் கட்டிக்கிடந்த சின்னுவின் அருகில் போய் சின்னுவின் தாடையை மெதுவாகத் தடவிக் கொண்டிருந்தாள்,அவளின் இடுக்கியக் கண்ணில் கண்ணீர் வழிந்துக்கொண்டேயிருந்தது.

காலையிலேயே மாட்டுயாவாரி கோயிந்தன் வந்து நின்னதை எதிர்பார்க்காத சங்கரன், "என்னய்யா கோயிந்தா, நானே ஒன்னய பாக்கனும்னுட்டு இருந்தேன்,நீயே வந்து நிக்குற"
என்றான்.

"மாடு நிக்குதாம்ல,அதா பாத்துட்டு போலாம்னு வந்தேன்" என்ற கோவிந்தன் அதே ஊரைச் சேர்ந்த மாட்டு வியாபாரி, கேரளாவிற்கு மாடுகளை வாங்கி அனுப்புவதுதான் அவனுக்குத் தொழில்.

"கொப்ப மவளே என்னா வேகமா வேலப் பாத்திருக்கா" என்று விஜயாவை மனசுக்குள்ளேயேத் திட்டிக்கொண்டு, சின்னு கட்டிக் கிடக்கும் கொட்டடிக்கு கோவிந்தனை அழைத்துச் சென்றான் சங்கரன்.

படுத்துக்கிடந்த சின்னுவின் முதுகில் கோவிந்தன் தட்டியதும்,சோம்பல் முறித்தபடி எழுந்து நின்ற சின்னுவைச் சுற்றி வந்துப் பார்த்த கோவிந்தன், "டங்கரா இத ரெண்டு வருடத்துக்கு முன்னாடியே வித்துருக்கணுமப்பா" என்றான். கோவிந்தனுக்கு ’ச’ வரிசை உச்சரிக்க வராது, 'ச'வுக்கு பதில 'ட' சவுண்ட்தான் வரும். இதில என்ன கொடுமைன்னா அவன் பொண்டாட்டி பேரு சரசு. கல்யாணமான புதுசுல இவன் "டரடு டரடு" சொன்னதக் கேட்டு மெரண்டுபோன சரசு தன் பேரையே இவனுக்காக ராணின்னு மாத்திக்கிட்டா.

"டங்கரா மாட்டுல வெறுந்தோலுதான் இருக்கு" என்று தன் யாவார புத்தியோடப் பேசிக்கிட்டே"என்ன வெல சொல்ற?" என்றான்.

"நீயே சொல்லுய்யா,என்ன கொடுக்கலாம்"

"இல்லப்பா ஒனக்கு ஒரு கணக்கு இருக்குமுல்ல"

"சரி ரெண்டாயிரத்தைனூறு கொடுத்துட்டு ஓட்டிக்க"

"என்ன நக்கலா பண்ற, ஆயிரத்தைனூறுதான் எங்கணிப்பு. அதுக்கு மேல இதில ஒன்னுமில்ல"

"யோவ் ஒ மாட்டுயாவாரி புத்தியக் காட்டாம உள்ளூருகார மாதிரி பேசு, கொஞ்சம் பாத்து சொல்லுய்யா"

"டரி உனக்கு வேண்டா எனக்கு வேண்டா, ஆயிரத்தி எண்ணூறு இதுக்குமேல பிடிறாதே" என்று கூறிக்கொண்டே சங்கரன் கையில் நூறு ரூபாய் அட்வான்ஸையும் திணித்துவிட்டு இரண்டு நாள் கழித்து மாட்டை ஓட்டிக் கொள்வதாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.

சங்கரன் வாங்கிய அட்வான்ஸைப் பார்த்தும் விஜயாவும்,சொர்ணமும் எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்.

