Tuesday, August 4, 2009

சின்னக் குயில் சித்ராவின் பாடல்கள்..

நீதானா அந்தக் குயில் படத்தின் "பூஜைக்கேத்த பூவிது" பாடலின் மூலம் தமிழில் இசைஞானியால் அறிமுகப்படுத்தப்பட்டு, பூவே பூச்சூடவா படத்தின் "சின்னக் குயில் பாடும் பாட்டு" மூலமாக புகழின் உச்சிக்குச் சென்று, பிறகு அப்பாடலின் பல்லவியே இவரின் அடைமொழியானது.ஆறு தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளை அள்ளியவர், அள்ளிக்கொண்டிருப்பவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தியென பல இந்திய மொழிகளில் பாடியிருக்கிறார் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே.


சித்ராவின் பாடல்களில் சிறந்த பாடல் என்ற அடிப்படையில் பார்த்தால் பட்டியல் ரொம்பப் பெரியதாக இருக்கும்.அதனால் எனக்குப் பிடித்த பாடல்களில் சித்ரா அவர்கள் சோலோவாகப் பாடிய சில பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
(பாடல்களின் மேல் கிளிக்கி பாடல்களைக் கேட்கலாம்.)

"ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்" புன்னகை மன்னனில் இடம் பெற்ற இப்பாடல் சின்னக் குயில் சித்ரா என்றாலே இசைப் பிரியர்கள் அனைவரின் நினைவிலும் சட்டென்று வரும் பாடல்.இந்த பதிவின் தலைப்பை கிளிக்கியபோதும் இப்பாடலே உங்களுக்கு நினைவில் வந்திருக்கும்.சித்ரா அவர்கள், தான் பாடிய பாடல்களில் தனக்கு மிகவும் பிடித்தப் பாடலாக இந்தப் பாடலையே பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார். ஆரம்பக் கால சித்ராவின் குரலில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும், அது இப்பாடலில் அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். வைரமுத்துவின் வைர வரிகளில்,ராஜாவின் மாஸ்டர் பீஸ்களில் இப்பாடலுக்கு ஒரு தனியிடம் உண்டு.


"மழையின் துளியில் லயம் இருக்குது" சின்னத்தம்பி பெரியத்தம்பி படத்தில் இடம் பெற்ற இப்பாடலில் இசையமைப்பாளர் (ராஜாவா?கங்கை அமரனா?) பியானோவில் கலக்கியிருப்பார். பாடலின் ஆரம்பத்தில் வரும் தூறல் விழுவதைப் போன்ற இசைச் சிதறல் அருமையாக இருக்கும். இப்பாடலின் அற்புதமான வரிகளைக் கேட்கும்போது கங்கை அமரன் ஏன் நிறைய பாடல்கள் எழுதவில்லை என்றக் கேள்வி கண்டிப்பாக எழும்.சித்ரா அவர்கள் பாடலின் பல்லவியின் முடிவில் மாமா என்று முடிக்கும் அழகிற்கே பல முறை விரும்பிக் கேட்டிருக்கிறேன்.


"சின்னக் குயில் பாடும் பாட்டு கேட்குதா" பூவே பூச்சூடவா படப் பாடலான இப்பாடல் பலருக்கும் விருப்பப் பாடலாக இருக்கும். குட்டிப் பசங்களோடு நதியா சைக்கிளில் பாடிக்கொண்டே வருவதை படமாக்கியிருக்கும் விதத்திற்காகவே பலரும் விரும்பிய பாடல். சித்ராவிற்கு மிகப் பெரிய அங்கிகாரத்தை தமிழ் திரையுலகில் வழங்கியப் பாடலும் கூட.


"தேவனின் கோவில் மூடிய நேரம்" அறுவடை நாள் படத்தில் இடம் பெற்ற இப்பாடலைக் குறிப்பிடும்போதே எனக்கு மெய்சிலிர்க்கிறது. இளையராஜாவின் இசையில் எத்தனையோ பாடல்கள் என் விருப்பப் பாடல்களாக இருக்கின்றன, அவறிலும் இது ரொம்ப ஸ்பெஷல். இப்பாடல் படத்தின் கதையோடு பயணிக்கும், இன்னும் சொல்வதென்றால் அப்படத்தின் ஜீவனே இப்பாடல்தான் என்பேன். அலைகள் ஓய்வதில்லை படப் பாடலான "காதல் ஓவியம்" பாடலின் சாயலை லேசாகக் கொண்டிருக்கும் இப்பாடலை சித்ராவின் குரலில் கேட்கும்போது ராஜாவின் இசை, சித்ராவின் குரல் என்பதையும் தாண்டி இப்படதைப் பார்த்தவர்களுக்கு நடிகை பல்லவி இப்படத்தில் ஏற்றிருந்த கதாபாத்திரமும் அவரின் நடிப்பும் நினைவில் வந்து போகும். மிஸ் பண்ணக் கூடாத திரைப்படம்.

"குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும்" இந்தப் பாடலின் சிறப்பை தனியாக விளக்க வேன்டியதில்லை.மெல்லிசை மன்னரும்,இசைஞானியும் இணைந்து உருவாக்கிய பாடல்."கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்கிறதா" என்ற குறும்பான வரிகளுக்கு சித்ராவின் குரலும் குறும்பு செய்யும். இதே மெட்டை ராஜா இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியான சீனி கம் ஹிந்தி படத்திலும் பயன்படுத்தியிருப்பார். ஸ்ரேயா கோஷலின் குரலில் அப்பாடலும் நன்றாக இருப்பினும் இந்த பாடல் அளவிற்கு வசீகரிக்கவில்லை.

"பாடறியேன் படிப்பறியேன்" சிந்து பைரவி படப் பாடலான இப்பாடலில் தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி முதல் தேசிய விருதை வென்றார் சித்ரா.
இப்பாடல் பதிவின் போது சித்ரா இசை கல்லூரி மாணவி, அப்போது அவருக்கு எக்ஸாம் இருந்ததாம்,இருப்பினும் "அதைவிட உனக்கு பெரிய அங்கிகாரம் கிடைக்கப் போகும் பாடலை கம்போஸ் பண்ணியிருக்கேன் எக்ஸாம் பிறகு எழுதிக்கலாம் வந்து பாடிட்டு போ" என்ற இளையராஜாவின் அன்பு கட்டளையை மீற முடியாமல் வந்து பாடினாராம்.அப்பாடல்தான் தன் இசை வாழ்வில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியதாகவும் பல இசை நிகழ்ச்சிகளில் கூறியிருக்கிறார்.

"ஜானகிதேவி ராமனைத் தேடி" சங்கர் கணேஷ் இசையில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் இடம்பெற்ற அற்புதமான மெலடி. இப்பாடலின் இடையில் வரும் "நானம் வந்து தடைபோட நாயகன் அங்கங்கே எடைபோட" என்ற வரிகளை காட்சிப் படுத்தியிருக்கும் விதம் அசத்தலாக இருக்கும். படத்தில் இப்பாடலின் கடைசியில் கமலா காமேஷ் பாடுவதாக முடியும்போது விசுவின் ரியாக்ஷன் எழுதும்போதே சிரிப்பை வரவழைக்கிறது. விசுவின் பெரும்பாலான படங்கள் எனக்கு பிடிக்காது ஆனாலும் இந்த படத்தை தொலைக்காட்சியில் எப்போது ஒளிபரப்பினாலும் மிஸ் பண்ணுவதே இல்லை.


"நின்னுக்கோரி வர்ணம்" ராஜாவின் மியூசிக் த்ரில்லர் என்று வர்ணிக்கப்படும் அக்னி நட்சத்திரம் படப் பாடல், படமாக்கியிருக்கும் விதம்தான் கொஞ்சம் கடுப்பேற்றும் இருப்பினும் சித்ராவின் குரல் அந்தக் குறையை மறைத்துவிடும். அற்புதமான வரிகளும், சித்ராவின் இனிமையான குரலும், அமலாவின் துடிப்பான நடனமும் இப்பாடல் என்னுடைய ஆல்டைம் பேவரைட்டுக்கான காரணங்கள். 85ற்குப் பிறகு அக்னி நட்சத்திரம், புது புது அர்த்தங்கள் மற்றும் கோபுர வாசலிலே ஆகிய மூன்று படங்களுக்கும் இசையமைக்குபோது பயங்கர ஹேப்பி மூடில் ராஜா இருந்திருக்க வேண்டும், இம்மூன்று படங்களில் இடம் பெற்றிருக்கும் அத்தனைப் பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டானவை.

"புத்தம் புது ஓலை வரும்" வேதம் புதிது படப் பாடல்.பாரதிராஜா முதன் முதலில் இளையராஜாவைத் தவிர்த்து வேறொரு இசையமைப்பாளர் இசையில் இயக்கிய படம். தேவேந்திரனின் இசையில் அத்தனைப் பாடல்களும் ஹிட்டானவை. பாடலின் வரிகளில் வைரமுத்து புகுந்து விளையாடியிருப்பார். "கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கி காலம் கழித்திருப்பேன், உலகம் அழிகின்ற போதும் உன்னை நினைத்திருப்பேன்" என்ற வரிகளை கேட்கும்போதெல்லாம் ரிவைண்ட் செய்து கேட்க வைக்கும் அளவிற்கு காதலின் ஏக்கத்தை தனது குரலில் சித்ரா ஜீவனோடு வெளிப்படுத்தியிருப்பார்.

