Monday, August 10, 2009

நொறுக்குத் தீனி சும்மா கொறிக்க...10/08/09

குழந்தைகளின் குறும்புகளை எல்லோருமே ரசித்து மகிழ்வோம், அதுவும் அவரவர் குழந்தைகள் என்று வரும்போது மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு இல்லையா,அப்படி சமீபத்தில் என்னை பெரிதுவக்க வைத்தார்கள் எங்கள் வீட்டு மழலையர்.

எனது அண்ணன்கள் இருவரின் மகள்களுக்கும் இப்போது வயது ஐந்து.பெரிய அண்ணனின் மகள் 'ங்' கிற்குப் பதிலாக 'ந்' என்றுதான் உச்சரிப்பாள்.பொங்கல் என்று சொன்னால் பொந்தல் என்பாள்.சமீபத்தில் என்னிடம் அவள் பேசிய டயலாக் இது,

மேஹா:சித்தப்பா,நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ(?) மாங்காயை மாந்தாய்ன்னுதானே சொல்லுவேன்,இப்போ நான் கரெக்டா சொல்லுவேனே.

(இங்கேயே காமெடி முடிஞ்சு போச்சு ,இருந்தாலும் தொடருங்க)

நான்:பாப்பா பொய்தானே சொல்றீங்க.

மேஹா: நிஜம்மா சித்தப்பா,நீங்க வேணா மாங்காய்னு சொல்லச் சொல்லுங்க, நான் மாங்காய்னு கரெக்ட்டா சொல்வேன்.

நான்:சரி எங்கே 'மாங்காய்' சொல்லு.

மேஹா:'மாங்காய்',சொல்லிட்டோம்ல,எப்பூ...டி.

சின்ன அண்ணனின் மகள் ஹரிணி,அயல் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து கொண்டிருந்தாலும் சமீபத்தில் ஒரு பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு "சங்கத் தமிழ் மூன்றும் தா","ஆயர்பாடி மாளிகையில்" பாடல்களை தெளிவான உச்சரிப்பில் பாடியதை காணொலியில் பார்த்ததும்,உச்சிமுகர வேண்டும் போல் இருந்தது.இந்த இருவரில் ஹரிணியே தமிழை அட்சர சுத்தமாகப் பேசுகிறாள். அந்த ஒரு விஷயம்தான் இந்த சுயதம்பட்டம் எழுதக் காரணம்.

===========================================================================
இரண்டு மாதங்களுக்கு முன்பு எங்க ஊரில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கந்தர்வக்கோட்டைக்கு(புதுக்கோட்டை மாவட்டம்) அருகே இருக்கும் வீரம்மாகாளி கோவிலுக்கு ஊர் பசங்களோடுச் சென்றேன்.

கந்தர்வக்கோட்டையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் என்னுடைய டூவீலருக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தபோது எதிரே இன்னொருத்தரும் தொப்பை தள்ளியபடி லுங்கியோடு, வெற்றிலை குதப்பியபடியே டிப்பிகல் விவசாயிக்கான லெட்சனத்தோடு வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார், அவரைப் பார்த்ததும் சட்டென்று "உங்க பேரு வடிவேலா?" என்றேன். அவரும் "ஆமாம்" என்றார்.

அடுத்தக் கேள்வியை "என்னை உனக்குத் தெரியுதாடா?” என்று ஒருமையில் கேட்டதும், அவருக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, "குழப்பத்தோடவே யாருன்னு தெரியலியே” என்றார். "நீ கருக்காடிபட்டியில்தானே படிச்ச” என்று நான் கேட்டதும், "ஆமாம்" என ஆச்சர்யபட்டதோடு "அது 92 -94ம் வருடமாச்சே" என்று சொல்லியபடியே "நீங்க யாருன்னு தெரியலியே” என்றார்.

