Tuesday, August 18, 2009

பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும்

எங்கள் ஊர்ப் பகுதியில் நடக்கும் சில வேடிக்கையான சம்பிரதாயங்களில் பெண் கேட்டல் என்ற நிகழ்வை எழுதியதைத் தொடர்ந்து இன்று பன்றி வேட்டையும் பாக்குத் திருவிழாவும் என்ற சுவாரஸ்யத் திருவிழாவைப் பற்றிப் பார்ப்போம்.

கிராமப்புறங்களில் நாட்டுத் திருவிழா என்று ஒன்று நடக்கும். பதினெட்டு கிராமங்கள் சேர்ந்தது ஒரு நாடு.(சோழர்களின் ஆட்சிக் காலத்தின் உள்ளாட்சிப் பிரிவுகளில் ஒன்றுதான் இந்த நாடுகள் எனும் அமைப்பு). கோனூர் நாடு, குளத்தூர் நாடு, காசவள நாடு, மெய்சொல்லி நாடு என ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு பெயருண்டு.

தஞ்சை மாவட்டத்தின் ஒரத்தநாடு தாலுக்காவின் கீழ் வரும் கோனூர் நாட்டில் வருடா வருடம் ஒரு வாரத்திற்கு மேலாக நடக்கும் நாட்டுத் திருவிழாவின் ஒரு சுவராஸ்யமான பகுதியே ”பன்றி வேட்டை பாக்குத் திருவிழா” .

பெரும்பாலான திருமண சம்பந்தங்கள் எல்லாமே இந்த பதினெட்டுப் பட்டிகளிலேயே இருக்கும்.(இப்போது பரவலா வெளியிலும் சம்பந்தம் பேசுகிறார்கள்) .இந்த பாக்குத் திருவிழாவன்று பதினெட்டு கிராம மக்களும் தங்கள் நாட்டிற்கென்று பொதுவாக இருக்கும் ஒரு கோயிலின் முன்பு கூடிவிடுவர்.

திருமணமானப் பெண்களுக்கு அவர்களின் தாய் வீட்டிலிருந்து சீதனமாக கொட்டப் பாக்குகளை கொடுப்பர்.இந்த பாக்குகளில் எண்ணிக்கை குறைந்த பட்சம் இருபத்தைந்திலிருந்து அதிக பட்சமாக ஆயிரக்கணக்கிலும் அவரவர் வசதிக்கேற்ப கொடுப்பார்கள்.(மக்கள் இப்போது நிஜாம் பாக்கிற்கு மாறி விட்டார்கள்).

இதில் முதல் பாக்கு என்று ஒன்று உண்டு. புதுமணப் பெண்ணிற்கு கொடுப்பதுதான் முதல் பாக்கு. பெண்ணின் உறவுக்காரர்கள் அனைவரும் புதுமணத் தம்பதியருக்கு தாம்பூலத்தில் பாக்கு, பணம் வைத்துக் கொடுப்பார்கள், பதிலுக்கு மாப்பிள்ளை வீட்டார் இனிப்பு வகைகளை கொடுப்பார்கள். எங்கெங்கு காணினும் நிறைய புதுமணத் தம்பதியரை பட்டுடைகளோடு காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

இந்த 18 பட்டிகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் ஒரே பள்ளியில் படித்தவர்களாக இருப்பார்கள். திருமணமாகி திருவிழாவில் கணவனோடு நிற்கும் பெண்கள் தங்களோடு கூடப் படித்தப் பசங்களைப் பார்க்கும்போது ஒரு மாதிரி நாணிக் கோணுவாங்க பாருங்க அடடா அழகான கவிதை தருணம்ங்க அது.

இன்னும் சில பெண்கள் பார்த்தும் பாராதது போல பந்தாவாக கணவனின் கைகோர்த்தபடியே நின்று கொண்டிருப்பார்கள், அந்த மாதிரி பொண்ணுங்களைத்தான் ரௌண்டு கட்டுவானுங்க பசங்க, ”டேய் ஊள மூக்கு”, ”சுருட்டை” ,”கௌதாரி” என பள்ளி நாட்களில் வைத்த பட்டப் பெயர்களை வேறு யாரையோ கூப்பிடுவதுபோல் உரக்கச் சொல்லி டரியலாக்குவானுங்க. பதறி கையை உதறி யாரும் அறியாத வண்ணம் “சீ போ” என்று அந்த பொண்ணுங்க செல்லமாய் திட்டுவதையெல்லாம் ஒரு வாரத்திற்கு கதை கதையாய் பேசித் திரிவாய்ங்க.

