Friday, June 12, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க....

கடந்த நவம்பர் மாதம் கோவை எக்ஸ்பிரஸில் சென்னையிலிருந்து கோவை செல்லும்போது எனது கல்விச் சான்றிதழ்கள் , வேலை முன்னனுபவச் சான்றிதழ்கள் அடங்கிய கோப்பு மற்றும் பர்ஸ், புது கைக்கடிகாரம் ஆகியவை எனது கைப்பையிலிருந்து களவாடப்பட்டுவிட்டது. அதன் பின் அதைத் தேடி கண்டுபிடிக்க எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்காமல் போக டூப்ளிக்கேட் சான்றிதழ்கள் பெறுவதற்கான முயற்சியில் இருந்தபோது(தயவு செய்து சான்றிதழ்கள் விஷயத்தில் ரொம்ப கவனமாக இருங்க, தொலைத்தால் நாய் படாதபாடு படவேண்டும்) மூன்று மாதம் கழித்து ஆம்பூர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் திரு.கோபிநாத் என்பவர் என்னுடைய சான்றிதழ்கள் அடங்கிய கோப்பு பேருந்தில் கண்டெடுத்தாக கொடுத்த தகவலின் பேரில் எனது ஒரிஜினல் சான்றிதழ்களை திரும்பவும் பெற்றேன்.இந்த தருணத்தில் அவருக்கு ஒரு பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.என்னிடம் அந்த கோப்பை சேர்ப்பதற்கு மூன்று மாத காலமாக பல முயற்சிகள் செய்து பின் எப்படியோ எனது சான்றிதழ்கள் எதிலேயோ தொலைபேசி எண்ணை கண்டுபிடித்திருக்கிறார். மூன்று மாதமாய் சான்றிதழ்களை என்னிடம் சேர்த்துவிட வேண்டுமென்று பெரும் முயற்சியெடுத்த அந்த அன்பு மனிதரின் மனிதாபிமானத்திற்கு நான் என்றுமே கடமைப்பட்டிருக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மனிதாபிமானத்தைப் பற்றி பேசும் போது எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. நான் கொரியாவில் இருந்த சமயம் அலுவலகத்திற்குச் செல்லும்போது ஒருநாள் திடிரென சரியான மழை,கையில் குடை எடுத்துச் செல்லவில்லை. எப்போதும் வெதர் ரிப்போர்ட் பார்த்து கிளம்பும் நான் அன்று அவசரத்தில் மறந்துவிட்டேன்.ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பத்து நிமிட நடை தூரத்தில் எனது அலுவலகம்,காலை ஒன்பது மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருந்தாக வேண்டும்,அதை மனதில் கொண்டு நனைந்த படியே சென்றுவிட எத்தணித்த போது அருகில் பிளாட்பாரத்தில் சான்ட்விச் கடை வைத்திருக்கும் மூதாட்டி என்னையே கவனித்து கொண்டிருந்துவிட்டு அவரின் குடையை என்னிடம் கொடுத்து திரும்ப வரும்போது கொடுக்கும்படி கூறினார். இதில் என்ன விஷேஷமென்றால் அவருக்கு சுத்தமாக ஆங்கிலம் தெரியாது,எனக்கோ கொரியன் தெரியாது எல்லாமே சைகை மூலமாகவே என்னிடம் சொல்லி அந்த குடையை கொடுத்தார்.அதன் பின் நான் ஊருக்கு வரும்வரை தினமும் என்னை நலம் விசாரித்துக் கொண்டே இருப்பார்.என்னிடம் பேசிவிட்டு அருகில் இருக்கும் மற்ற கொரியன்ஸை ஒரு கம்பீர லுக்விடுவார் அதில் நான் ஃபாரினர்ஸிடமெல்லாம் பேசுவேனாக்கும்ங்கிற மாதிரி ஒரு பெருமிதம் இருக்கும்.