"நான் உன்னோட கிளாஸ்மெட்டுதான் யாருன்னு சொல்லு பார்ப்போம்" என்றேன். ரொம்ப யோசித்தும் முடியாமல் போக, "சரி அங்கே வேலை பார்த்த ஆசிரியர் யாராவது உனக்கு ஞாபகம் இருக்கா?" என்றேன், பட்டென்று "என்.ஏ ஸார்" என்றார். "நான் அவரு மகன் தாண்டா" என்றதும், என்னுடைய பெயரைச் சொல்லிவிட்டான். "அடையாளமே தெரியலப்பா, இவ்வளோ வருஷம் கழித்தும் எப்படி என்னை கரக்டாக் கண்டுபிடிச்ச" என்றான்.

12 அல்லது 13 வயதில் அவனை கடைசியாகப் பார்த்தது,ஆனாலும் அந்த முகம் இப்போதும் அப்படியே ஏழாம் வகுப்பில் இருந்தது போலவே எனக்குத் தெரிந்தது. பிறகு கொஞ்ச நேரம் பழைய நினைவில் மூழ்கி இருவரும் உரையாடி விடைபெற்றுக் கொண்டோம்.

எதிர்பாரா தருணங்களில் வாழ்க்கை நம்மிடம் விளையாடும் இப்படியான சின்னச் சின்ன கண்ணாமூச்சிகளில் தான் எத்தனை சுவாரஸ்யம். ஊரில் உள்ள மற்ற என்னோட கிளாஸ்மெட்கிட்ட," நான் வடிவேலை பார்த்தேண்டா" என்றால் ஒரு பயலுக்கும் அவனை ஞாபகம் இல்லை.

===========================================================================
நான் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்திருந்த சமயம், தமிழ்த் திரையுலகினர் ஏதோ பிரச்சனையால் இரு குழுவாய் செயல்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்ததால் நேரடித் தமிழ் படங்கள் ரிலீஸாகாமல் நிறைய மலையாள மற்றும் தெலுங்குப் படங்கள் டப் செய்து வெளிவந்துக் கொண்டிருந்தது.

அந்த நாட்களில் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஏழு படமாவது பார்க்காவிடில் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். எனவே இந்த டப்பிங் படங்களைக் கூட விடாமல் பார்த்திருக்கிறேன்.

"மாஃபியாகேங்", "சிட்டி", "ஏகலைவன்", "கமிஷ்னர்" என சுரேஷ் கோபியின் ஆக்‌ஷன் படங்கள் வரிசையாக வெளிவந்து வசூலைக் குவித்தது. இந்த படங்களும் விறு விறுப்பான திரைக்கதையமைப்பில் பட்டாசாக இருக்கும். இது ஒரு புறமிருக்க "பிக்பாஸ்", "ரௌடி பாஸ்", "போக்கிரிக் காதலன்", "சின்ன பண்ணை" என தெலுங்கு டப்பிங் படங்கள் ரோஜா, மீனா, நக்மா, ரம்பா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் புரட்சிகரமான நடிப்பால் கல்லாவை நிறைத்தன. (தியேட்டரில் கூட்டம் அம்மு அம்முன்னு அம்மும்,ஷகிலா டைப் படம் ஓட்டியே பொழப்பு நடத்திய தியேட்டர்காரர்கள், இப்படி நம்ம பொழப்புல மண்ண போட்டாய்ங்களேன்னு புலம்புகிற அளவிற்கு வாடிக்கையாளர்கள் எல்லாம் அங்கே போயிட்டாங்க).

"அர்ஜூனா" தெலுங்கு டப்பிங் பட போஸ்டரில் நக்மாவே பிரதானமாக இருந்தார். ஹீரோ யாரென்றுத் தேடினால் குணச்சித்திர நடிகர்கள் மாதிரி ஒரு ஓரத்தில் சிறிய கட்டத்தில் நானும் இப்படத்தில் இருக்கிறேன்னு சொல்ற மாதிரி இருந்தவர் சிரஞ்சீவி!(மன்னன் படத்தின் தெலுங்கு பதிப்பு மீண்டும் தமிழில் இந்த பெயரில்).