இன்னொரு பக்கம் பழைய காதலிகளை கண்களாலேயே நலம் விசாரித்த படியே மென்சோகத்தோடு நகர்ந்து போகும் நடுத்தர வயது மனிதர்களையும் இங்கே காணமுடியும்.

பாக்கு கொடுக்கும் வழக்கம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக கொண்டாடப் படுவதாகும். பிறந்த வீட்டோடு என்ன பிரச்சனை இருந்தாலும் பாக்கு திருவிழாவில் ஒன்று கூடிவிடுவார்கள். என்ன சண்டை இருந்தாலும் இந்த பாக்கு கொடுப்பதை தொடர்வதற்குக் காரணம் பாக்கு கொடுக்கப் படவில்லை என்று தெரிந்தால் சம்பந்தப் பட்ட பெண்மணியின் ஊரில் நடக்கும் குழாயடிச் சண்டையில்“போடி சொத்த பாக்குக்கு வக்கத்தவள” என்ற ஏச்சு பேச்சுக்கு ஆளாகி பிறந்த வீட்டின் மானம் கப்பலேற்றப்படும் அபாயம் இருப்பதே. அதே போன்று ”கூடப் பொறந்தவளுக்கு பத்து ரூவாய்க்கு பாக்கு வாங்கிக் கொடுக்க துப்பு இல்ல இவனெல்லாம் தோளில் துண்டு போட்டுகிட்டு திரியிறான்” என்று அண்ணன்,தம்பிகளும் அட்டாக்கிற்கு ஆளாக நேரிடும். அந்த கௌரவப் பிரச்சினைக்காகவே விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

புது மணப் பெண்ணிலிருந்து பாக்கின் அவசியம் உணர்ந்த பழைய குமரிகள் வரை திருமணமான அனைவருக்கும் பாக்கு அவரவர் பிறந்த வீட்டிலிருந்து வந்துவிடும். சகோதரர்கள் இருவரைக் கொண்ட பெண்கள் என்றால் இரண்டு தனித் தனிப் பாக்குகள் வரும், அதே பெண்ணின் கணவருக்கு இரு சகோதரிகள் என்றால் சகோதரர்களிடம் வாங்கிய பாக்குகளை கணவரின் சகோதரிகளிடம் கொடுத்துவிட்டு செலவை மிச்சப் படுத்திவிடுவார்கள்.

அலைபேசி இல்லாத காலத்தில் பாக்கை கையில் வைத்துக் கொண்டு அவரவர் உறவினர்களை கூட்டத்தில் அலைந்துத் தேடிக் கண்டிபிடித்து
” யுரேகா யுரேகா” என்று கத்தாத குறையாக பாக்கை கொடுப்பார்கள். அந்த கண்ணாமூச்சி விளையாட்டு இப்போது இல்லை.

தன் பிறந்த ஊரின் மக்களைப் பார்த்ததும்”பெரியம்மா”, ”தம்பிகளா”, ”சித்தப்பா” என எதாவது ஒரு உறவுமுறையை கொண்டு அழைத்தபடியே ஓடி வந்து நலம் விசாரிக்கும் பெண்களைப் பார்க்கும் போது பசங்களுக்கும் கூட கண் கலங்கிவிடும்.

இளந்தாரிக் கூட்டம் அடுத்த வருட புதுப் பாக்கிற்கு ஏற்பாடு செய்யும் விதமாக அவரவர்களுக்கேற்ற ஜில், ஜங், ஜக்கிற்குப் பின்னால் ரூட் விட்டபடியே திரிவது ஆண்டாண்டு காலமாக தொடரும் மரபுக் கவிதையின்
நீட்சிகள். சில ஜக்கெல்லாம்கூட தாவணியில் அன்று ஜில்லாகக் காட்சியளிக்கும், அதே மாதிரி பொருந்தா சுடிதாரில் ஜில்லும் ஜக்காக திரிந்துகொண்டிருக்கும்.