பொதுவா கொரியன்ஸ் ரொம்ப அன்பானவங்க ஆனால் ஆங்கில அறிவு பூஜ்ஜியம் அதனால் வெளினாட்டினரை கண்டால் அவர்களுக்கு ஆங்கில அலர்ஜி வந்துவிடும். எதாவது அவர்களிடம் கேட்டோமேயானால் பயந்து வெலவெலத்து போய்விடுவார்கள்.ஒரு சிலர் அரைகுறை ஆங்கிலத்தில் நம்மிடம் எதாவது சொல்லி அதை நாம் புரிந்து கொண்டுவிட்டோமேயானால் அவர்கள் முகத்தில் அப்படியொரு சந்தோஷம் பொங்கும்.(என்னோட ஆங்கிலமே பீட்டர்தான் ஆனா அவங்க அதையே பிரமிப்பா பார்ப்பாங்கன்னா பார்த்துக்கோங்க.)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப் பட்டபோது தமிழகத்தில் ஈழப்பிரச்சனை எந்த விதமான தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கிறதென தொலைக்காட்சிகள், தினசரிகள் முதல் பதிவுலகம் வரை அலசப்பட்டது.பலரும் பலவிதமான கருத்தைச் சொன்ன பிறகு என்னுடைய கருத்தாக ஒன்றையும் சொல்கிறேன். பிரபாகரனின் மரணச்செய்தி தொலைக்காட்சியில் ஃபிளாஷ் நீயூஸில் வந்து கொண்டிருந்த போது அதிர்ச்சியுற்ற நான் அருகிலிருக்கும் எனது நண்பன் வீட்டிற்குச் சென்று அதை பற்றி மிகுந்த சோகத்தோடு பகிர்ந்து கொண்டிருந்தபோது அருகில் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் என்னிடம்,"யாருப்பா பிரபாகரன்னா?" என்றார்.அதற்கு இன்னொரு பெண்மணி,"சந்தனக் கடத்தல் வீரப்பனோட கூட்டாளி" என்று பதிலளிக்க,மீண்டும் அந்த முதல் பெண்மணி,"வீரப்பனா அது யாரு?" என்று கேட்க இப்படியாக அவர்களின் பேச்சு தொடர்ந்தது. விஷயம் இதுதான் ஈழம் குறித்த பிரஞ்ஞை நகர்புறங்களிலும், படித்தவர்களிடமும் (அன்றாட நாட்டு நடப்புகளை அவதானித்து வருபவர்களிடம்) மட்டுமே இருந்திருக்கலாம். மேலே சொன்னது ஏதோ ஒரு கிராமத்தில் என்று எடுத்துக் கொள்வதற்கில்லை பெரும்பாலான கிராமங்களில் ஈழம் குறித்த பிரஞ்ஞை சுத்தமாக இல்லை என்பதே நிதர்சனம். தமிழகத்திலேயே இப்படியென்றால் வட மாநிலத்தவர்களிடம் நாம் என்னத்தை எதிர்பார்ப்பது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடுத்ததாக பதிவுலக நண்பர்களான அருட்பெருங்கோ, வெயிலான், நித்தியகுமாரன் மற்றும் ஸ்ரீ இவர்களை பற்றியது.ஒரு முறை கூகுளில் காதல் கவிதைகள் என தமிழில் டைப் செய்து தேடிய போது நண்பர் அருட்பெருங்கோவின் வலைப்பூவை கண்டு அசந்து போனேன். வார்த்தைகளில் எந்தவித அலங்காரமும் இல்லாமல் எளிய சொற்களில் பல கவிதைகளும், உரைநடையிலும் காதலை காதலுக்குள்ளேயே சென்று எழுதியிருந்தார்.இவரின் வலைப்பூ மூலமாகவே எனக்கு பிளாக் குறித்தான அறிமுகம் கிடைத்தது.

அருட்பெருங்கோவின் வலைப்பூ மூலமாகத்தான் தமிழ்மணத்தையும் கண்டறிந்தேன். நான் முதலில் தமிழ்மணத்திற்கு வந்தபோது நண்பர் வெயிலான் நட்சத்திர பதிவராக மின்னிக்கொண்டிருந்தார். அசத்தலான பல பதிவுகள் அப்போது இவர் எழுதிக் கொண்டிருந்தார். வாசிப்பவர்களை வசீகரிக்கக் கூடிய எழுத்து நடைக்கு சொந்தக்காரர். நான் இதுவரை நேரில் சந்தித்திருக்கும் மூன்று பதிவர்களில் இவரும் ஒருவர். பழகுவதற்கு மிகவும் எளிமையானவர்.சக பதிவர், நண்பர் என்பதைத் தாண்டியும் ஒரு சகோதர பாசம் இவரிடம் எனக்குண்டு.இது அவரிடம் பழகியவர்களுக்கு நன்கு தெரியும்.

அடுத்தவர் நித்தியகுமாரன், இவர் பதிவுலகிற்கு வந்த புதிதில்தான் தமிழ்மணத்தில் உலவிய சில பதிவர்களிடையே அச்சிலேற்ற முடியாத வார்த்தைகளைக் கொண்டு தனிமனிதத் தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்தது அப்போது புதிய பதிவரான இவர் எழுதிய இந்த கட்டுரை என்னை இவரின் ரசிகனாகவே ஆக்கிவிட்டது.பெரிய எழுத்தாளராவதற்கு அனைத்துத் தகுதியும் இவருக்கு உண்டென்பது என்னுடைய கருத்து.