இப்போ எதற்கு இந்த ஃபீளாஷ்பேக் என்றால் நேற்று zee தொலைக்காட்சியில் நாகார்ஜூன், சிம்ரன், ரீமாசென் நடித்த ஏதோ ஒரு டப்பிங் படம் ஓடிக் கொண்டிருந்தது. சேனல் மாற்றிக் கொண்டே வந்ததில் இதைப் பார்த்ததும் பழைய நினைவில் அப்படியே கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று பார்த்தேன், சிம்ரன் தனது தங்கையான ரீமா தனது கணவனை(நாகார்ஜூனா) லவ் பண்ணுவதை அறிந்து தங்கையை கணவனுக்கே கல்யாணம் செய்து வைக்க ஆசைப்பட்டு கணவனிடம் கேட்க, அவர் மறுக்கிறார். அப்போது சிம்ரனின் அப்பாவாக வருபவர் ஹீரோவிடம் பேசும் வசனம்,

மாமா:மாப்ள என் ரெண்டு பொண்ணுங்களும் எனக்கு ரெண்டு கண்ணுங்க மாதிரி,என்னதான் கண்ணு ரெண்டா இருந்தாலும் பார்வை ஒன்னுதானே, அதனால என் ரெண்டாவது பொண்ணையும் நீங்களே கட்டிக்கோங்க.

ஹீரோ:ஆஹா பார்வைக்கு இப்படி ஒரு அருமையான விளக்கமா?.

மாமா:இன்னொன்னும் சொல்றேன் கேளுங்க, என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் நான் ஒருத்தனே அப்பாவாக இருக்கும்போது ஏன் நீங்க ரெண்டு பேருக்கும் ஒரே புருஷனாக இருக்கக் கூடாது.

இந்த வசனத்தை கேட்டப்போ எழுதியவரின் முகவரி கிடைத்தால் எந்த குறுக்கு சந்தில் இருந்தாலும் தேடிப் போய் "தெய்வமே"ன்னு காலில் விழணும்னு தோணுச்சு.
===========================================================================
எங்க ஊரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமத்தின் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களோடு நன்றாகப் பழகினாலும் தண்ணீர் உட்பட எதுவுமே கொடுக்க மாட்டார்களாம். ”முறைப்பாடு இருக்கிறது தெய்வ குத்தம் ஆகிடும்” என்று சொல்வார்களாம்.

இதன் பின்னணியில் ஏதோ ஒரு சுவாரஸ்யம் இருப்பதையறிந்து ஊர் பெருசு ஒன்றிடம் கேட்டபோதுதான் எங்க ஊரின் வரலாறு எனக்குத் தெரிய வந்தது.

எந்த காலக் கட்டத்தில் நடந்தது என்பது தெரியவில்லை, தற்போது எங்கள் ஊர் அமைந்திருக்கும் இடத்திற்கு 2கி.மீ தொலைவில் ஊரின் தெற்கு எல்லையாக காட்டாறு இருக்கும். அந்த காட்டாற்றின் மறுகரையில் தான் எங்களின் பூர்வீகக் கிராமம் இருந்ததாம். நான் சொல்லிக் கொண்டிருக்கும் கதை நடந்த காலத்தில் அடிக்கடி பெரு மழை பெய்து காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கே குடியிருந்த எங்கள் முன்னோர்கள் வீடு, கால்நடைகள் முதலிய எல்லாவற்றையும் இழக்க நேர்ந்ததால் அங்கிருந்து இடம் பெயர்ந்து தற்போது இருக்கும் இவ்விடத்திற்கு வந்தார்களாம். அப்படி வந்தபோது அங்கே ஏற்கனவே பூர்வீகக் குடியாய் இருந்த சொற்ப எண்ணிக்கையிலான மற்றொரு சமுதாயத்தினரை மெஜாரிட்டியான எம்முன்னோர்கள் விரட்டியிருக்கிறார்கள். அப்படி விரட்டப்பட்டவர்கள் தான் தற்போதும் தண்ணீர் கூட கொடுக்க மறுக்கும் அம்மக்கள்.(நியாயம்தான்).