”பாம் பாம்” ஓசையை குழந்தைகள் இருக்கும் இடமாகப் பார்த்து அழுத்தும் ஐஸ் வண்டிக்காரர்,கலர் பலூனை குழந்தைகளிடம் காட்டி கண்ஜாடையில் வாங்கச் சொல்லும் பலூன் கடைக்காரர், வெரைட்டி ஸ்வீட் என்ற பெயரில் வித விதமான வடிவங்களில் ஒரே சுவையுடைய சக்கரைப் பாகு கட்டிகளை அழகாக அடுக்கி வைத்திருக்கும் திருவிழா ஸ்வீட் ஸ்டால்கள், ரங்கராட்டினம் என சிறுவர்களை கவர்ந்திழுக்கும் ஒரு தனி உலகத்தில் பெரியவனாகியும் பலமுறை தொலைந்திருக்கிறேன்.

மாமன்,மச்சானெல்லாம் ஒதுக்குப்புற இடத்தில் கள்ளத்தனமாக விற்கப்படும் சோமபானங்களில் மூழ்கி,கிங்,குயின்,ஜாக் என்ற வேத மந்திரங்களை ஓதி மகிழவென்று விழா சார்பாகவே ஒதுக்கப் பட்டிருக்கும் தனியிடத்தில் சமத்தாக அடைந்திருப்பர்.

இத்திருவிழாவின் இன்னொரு அங்கம்தான் ”பன்றி வேட்டை”. பால்குடம், காவடி எடுப்பதாக வேண்டிக்கொள்வதைப்போல பன்றி வேடமிடுவதாக வேண்டிக் கொண்டு அக்கோயிலின் அருகே இருக்கும் சிறு குட்டையின் சேற்றை உடலெங்கும் பூசியபடியே கோயிலின் முன்பு படுத்திருப்பார்கள். இதில் எல்லோரும் கலந்து கொள்வதில்லை இவ்விழா நடக்கும் ஊரைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரில் பதிமூன்று வயதுவரைக்கும் உள்ள சிறுவர்கள் மட்டுமே இப்படி பன்றி வேடமிடுவார்கள்.

உடலெங்கும் சேற்றைப் பூசியபடி இருக்கும் இச்சிறுவர்கள் பாக்குத் திருவிழாவிற்கு வந்திருக்கும் மக்களின் மேல் சேற்றுடம்போடு ஓடிவந்து உரசுவார்கள். இதனால் இந்த பன்றி வேடமிட்ட பசங்களைப் பார்த்ததும் மக்கள் தெரித்து ஓடுவதைப் பார்க்க ரகளையாக இருக்கும். பளிச்சென்று உடை தறித்தவர்களாகப் பார்த்து இந்த பன்றி பசங்க சேற்றை பூசிவிட்டு ஓடிவிடுவார்கள். அழுக்கான சட்டையோடு அசடு வழிந்து நிற்கும் சில மைனர் குஞ்சுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்.

பல அம்சங்களை உள்ளடக்கிய இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் உறவை புதுப்பித்தலே. பிரச்சனைகள் நிலவும் உறவினர்களுக்கிடையே பகை மறந்து உறவாட நினைக்கும் நேரத்தில் மூன்றாவது நபர் சமரசம் தேவையிராமல் இயல்பாகவே அவர்கள் கூடிக் குலவவே இத்திருவிழா என்பது என் எண்ணம்.

கொசுறு:
பல வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் ஊரில் இருந்தேன், ஏதேதோ பிரச்சனைகளால் இந்த வருடம் நாட்டுத் திருவிழா நடக்கவில்லை. வட போச்சேன்னு ஆகிப்போச்சு. (நீ ஊரில் இருந்தியல்ல அப்புறம் எப்படின்னு யாருங்க அங்கே முனகுறது).

அடுத்தது பகவதியம்மன் கோயில் பூஜையோடு வருகிறேன்.

30 comments:

PPattian said...

கலக்கல்.. அப்படியே அந்த திருவிழாவை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.. இதை அப்படியே ஒரு சினிமா காட்சியாகவோ, குறும்படமாகவோ எடுக்க ஸ்கிரிப்ட் ரெடி..

சிவக்குமரன் said...

\\\சில ஜக்கெல்லாம்கூட தாவணியில் அன்று ஜில்லாகக் காட்சியளிக்கும், அதே மாதிரி பொருந்தா சுடிதாரில் ஜில்லும் ஜக்காக திரிந்து கொண்டிருக்கும்.///

ஹா ஹா ஹா, வயிறு குலுங்க சிரிப்பு வந்தாலும், பழைய நினைவுக் குப்பைகளை கிளறிக் கிட்டே இருக்கீங்கண்ணா..