அடுத்த ரெண்டு நாளும் சொர்ணத்தால் இயல்பாய் இருக்க முடியவில்லை. இதற்கு முன் எத்தனையோ மாடுகளை விற்றிருக்கிறாள்,ஆனால் சின்னு விஷயத்தில் மட்டும் அவளால் ஏதோ மாடுதானேன்னு இருக்க முடியவில்லை. வழக்கம் போல் மாடு மேய்க்கப் போனவளின் அருகிலேயே நின்று மேய்ந்து கொண்டிருந்த சின்னு, சொர்ணத்தின் கையை முகர்ந்துப் பார்த்தது, எப்போதும் எதாவது தீனி கொறித்துக்கொண்டே இருக்கும் சொர்ணம் சின்னுவுக்கும் ஊட்டிவிடுவது வழக்கம். இன்றைக்கும் அந்த நினைப்பில் கையை முகர்ந்துப் பார்த்த சின்னுவை,"சனியன போ அங்கிட்டு " என்று கையில் வைத்திருந்தக் குச்சியால் அடித்து விரட்டி தன் ஆற்றாமையை சின்னுவிடம் காட்டினாள். இதை எதிர்பாராத சின்னு சற்று மிரண்டு சிறிது ஓடித் திரும்பி சொர்ணத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது.

இரண்டு நாள் கழித்து அந்தப் பகுதியில் வாங்கிய நிறைய மாடுகளை லாரியில் ஏற்றியபடியே வந்து இறங்கிய கோவிந்தனையும், லாரியில் விழிபிதுங்கி நிற்கும் மாடுகளையும் பார்த்த சொர்ணத்திற்கு சின்னுவை நினைத்துத் துக்கம் தொண்டையை அடைத்தது.

லாரியைவிட்டு இறங்கி வந்த கோவிந்தன் சங்கரனிடம்,"இந்தாப்பா மீதி பணம் டரியா இருக்கான்னு பாத்துக்க, அப்படியே மாட்டையும் கயிறு மாத்தி புடிட்டுக் கொடு" என்றான்.

"கோயிந்தா, ரெண்டு நாளா மனசேச் சரியில்லப்பா, இந்த மாட்ட பெத்தப் புள்ளயாட்டமா வளத்துட்டோம், அதப் போயி அறுப்புக்குக் கொடுக்க மனசு ஒப்பல, சாவுற வரைக்கும் அது இங்கனயே கெடந்துட்டு போகட்டும், எம் பொண்டாட்டிதான் ஏதுனா திட்டுவா அவ என்ன புதுசாவா திட்டப்போறா. இந்தா நீ கொடுத்த அட்வான்ஸ், கோச்சுக்காதப்பா" என்றபடியே சங்கரன் அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்ததைப் பார்த்தச் சொர்ணம் சின்னுவின் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டு " எம் மக்க்க்...கா" என்று விம்மி வெடித்து அழத் தொடங்கினாள்.


உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது

33 comments:

மொழி said...

அருமை....பல உணர்ச்சிகளை கலந்து கதை சொல்லி இருக்கீங்க..

//கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் காதல் பரிசு ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக
:-))

வாழ்த்துக்கள்.

தினேஷ் said...

//இப்புடியே தூணுக்குத் தொணையா குந்திக்க//

ஆஹா என்ன ஒரு தொடக்கம் ...

டூப்பர் ...

மயாதி said...

goodddddddddddddd

நாடோடி இலக்கியன் said...

@மொழி,
ரொம்ப நன்றிங்க.

1000 வரிகளுக்குள் அடக்க நினைத்ததால் கல்லாப்பெட்டி மாதிரியான இன்னும் சில விவரணைகளை எடிட் பண்ண வேண்டியாதா போச்சுங்க.

@சூரியன்,
வாங்க நண்பா,தொடக்கத்தை மட்டும்தான் படிச்சீங்களா?
:)


@மயாதி,
ரொம்ப நன்றிங்க.

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லாருக்கு

ஐந்திணை said...

நல்லா வந்திருக்கு, பரிசு பெற வாழ்த்துக்கள்

ttpian said...

good:wishes to the author!
my full marks!
k.pathi
karaikal

*இயற்கை ராஜி* said...