அடுத்தவர் அருமைத் தம்பி ஸ்ரீ,இவரின் காதல் கவிதைகளுக்கு நான் பெரிய விசிறி.நேரில் பார்க்கவில்லை எனினும் சாட்டிங்கில் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.இவரின் வலைப்பக்கம் இப்போது திறக்க முடியவில்லை.என்ன காரணமென்றுத் தெரியவில்லை.

இந்த நால்வரும் ஏனோ இப்போது அதிகமாக அல்லது சுத்தமாகவே எழுதுவதில்லை பணிச்சுமையா என்பது தெரியவில்லை எதுவாகினும் விரைவில் பதிவுலகிற்கு திரும்புங்கள் நண்பர்களே.உங்கள் எழுத்தின் சுவையறிந்த ஒரு வாசகனின் வேண்டுகோளாய் இதை வைக்கிறேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த மாதிரி பதிவுகளில் இறுதியாக ஒரு கவிதை கொண்டோ அல்லது ஒரு நகைச்சுவைத் துணுக்குக் கொண்டோ முடிப்பார்கள் சக பதிவர்கள். நான் மற்ற பதிவர்களின் பதிவுகளில் எனக்குப் பிடித்த ஒன்றை சிலாகித்து பேசலாமென்றிருக்கிறேன். இந்த வாரம் நண்பர் ஆதிமூலக் கிருஷ்ணனின் "பாப்பாக்குடி" வீடியோவைப் பற்றி. ஆதி நல்லதொரு எழுத்தாளர் என்பது தெரியும் அவருக்குள் இப்படி ஒரு கிரியேட்டர் இருப்பது இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். கிராமத்தை பின்னணியாகக் கொண்ட நண்பர்களுக்கு அந்த வீடியோ உணர்வு பூர்வமாக பல நினைவுகளை மீட்டியிருக்கும். (ஆதி நீங்க டைரக்டர் ஆனவுடனே என்னையும் அசிஸ்டெண்டா சேர்த்துக்கோங்க).

6 comments:

முரளிகண்ணன் said...

சுவையான ஸ்னாக்ஸ்

கார்த்திகைப் பாண்டியன் said...

எல்லாமே நல்லா இருக்கு..:-)

மறத்தமிழன் said...

டீ இல்லாத ஸ்னாக்ஸ்..

இளகிய மணம் இருந்தாலே போதும் உதவி புரிவதற்கு...
அதற்கு மொழி தேவையில்லை..மூதாட்டிக்கு ஒரு சொட்டு !
கண்டக்டருக்கு ஒரு சொட்டு !

தலைவர் பிரபாகரனைப் பற்றி தெரியாது என்று கூறிய பெண்கள் சினிமா மோக‌ம் கொண்டாவாற்களாக‌ இருப்பார்க‌ள் போல‌...
நேத்து ரிலீஸான "மாசிலாமனி" ஹீரோ நகுலனைக் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கலாம். உங்கள் நண்பர் வீடு எந்த ஊரில் உள்ளது எனக்கூறுங்கள்.
ஏனென்றால் ப‌ஸ், லைட்டு பாக்காத‌ கிராம‌ங்க‌ள்ள‌ கூட‌ த‌லைவ‌ரைப்ப‌ற்றி தெரிந்து வைத்து இருபப்ப‌தை நேரிலேயே பார்த்திருக்கிறேன்...

ம‌ற்ற‌ப‌டி ஆ.மு.கி க்கும்,உங்க‌ளுக்கும் இய‌க்குன‌ராக‌ வாழ்த்துக்க‌ள்..

அன்புட‌ன்
ம‌ற‌த்த‌மிழ‌ன்.

நாடோடி இலக்கியன் said...

நன்றி முரளி

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

நன்றி மறத்தமிழன்(நீங்கள் சொல்வதுபோல அவர்களுக்கு சினிமா மோகமும் கிடையாது நகுலைப் பற்றியெல்லாம் சான்சே இல்ல...அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கும் விவசாயக் கூலிகள் அந்த பெண்கள்,தவிரவும் நான் திருப்பூரில் இருந்தபோதும் கூட அங்கே வேலை பார்க்கும் தொழிலாளிகளிடம் ஈழம் குறித்து கேட்ட போது ஒரு சிலருக்கே தெரிந்திருந்தது அதுவும் பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் தெரிந்திருக்கிறது.மற்றபடி உங்களுக்கு தெரிந்த கிராமத்தில் ஓரளவிற்கு விழிப்புணர்வு இருந்திருக்கலாம்.)

☼ வெயிலான் said...

நொறுக்குத் தீனியோடு என்னையும் கொஞ்சம் கொறிச்சிருக்கீங்க பாரி!

நன்றி! (இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டிருக்கு :) )

நாடோடி இலக்கியன் said...

வாங்க வெயிலான்,

//இன்னுமா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டிருக்கு //

ரொம்ப ரொம்ப....

:)

வருகைக்கு மிக்க நன்றிங்க.