Unknown said...

நல்லா இருக்கு சார்!

ஈரோடு கதிர் said...

//“சீ போ” என்று செல்லமாய் திட்டுவதையெல்லாம்//

ஆஹா கவிதை போல் விரிகிறது மனதினுள்

//சிறு குட்டையின் சேற்றை உடலெங்கும் பூசியபடியே கோயிலின் முன்பு படுத்திருப்பார்கள்.//

படிக்கும்போதே காட்சி கண்முன் விரிகிறது. சிரிப்பும் பொங்கி வருகிறது.

பன்றி வேட்டையென்றவுடன் இங்கு பன்றியை குத்தும் நிகழ்வு நடைபெறும். அது நினைவிற்கு வந்தது

//பன்றி பசங்க//
ம்ம்ம் நல்லா பேர் வைக்றீங்க போங்க

இலக்கியன் இடுகையை பெரிதும் ரசித்தேன்

Thamira said...

நினைவுகள் ரசனை. போன தடவையே சொன்னேன்ல.. இன்னும் கிரிஸ்ப்பா(அதாவது சின்னதா) எழுதுங்கன்னு.!

☼ வெயிலான் said...

// நீ ஊரில் இருந்தியல்ல அப்புறம் எப்படின்னு யாருங்க அங்கே முனகுறது//

நாந்தான்...... நாந்தான்...... :)

Unknown said...

Anna super asaththitteenga... :))

//தன் பிறந்த ஊரின் மக்களைப் பார்த்ததும்”பெரியம்மா”, ”தம்பிகளா”, ”சித்தப்பா” என எதாவது ஒரு உறவுமுறையை கொண்டு அழைத்தபடியே ஓடி வந்து நலம் விசாரிக்கும் பெண்களைப் பார்க்கும் போது பசங்களுக்கும் கூட கண் கலங்கிவிடும்.//

Hmmmmm :(((

//பல அம்சங்களை உள்ளடக்கிய இத்திருவிழாவின் முக்கிய நோக்கம் உறவை புதுப்பித்தலே. பிரச்சனைகள் நிலவும் உறவினர்களுக்கிடையே பகை மறந்து உறவாட நினைக்கும் நேரத்தில் மூன்றாவது நபர் சமரசம் தேவையிராமல் இயல்பாகவே அவர்கள் கூடிக் குலவவே இத்திருவிழா என்பது என் எண்ணம்.//

Vizhaakkal, pandigaigal kondaaduvadhe adhukku dhaane?? :)))

Arumai anna... Unga ezhuththukkaloda nativity engalaiyum angu azaiththu sendradhu.. :)))

துபாய் ராஜா said...

நல்லதொரு நினைவுப்பதிவு.

அழகான எழுத்து நடையில் அருமையான பகிர்வு.

கார்த்திகைப் பாண்டியன் said...

திருவிழாவை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்..அருமை..:-))

நாடோடி இலக்கியன் said...

நன்றி புபட்டியன்,(குறும்படம் தானே எடுத்துட்டா போச்சு, உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிங்க நண்பரே).

Sanjai Gandhi said...

சூப்பர்.. இது எல்லா கிராமத்துலையும் இல்லை போல. எனக்கு புது தகவல்.

Mallikondar said...
This comment has been removed by the author.
Mallikondar said...

அருமையான பதிவு...

நானும் ஒரத்தநாடு தாலுக்கா தான். இந்த மாதிரி நிறைய விஷயங்கள் நம்ம ஊரிலிருந்து மறைந்து வருவது வருத்தமான ஒன்று.

-ர. மல்லிக்கொண்டர்

நாடோடி இலக்கியன் said...

நன்றி சிவா,(இன்னும் கிளறுவேன் ஜாக்கிரதை).

நன்றி ரவிஷங்கர்.

நன்றி கதிர்,(ஒவ்வொரு பதிவிலும் உங்க எழுத்தும்,எடுத்துக் கொள்கிற டாப்பிக்கும் அசத்தலா இருக்குங்க கதிர்).

நாடோடி இலக்கியன் said...

நன்றி ஆதி,(இனி கிரிஸ்பா எழுத முயல்கிறேன்,எல்லாத்தையும் சொல்லிடனும்னு ஒரு ஆர்வத்தில நீண்டு விடுகிறது).