எனது முன்னோர்கள் வாழ்ந்த இடமாகச் சொல்லப்படும் அந்த காட்டாற்றின் மறுகரையில் இன்றும் பாழடைந்த நிலையில் மிகவும் சிறிய அளவிலான பொன்னியம்மன் மற்றும் சிவன் கோயில்கள் இருக்கிறது.

பொன்னியம்மன் கோவிலில் அம்மனின் சிலை மட்டுமே இருக்கிறது, சுற்றுச் சுவர் முற்றிலும் சிதிலமடைந்து விட்டது, சிவன் கோவில் பொன்னியம்மன் கோவிலைவிட சற்று பெரியது, மூன்று அறைகளாகத் தடுக்கப்பட்டிருக்கும் இக்கோயிலில் தற்போது மூலவர் அறை மட்டுமே முழுதாய் இருக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாததால் புதர்களும், மரங்களும், பாம்பு சட்டைகளுமாய் ஒரு வித அச்சத்தை தருவிக்கும் தோற்றத்தோடு இருக்கிறது. கோயிலைக் கட்டப் பயன்படுத்தியிருக்கும் சுட்ட கற்களில் வடிவமும்,அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுண்ணாம்புக் கலவையால் பூசியிருக்கும் விதமும் அக்காலக் கட்டிடக் கலையின் நேர்த்தியை எண்ணி வியக்க வைத்தது.

இப்படி ஒரு கோயில் இருப்பதே எங்கள் ஊரின் இளைய தலைமுறையினர் நிறைய பேருக்குத் தெரியவில்லை. நானும் கூட இக்கதையை அறிந்த பிறகே அங்கே சென்று பார்த்தேன். அந்த கோயிலினுள் நின்ற போது பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளன் மாதிரி பயங்கரமான ஒரு ஃபீல்.(உள்ளுக்குள் உதறலோடு).வைரமுத்து மாதிரி “வண்டல்மண் இதிகாசம்” என்று ஒன்று எழுத வேண்டும் என்ற பேராசையெல்லாம் எனக்கு அங்கே நின்றபோது வந்ததுன்னு சொன்னா நீங்க சிரிப்பீங்கதானே,ஆனா நிஜமாவே அப்படித்தாங்க நெனச்சேன்.

24 comments:

கதிர் - ஈரோடு said...

இலக்கியன்...

வடிவேலுவை சந்தித்த சம்பவம் போல் பலசமயம் எனக்கும் நிகழ்ந்திருக்கிறது.

மற்றவர் நம்மை அடையாளம் கண்டு, நாம் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் ஒரு சிறு குற்ற உணர்ச்சி ஏற்படும் நிலைக்கு பலமுறை தள்ளப்பட்டிருக்கிறேன்.


//வண்டல்மண் இதிகாசம்//

எழுதுங்க இலக்கியன்.


ஈரோடு புத்தகத் திருவிழா பற்றி ஒரு இடுகை எழுதுங்களேன்

மணிஜி.. said...
This comment has been removed by the author.
தண்டோரா இனி... மணிஜி.. said...

நல்லா கொறிச்சேன்..உங்க ஊர் எது?

நாஞ்சில் நாதம் said...

/// இந்த வசனத்தை கேட்டப்போ எழுதியவரின் முகவரி கிடைத்தால் எந்த குறுக்கு சந்தில் இருந்தாலும் தேடிப் போய் "தெய்வமே"ன்னு காலில் விழணும்னு தோணுச்சு///

செருப்பால அடிக்கணும் அப்பனுக்கும் புருஷனுக்கும் வித்தியாசம் தெரியாத ஆட்கள.