அருமை....நல்லா வந்திருக்கு

Anonymous said...

நல்லாயிருக்கு மக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்

தொடர்பவன் said...

நல்லாயிருக்கு மக்கா வெற்றி பெற வாழ்த்துக்கள்

Menaga Sathia said...

ரொம்ப நல்லாருக்கு!!

கோவி.கண்ணன் said...

அருமையாக வட்டாரவழக்கோடு எழுதி இருக்கிங்க, சங்கரன், விஜயா கொஞ்சம் மேல் தட்டுப் பெயர்களாக இருப்பதால் ஏழைக் கதைக்கு கொஞ்சக்கோண்டு ஒட்டுதல் இல்லை.

:)

வெற்றிபெற வாழ்த்துகள் !

கோவி.கண்ணன் said...

//கறம்பக்குடியான் எந்த காலத்து இளைஞன்றத காட்டிக் கொடுக்கும் காதல் பரிசு ராதாவின் புகைப்படம் ஒட்டிய கல்லாப் பெட்டியுமாக //

:) உங்களிடம் பல கிராமத்துக்கதைகள் இருக்கும் போல !

நாடோடி இலக்கியன் said...

@அன்புடன் அருணா,
ரொம்ப நன்றிங்க அருணா.

@ஐந்திணை,
முதல் வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ஐந்திணை.

@இயற்கை,
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

@ttpian
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிங்க K.பதி.

நாடோடி இலக்கியன் said...

@தொடர்பவன்,
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தொடர்பவன்.(அனானியா பின்னூட்டம் போட்டதும் நீங்கள்தானா?ஒரே மாதிரியாக இருப்பதால் கேட்கிறேன்)

@மேனகாசத்யா,
ரொம்ப நன்றிங்க.

@கோவி.கண்ணன்,

//சங்கரன், விஜயா கொஞ்சம் மேல் தட்டுப் பெயர்களாக இருப்பதால் ஏழைக் கதைக்கு கொஞ்சக்கோண்டு ஒட்டுதல் இல்லை//

எங்க ஊர் பக்கம் சங்கரன், விஜயாங்கிற பேரெல்லாம் நிறைய கீழ்தட்டு மக்களுக்கு இருக்கும்ங்க. ஆனால் விஜயாங்கிற பேரை விசியா என்று கூப்பிடுவார்கள். முனியன்,மாயாண்டி,காளியம்மா,முனியம்மா மாதிரியான பெயர்களெல்லாம் ஐம்பதை கடந்தவர்களுக்குதான் இருக்கிறது.அதனால்தான் இந்த பெயர்களை வைத்தேன் .

உங்க ஆலோசனையையும் ஏற்றுக்கொள்கிறேன் நண்பரே.

//உங்களிடம் பல கிராமத்துக்கதைகள் இருக்கும் போல //

படிப்பதற்கு நீங்க ரெடின்னா எழுத நான் ரெடி.உண்மையிலேயே கிராமத்தில் வித்தியாசமான குணநலன்களுடன் நிறைய மனிதர்கள் இருப்பார்கள்.ஒவ்வொருத்தரை பற்றியுமே தனிதனி கதைகள் எழுதலாம் அவ்வளவு சுவராஸ்யம் அடங்கிய மனிதர்கள்.

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோவியாரே...!

குசும்பன் said...

அருமை! நீங்களும் தஞ்சாவூரா?

நாடோடி இலக்கியன் said...

@குசும்பன்,

தஞ்சாவூரேதாங்க.

சென்ற வருடம் பூங்காவின் புதுவடிவ முன்னோட்டம் என்ற உங்க இடுகையில் நானும் உங்களிடம் இதே கேள்வியை கேட்டிருந்தேன். உங்களிடமிருந்து பதிலில்லை இருப்பினும் நீங்க தஞ்சை பகுதியை சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டுமென்பது உங்க எழுத்துக்கள் மூலமாக நானாகவே அனுமானித்துக் கொண்டேன்.

முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி குசும்பன்.

குசும்பன் said...

சென்ற வருடம் பூங்காவின் புதுவடிவ முன்னோட்டம் என்ற உங்க இடுகையில் நானும் உங்களிடம் இதே கேள்வியை கேட்டிருந்தேன். உங்களிடமிருந்து பதிலில்லை //

மன்னிக்கவேண்டுகிறேன், இப்பொழுது போய் திரும்ப பார்த்தேன் கடைசியா வந்த மூவருக்கு மட்டும் பதில் சொல்லவில்லை:(

படிச்சது எல்லாம் தஞ்சை பூண்டி கலைகல்லூரியில். முனிசிபல் காலணியில் தான் இருந்தேன்.

அன்புடன்
குசும்பன்

நாடோடி இலக்கியன் said...

பூண்டியில்தான் படித்தீர்களா?

தஞ்சாவூரான்,ஜோசப் பால்ராஜ்,நீங்க இப்படி நிறைய பூண்டி கல்லூரி மாணவர்கள் வலையுலகில், கேட்பதற்கே ரொம்ப சந்தோஷமா இருக்குங்க.

நானும் கிரேட் பூண்டியில்தான் படித்தேன்.

☼ வெயிலான் said...

பரிசுக்குரிய கதை!!!

வாழ்த்துக்கள் நண்பா!

நாடோடி இலக்கியன் said...

@வெயிலான்,
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி வெயிலான்.

Unknown said...

கதைப் படித்தேன்.நல்லா இருக்கு.

நிறைகள்:
சின்னுவோ அல்லது சொர்ணமோ வழக்கமாக சாகடிப்படவில்லை.
சாகடித்தால் தின மலர் கதைதான்.

வட்டார வழக்கு.தெளிவான ஓட்டம்.

//"கொப்ப மவளே என்னா வேகமா வேல பாத்திருக்கா" என்று விஜயாவை ம// நல்லா இருக்கு.

குறைகள்:
கோவி சார் சொன்ன(பெயர்கள்)மாதிரி எனக்கும் பட்டது.
//எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்//என்பதை விட “அவளுக்கு ஆ.கண்ணீர் அம்மாவுக்கு
அழுகைக் கண்ணீர் என்ற ரீதியில்,,சொல்லியிருக்கலாம்.
--------------------------------
விஜயாவே மனசு மாறி சின்னுவை மீட்பது மாதிரி வைத்திருந்தால் கதைக்கு எமோஷன் கூடும்.

வாழ்த்துக்கள்!

நாடோடி இலக்கியன் said...

நன்றி ரவி ஷங்கர்,
//கோவி சார் சொன்ன(பெயர்கள்)மாதிரி எனக்கும் பட்டது.//

அப்படியா,ஒரு வேளை கீழ்த்தட்டு மக்களின் கதைகளில் வழக்கமாக இடம்பெறும் சில பெயர்களுக்கு நாம் பழக்கப் பட்டுவிட்டோமோ,ஏனெனில் உண்மையில் விஜயாங்கிற பேரைவிடவும் மாடனான பெயர்களிலெல்லாம் எங்க ஊரில் இருக்கிறார்கள். இருப்பினும் கோவியாரும்,நீங்களும் அந்தப் பெயர் ஒட்டுதல் இல்லாமால் இருப்பதாக சொல்வதால் பெயரை விரைவில் மாற்றிவிடுகிறேன்.

//எதிரெதிர் உணர்ச்சிகளின் விளிம்பில் இருந்தார்கள்//
எனக்குமே குறிப்பிட்ட அந்த வரிகள் கொஞ்சம் செயற்கையாகவேத் தோணியது,முன்னர் வேறுவிதமாக எழுதி பிறகு ஆயிரம் வார்த்தகளுக்குள் அடக்க நினைத்து இப்படி ஆகிவிட்டது(இப்போ ரூல்ஸ் தளர்த்திட்டாங்க).கொஞ்சம் யோசித்து மாற்ற முயற்சிக்கிறேன் நண்பரே.