நன்றி வெயிலான்,(நீர்தானா அது, ம் இருக்கட்டும் இருக்கட்டும்).

நன்றி ஸ்ரீமதி,
(
//Vizhaakkal, pandigaigal kondaaduvadhe adhukku dhaane??//

வாஸ்தவம்தான் :) ).

நாடோடி இலக்கியன் said...

நன்றி துபாய் ராஜா,

நன்றி கார்த்திகைப் பாண்டியன்

நன்றி சஞ்சய்,(இது எங்க ஏரியா ஸ்பெஷல் ஹி ஹி).

நன்றி மல்லிக்கொண்டார்,(உங்களுக்கு எந்த ஊர் நண்பா, ஓரளவிற்கு கணிக்க முடிகிறது,உங்க பட்டத்தை வைத்து).

இரும்புத்திரை said...

//அழுக்கான சட்டையோடு அசடு வழிந்து நிற்கும் சில மைனர் குஞ்சுகளைப் பார்க்க பரிதாபமாக இருக்கும்//

உலகத்தை நினைச்சேன் சிரிச்சேன்

நாடோடி இலக்கியன் said...

மல்லிகொண்டார்,நீங்க புலவன் காடு ஏரியாவா?

Unknown said...

எழுத்துகளிலேயே காட்சிகளை கண் முன் நிறுத்திவிட்டீர்கள்..

அருமையான திருவிழா..
கலக்கலான இடுகை..

நாடோடி இலக்கியன் said...

நன்றி அர்விந்த்,(பின்னூட்டம் போடவும் வழி கண்டுபிடிச்சாச்சா?கலக்குங்க).

நன்றி பட்டிக்காட்டான்,

நாஞ்சில் நாதம் said...

/// பாக்கு கொடுக்கும் வழக்கம் உறவுகளை புதுப்பித்துக் கொள்வதற்காக கொண்டாடப் படுவதாகும்///

இந்த ஒரு காரணத்துக்காகவே இந்த திருவிழா எல்லோரும் கொண்டாடலாம். ஒரு திருவிழா கூட்டத்துல புகுந்து வந்த உணர்வு.

நாடோடி இலக்கியன் said...

நன்றி நாஞ்சில் நாதம்,(சந்தர்ப்பம் அமையும் போது இத்திருவிழாவிற்கு நேரிலேயே அழைத்துச் செல்கிறேன்,நேரில் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்).

Unknown said...

அண்ணா ஒரு நேயர் விருப்பம் (யார் அந்த நேயரா? வேற யாரு நான் தான் ;))பாடல் வரிகள் போட்டு புதிர் போடுவீங்கல்ல? Like முதல் வரி சொல்ற மாதிரி.. அது மாதிரி போடுங்களேன் ப்ளீஸ்.. :))

நாடோடி இலக்கியன் said...

@ஸ்ரீமதி,
நேயர் விருப்பத்தை மைண்ட்ல வச்சுக்கிறேன்.விரைவில் நிறைவேற்றப்படும்.

Mallikondar said...

// மல்லிகொண்டார்,நீங்க புலவன் காடு ஏரியாவா? //

பக்கதில் தான்.

Please send an email to r.mallikondar@gmail.com

இது நம்ம ஆளு said...

அருமையான தகவல்கள் .

நாடோடி இலக்கியன் said...

@மல்லிக்கொண்டார்,

naadodi.ilakkiyan@gmail.com u can send mail to thid id.thank u.

நன்றி இது நம்ம ஆளு.

Anonymous said...

கலக்கல்.. திருவிழாவை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்

Unknown said...

அருமையான நடை தம்பி. சின்ன அதே சமயம் உயர்ந்த குறிக்கோளுடன் நடத்தப்படும் பல திருவிழாக்கள் மறைந்து வருவது, வருத்தம்தான்!

சரி, இந்தத் திருவிழாவுக்கு வெளியூர் ஆட்களுக்கு அனுமதி உண்டா? அடுத்தமுறை கலந்துக்கலாமில்ல, அதான் :)

நாடோடி இலக்கியன் said...

நன்றி தஞ்சாவூரான்.(கண்டிப்பா அடுத்த வருடம் வாங்க, எல்லோருக்கும் அனுமதி இலவசம்)