வடிவேலுவை சந்தித்த சம்பவம் போல் போன வாரம் எனக்கும் நிகழ்ந்தது. ரஞ்சித் என்றொரு நண்பரை போனவாரம் சந்தித்தேன். என்கூட 10 வகுப்பு படித்தவர். ஒரே கட்டடத்தில் வேறு வேறு அலுவலகத்தில் 3 மாதமாக வேலை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு முறைகூட நேரில் பார்த்தது கிடையாது. எங்கள் அலுவலக கட்டட லிஃப்டில் போன வாரம் தற்செயலாக சந்தித்தோம்.

//வண்டல்மண் இதிகாசம்//

எழுதுங்க இலக்கியன்

கார்த்திகைப் பாண்டியன் said...

பால்ய நண்பர்களை திடீரென சந்திக்கும் போது வரும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.. அப்புறம் அந்த சினிமா வசனம்.. முடியல..:-)))

☼ வெயிலான் said...

// தண்டோரா இனி... மணிஜி..
10 August, 2009 3:03:00 PM IST

நல்லா கொறிச்சேன்..உங்க ஊர் எது? //

ஆஹா! இந்தக் கதை நல்லாருக்கே.
இதுக்கு நானும் பதிலை எதிர்பார்க்கிறேன் :)

அப்புறம் அந்தக் காணொளியையும் இணைத்தால் நாங்களும் பார்ப்போமே...

நாடோடி இலக்கியன் said...

நன்றி கதிர்,(ஈரோடு புத்தகக் கண்காட்சியை பற்றி எழுத முயற்சிக்கிறேன் நண்பரே).

Karthikeyan G said...

//மாமா:மாப்ள என் ரெண்டு பொண்ணுங்களும் எனக்கு ரெண்டு கண்ணுங்க மாதிரி,என்னதான் கண்ணு ரெண்டா இருந்தாலும் பார்வை ஒன்னுதானே, அதனால என் ரெண்டாவது பொண்ணையும் நீங்களே கட்டிக்கோங்க.

ஹீரோ:ஆஹா பார்வைக்கு இப்படி ஒரு அருமையான விளக்கமா?.

மாமா:இன்னொன்னும் சொல்றேன் கேளுங்க, என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் நான் ஒருத்தனே அப்பாவாக இருக்கும்போது ஏன் நீங்க ரெண்டு பேருக்கும் ஒரே புருஷனாக இருக்கக் கூடாது. //

:))))))))

Superrruuu...

PPattian : புபட்டியன் said...

//மாந்தாய்//

Choo Sweet...

//அந்த நாட்களில் வாரத்திற்கு குறைந்தபட்சம் ஏழு படமாவது பார்க்காவிடில் கையெல்லாம் நடுங்க ஆரம்பித்துவிடும். எனவே இந்த டப்பிங் படங்களைக் கூட விடாமல் பார்த்திருக்கிறேன்//

ஹா.. ஹா.. ஹா..

//அந்த கோயிலினுள் நின்ற போது பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளன் மாதிரி பயங்கரமான ஒரு ஃபீல்.//

இதுபோன்ற உணர்வுகள் எனக்கும் பல கோவில்களிலும் (சென்ற சில) கோட்டைகளிலும் ஏற்பட்டிருக்கிறது.

சுவையான நொறுக்குத் தீனி.

சென்ஷி said...

//மாமா:இன்னொன்னும் சொல்றேன் கேளுங்க, என் ரெண்டு பொண்ணுங்களுக்கும் நான் ஒருத்தனே அப்பாவாக இருக்கும்போது ஏன் நீங்க ரெண்டு பேருக்கும் ஒரே புருஷனாக இருக்கக் கூடாது. //

கால்ல விழறப்ப என் சார்பாவும் ஒரு தபா விழுந்துடுங்க.. இன்னாமா யோசிச்சுருக்காரு :))

Anonymous said...