"வந்ததே ஓ ஓ குங்குமம்" கிழக்கு வாசல் படத்தில் இடம் பெற்ற இப்பாடலில் சித்ராவின் ஹைபிட்ச் நன்றாக இருக்கும்.எனது சகோதரி தனது பள்ளி நாட்களில் இப்பாடலையே எப்போதும் பாடிக் கொண்டிருப்பார்,அவரின் மூலமாகவே நானும் இப்பாடலை ரசிக்க ஆரம்பித்தேன்.

"தத்தித்தோம் வித்தைகள் கற்றிட" மரகதமணியின் இசையில் அழகன் படத்தில் இடம் பெற்றப் பாடல்.தான் பாடிய பாடல்களில் கொஞ்சம் சிரமப்பட்டு பாடிய பாடலாக சித்ரா அவர்கள் முன்பொருமுறை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறினார். புலவர் புலமை பித்தனின் கவிதை நயம் ததும்பும் ஒவ்வொரு வரிகளுக்கும் இடையில் கீபோர்டில் மரகதமணி பின்னியெடுத்திருப்பார். பாடலை இயக்குனர் பாலச்சந்தர் படமாக்கியிருக்கும் விதமும் நன்றாக இருக்கும்.
பாடலின் இறுதியில் ஸ்வரங்களை முடித்து வெஸ்டன் ஸ்டைலில் தாவும் ட்யூனை அத்தனை பர்ஃபெக்டா வேறு யாரும் பாடியிருக்க முடியாது என்று சொல்லுமளவிற்கு பிரமாதப்படுத்தியிருப்பார் தனது வசீகரக் குரலில் சித்ரா.

"தூளியிலே ஆட வந்த வானத்து மின் விளக்கே" சின்னத்தம்பி படப் பாடலான இப்பாடலில் ல,ள,ழ ஆகியவற்றை சித்ரா அவர்கள் உச்சரிக்கும் விதத்தைக் கவனித்துப் பாருங்கள் அத்தனை தெளிவாக இருக்கும்.கொஞ்சம் நாட்டுபுற சாயலில் வார்த்தைகளை உச்சரிக்கும் விதமும் இப்பாடலை நான் மிகவும் ரசிக்கக் காரணம்.


இங்கே சொல்லியிருக்கும் பாடல்கள் 80 - 95 ரேஞ்சில் வந்தவைகள் மட்டுமே, இன்னும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "கண்ணாளனே","எங்கே எனது கவிதை", "கண்ணாமூச்சி ஏனடா" போ
ன்ற பாடல்களும், தேவாவின் இசையில் "கருப்பு நிலா" போன்ற நிறைய சோலோஸ் பாடியிருக்கிறார்.நேரம் கிடைக்கும் போது இப்பதிவின் இரண்டாவது பகுதியாக அப்பாடல்களையும் பார்க்கலாம்.

18 comments:

rvelkannan said...

அருமையான பதிவு
பாடலின் முதல்வரியை பத்தியின் முத்ல்வரியாக வைத்து கொண்டதும்
அதை கிளிக் செய்தால் பாடலை பாடும் sub-menu(youtube) அருமையோ அருமை
தொடருங்கள் வாழ்த்துக்கள்

கார்த்திகைப் பாண்டியன் said...

இசையின் மீது அபாரமான நாட்டம் கொண்டவராக இருக்கும் இலக்கியனுக்கு வாழ்த்துகள்.. செமையான தொகுப்பு.. இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது.. குழலூதும் கண்ணனுக்கு..

anujanya said...

அசத்தல் பதிவு இலக்கியன். நிறைய பாடல்கள் பரிச்சயம். சித்ரா போன்ற perfect பாடகி கிடைப்பது அரிது.

அனுஜன்யா

ஈரோடு கதிர் said...

எனக்கு மிகவும் பிடித்தது "பாடறியேன் படிப்பறியேன்"

மிக நல்ல தொகுப்பு இலக்கியன்

பாராட்டுக்கள்

Thamira said...

இனிமையான தொகுப்பு. அவரது சித்ராவின் அழகிய பெரிய்ய்ய சிரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்..

பாலராஜன்கீதா said...

நன்றாககத் தொகுத்துள்ளீர்கள் நாடோடி இலக்கியன்.

அவர் மலையாளத்திலும் பல நல்ல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

அ.மு.செய்யது said...

சித்ராவின் "கண்ணாளனே" வ விட்டுடீங்களே...

நாடோடி இலக்கியன் said...