//விஜயாவே மனசு மாறி சின்னுவை மீட்பது மாதிரி //

விஜயா சின்னுவை முதலில் பார்த்தபோதே அது கிழட்டு மாடுதான்(அவள் பார்வைக்கு அது ஒன்றுக்கும் உதவாத மாடு).அதனால்தான் கதையில் கல்யாணம் ஆகி ஆறு வருடம்தான் ஆகிறது என்கிற வரிகளை எழுதியிருப்பேன்,தவிரவும் மாமியார்,மருமகள் உறவும் சொர்ணத்திற்கும்,விஜயாவிற்கும் இடையில் எந்த மாதிரி என்பதையும் நேரடியாகச் சொல்லாமல் சொல்லியிருப்பேன்,
//ஏய்யா இந்த கிழட்டு மாட்ட எதுக்கு இன்னமும் வச்சுக்கிட்டு //
இந்த வரிகள் சின்னுவுக்கானது மட்டுமல்ல சொர்ணத்தையும் அவள் இதன் மூலம் மறைமுகமாக ஏசுகிறாள்.அப்படிப் பட்ட குணம் கொண்டவள் சின்னுவை காப்பாற்றுவது போல் சொன்னால் கதைக்கு சுவராஸ்யம் கிடைக்குமா என்பது தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக எதார்த்தத்தை விட்டு விலகி நிற்கும் என்பது என்னுடைய எண்ணம்.

அருமையானதொரு விமர்சனம் தந்தமைக்கு மிக்க நன்றி.

Kalpagam said...

மிக மிக இயல்பான, உணர்ச்சிகரமான கதை. நல்லவேளை கடைசி நேரத்திலாவது சங்கரனுக்கு புத்தி வந்ததே என்று நிம்மதியாக இருந்தது!

வாழ்த்துகள்!

நாடோடி இலக்கியன் said...

மிக்க நன்றி கல்பகம்.

ஈரோடு கதிர் said...

மனதை நெகிழ வைத்த கதை

"ச"க்கு பதிலா "ட" அதுவும் குறிப்பாக புடிட்டுகொடு....

பாராட்ட வார்த்தைகளே இல்லை

//"சனியன போ அங்கிட்டு " என்று தன் ஆற்றாமையை//

இயல்பாய் நடக்கும் ஒரு ஆற்றாமை

கதை மிகத்தெளிவான, அழுத்தமான படைப்பு

சங்கரனை மாடு முட்டியது மட்டும்தான் கொஞ்சம் இயல்பிலிருந்து நழுவி

ஆரூரன் விசுவநாதன் said...

மாடு கண்ணு மேல உள்ள பாசம்-வீட்டு
ரேஷன் கார்டில் சேர்த்துக் கொள்ள கேக்கும் -

என்று தெரு டீக்கடை ரேடியோ பாட்டு படிக்கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு கதை.

மிக அருமை

அன்புடன்
ஆரூரன்

நாஞ்சில் நாதம் said...

கிராமத்து கதையில தனி முத்திரை பதிக்கிறீங்க. மனதை நெகிழ வைத்த கதை.

நாடோடி இலக்கியன் said...

நன்றி கதிர்.

நன்றி ஆரூரன் விசுவநாதன்.

நன்றி நாஞ்சில் நாதம்.

சிவக்குமரன் said...

good one.

க.பாலாசி said...

படித்து முடிக்கையில் ஒரு வித உணர்ச்சி ஏற்படுகிறது அன்பரே...இந்த கதையை படிக்கவே ரொம்ப நேரம் எடுத்துகிட்டேன்...

ஒவ்வொரு வரிகளிலும் உணர்ச்சிகள்...வலிகள்...

நல்ல கதை அன்பரே...கண்கலங்கவே கதையினை முடித்தேன்....

Unknown said...

:))) அருமை

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஸ்ரீமதி.