/// புலம் பெயர்ந்து ///

2 கி.மீ. தாண்டி வந்தது புலம் பெயர்வா? நல்ல காமடி போங்க :-))

இய‌ற்கை said...

சுவையான் நொறுக்குத் தீனி

நாடோடி இலக்கியன் said...

நன்றி அனானி,
//2 கி.மீ. தாண்டி வந்தது புலம் பெயர்வா? //
இடம் பெயர்ந்து என்று மாற்றிவிட்டேன் நண்பரே.தவறை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றிங்க.

நாடோடி இலக்கியன் said...

நன்றி மணிஜி,(தஞ்சைக்கு அருகில் முதலிப்பட்டி என்ற சிறிய கிராமம்).

நன்றி நாஞ்சில் நாதம்.

நன்றி கார்த்திகைப் பாண்டியன்.

நன்றி வெயிலான்,(காணொளி(லி) சம்பந்தப்பட்டவர் பதிவிலேயே இருக்கு வெயிலான்).

நன்றி கார்த்திகேயன்,

நன்றி புபட்டியன்,

நன்றி சென்ஷி,

நன்றி அனானி,(தவறைச் சுட்டிக்காடியமைக்கு மிக்க நன்றி நண்பரே,’இடம் பெயர்ந்து’ என்று மாற்றிவிட்டேன் நண்பரே).

நன்றி இயற்கை.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அந்த கோயிலினுள் நின்ற போது பெரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளன் மாதிரி பயங்கரமான ஒரு ஃபீல்.(உள்ளுக்குள் உதறலோடு).வைரமுத்து மாதிரி “வண்டல்மண் இதிகாசம்” என்று ஒன்று எழுத வேண்டும்//

ரசித்துச்சிரித்தேன்.

ஆதிமூலகிருஷ்ணன் said...

அப்புறம் அந்த சினிமா வசனம் நல்லாயிருந்தது.. ஆமா நாயந்தானே.. ஹிஹி..

அப்புறம் இம்மாம் பெரிசா எழுதுனா அடுத்த கடைகளுக்கு போகத்தேவலையா.?

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,(எங்க ஊரின் வரலாற்றை தனிப் பதிவாக எழுத நினைத்து பிறகு நொறுக்குத் தீனியில் சேர்த்ததால் பெரிய பதிவா போச்சு,வரும் பதிவுகளில் உண்மைத் தமிழன் ரேஞ்ச்சுக்கு இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன்.:) )

நர்சிம் said...

நொறுக்குத் தீனி வயிறு நிறைத்தது.

ஸ்ரீமதி said...

அருமை அண்ணா.. :)) உங்கள் வண்டல் மண் இதிகாசத்தை எதிர்ப்பார்த்து.. :))))

ஸ்ரீமதி said...

மீ த 20 ;)))

நாடோடி இலக்கியன் said...

நன்றி நர்சிம்.

நன்றி ஸ்ரீமதி.

அனுஜன்யா said...

சுவாரஸ்யம் இலக்கியன். பால்ய நண்பனை சந்திப்பது நம்மில் பலருக்கும் எப்போதாவது நடப்பது என்றாலும், அழகா சொல்லி இருக்கீங்க. பா.ராஜாராம் ஒரு அருமையான கதையே இது பற்றி எழுதி இருக்கிறார். டைம் கிடைக்கும் போது படிங்க.

http://karuvelanizhal.blogspot.com/
2009/07/blog-post_17.html

ஊர்சுற்றி said...

சுவாரசியமாக - கொறிக்க அருமையாக இருந்தது. அதுவும் இந்த இரவு நேரத்தில். :)))

நாடோடி இலக்கியன் said...

நன்றி அனுஜன்யா,(டைம் கிடைக்கும் போது கண்டிப்பாக படிக்கிறேன்).

நன்றி ஊர்சுற்றி.