நன்றி வேல்கண்ணன்.
நன்றி கார்த்திகைப் பாண்டியன். (இந்த பாடல்களை முதலில் இசைக்காகவும், அடுதத்து வரிகளில் சிறந்ததாகவும் இருக்கும் பாடல்களையே தேர்வு செய்திருந்தேன் நண்பா, இதில் விடுபட்டது "வான் மேகம்" பாடல்).

நாடோடி இலக்கியன் said...

நன்றி அனுஜன்யா,(இந்த மாதிரி பதிவுகளும் உங்களுக்குப் பிடிக்குமா,எப்படியோ வருடத்தில் ஓரிருமுறை நம்ம பக்கமும் வந்துடுறீங்க).

நன்றி கதிர்(தொடரும் வருகைக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி).

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,
(எனக்கும் அவங்க சிம்பிளிசிட்டி, கபடமில்லா சிரிப்பு இதெல்லாம் அவங்களிடம் பிடிக்கும்).

நன்றி பாலராஜன் கீதா.(ஆமாம்,"ஆலுறங்கி அரங்குறங்கி", "தங்கத் தோணி தென் மலையோரம்" இந்த இரு மலையாளப் பாடல்களும் சித்ராவின் குரலில் எனக்கு மிகவும் பிடித்தவை).

நன்றி அ.மு.செய்யது, (கண்ணாளனே பதிவின் இறுதியில் குறிப்பிட்டிருக்கிறேனே கவனிக்கவில்லையா நண்பரே).

Asfar said...

superb song it reminds me my passed life with cinema after so long. actually still never i put my vote any article relative to cinema post. this is first time comment and voted..
Greeting

IKrishs said...

yenakkum Aaruvadai naal paattu romaba pidikkum..
80-95 listla indha paadalgalum yenakku pidikkum..

Kadhala kadhala-Thaiku oru thalattu
Okate asha-April 1 vidudala(Telugu)
Santhosam inghu santhosam-manidhanin marubakkam
Chalthiga namu gaadi,Alli billi-Chettigunda pleadaru (Telugu)


-um.Krish

ஆர்வா said...

மிக அருமையான பதிவு. எனக்கு ரொம்ப பிடிச்சது அழகன் படத்துல வர்ற அந்த பாட்டு. என்ன சாங்க் அது. வாவ்.. ரொம்ப ரஸிச்சுப் எழுதி இருக்கீங்க.. வாழ்த்துக்கள்

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

சின்னக்குயில் சித்ராவின் பாடல்களை
நன்றாக ஆய்வு செய்துள்ளீர்கள்
பாரட்டுக்கள்..

Raj said...

//"மழையின் துளியில் லயம் இருக்குது" சின்னத்தம்பி பெரியத்தம்பி படத்தில் இடம் பெற்ற இப்பாடலில் ராஜா பியானோவில் கலக்கியிருப்பார்.பாடலின் ஆரம்பத்தில் வரும் தூறல் விழுவதைப் போன்ற இசைச் சிதறல் அருமையாக இருக்கும். இப்பாடலின் அற்புதமான வரிகளைக் கேட்கும்போது கங்கை அமரன் ஏன் நிறைய பாடல்கள் எழுதவில்லை என்றக் கேள்வி கண்டிப்பாக எழும்//

இந்த படத்துக்கு இசையும் கங்கை அமரன் தான் சார்....கொஞ்சம் verify பண்ணி்க்குங்க.

நாஞ்சில் நாதம் said...

மிக நல்ல தொகுப்பு இலக்கியன்

பாராட்டுக்கள்

நாடோடி இலக்கியன் said...

நன்றி Asfar,

நன்றி um.Krish,(அட,சந்தோஷம் இன்று சந்தோஷம் பாடலை எப்படி மறந்து போனேன்,அதையும் இந்த லிஸ்ட்டில் யோசித்து வைத்திருந்தேன், உங்கள் ரசனை குறித்து மகிழ்ச்சி.அந்த தெலுங்கு பாடல்களை நான் கேட்டதில்லை)

நன்றி கவிதை காதலன்.

நன்றி தமிழ் வெங்கட்.

நன்றி ராஜ்,(இதுநாள் வரை இளையராஜா இசையமத்தப் பாடல் என்றுதான் நினைத்திருந்தேன்,கூகிள் தேடலில் பல தளங்களில் ராஜா என்றும் சில தளஙளில் கங்கை அமரன் என்றும் இருக்கிறது தெளிவாகத் தெரிந்த உடன் மாற்றிவிடுகிறேன் நண்பா,தகவலுக்கு மிக்க நன்றி).

நன்றி நாஞ்சில் நாதம்.

I got it said...

இதயத்தைத் திருடாதே படத்தில் ஆத்தாடியம்மாடி தேன் மொட்டுதான் பாட்டையும் சேர்த்துக்கங்க.