மலர்விழி,ஆறாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை ஒரே வகுப்பில் என்னுடன் பயின்றவள். அவளைக் கண்டாலே எனக்கு ஆகாது, சக மாணவர்களுக்கும் அவளென்றால் மகா எரிச்சல்தான். சாந்தி டீச்சருக்கு அடிவருடி, படிப்பில் ஆவரேஜ்தான் என்றாலும் சாந்தி டீச்சர் பஸ்ஸைவிட்டு இறங்கும் போது அவங்க ஹான்பேக்கை வாங்கி வருவதிலிருந்து டிஃபன் பாக்ஸ் கழுவி வைப்பது வரை சகலமும் அவளானதில் லீடரானவள்.
பேசியவர்கள் பெயர் லிஸ்ட்டில் மிக மிக அதிகம்,குரங்குபோல் தாவினான், ரமேஷை அடித்தான்,அனிதாவின் தலையில் கொட்டினான் என என் பெயருக்குப் பின் பலவாறு எழுதி வைத்து சாந்தி டீச்சரிடம் தினமும் அடிவாங்க வைப்பாள். அப்போதெல்லாம் அவளை என் ஜென்ம விரோதியாகப் பாவித்துப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருந்தேன். அடுத்த இரண்டு வருடங்களும் தனது ஜால்ரா திறமையினாலாயே லீடர் பதவியில் ஹாட்ரிக் அடித்தாள்.
ஒன்பதாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருந்த சமயம் திடிரென ஒரு நாள் தாவணியில் வந்தாள். அவள் ஒரு பேரழகி என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. எப்படி சொல்றது, அவ ரொம்..ப அழகாய் இருந்தாள். முன்பு போலில்லாமல் அமைதியாக இருந்தாள், ஏதாவது கிண்டலடித்தால் கோபப்படாமல் வெட்கப்பட ஆரம்பித்தாள். அந்த வெட்கம்தான் என்னை அவளின்பால் கிறுக்கு பிடிக்க வைத்தது.
இத்தனை வருடமா எந்த கண்களை முண்ட கண்ணின்னு திட்டினேனோ அதேக் கண்கள் என்னை ஒரு முறை திரும்பிப் பார்க்காதா என்று ஏங்க ஆரம்பித்தேன். காரணமே இல்லாது அவளை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்றேத் தோணும்.வழக்கம் போல் மற்ற பசங்க அவளை திட்டும்போது என்னையுமறியாமல் அவளுக்கு வக்காலத்து வாங்க ஆரம்பித்தேன்.
எப்போதும் போல் லீடர் பதவிக்கு விருப்பப்படும் மாணாக்கர்களின் பெயரை ஆசிரியர் கேட்ட போதும் கூட முந்திரிக்கொட்டையாக முந்தி கைதூக்குபவள் அன்று அமைதியாய் இருந்து ஓரக்கண்ணால் என்னை கைதூக்கச் சொல்லி ஜாடைக் காட்டினாள். மாமலையே ஓர் கடுகாகும் அர்த்தம் முழுதுமாய் உணர்ந்த தருணம் அது.
லீடர் பதவி என்றாலே எனக்கு அலர்ஜி, தினமும் பிளாக் போர்டை துடைக்கணும், சாக்பீஸ் வாங்கி வரணும் இந்த மாதிரி வேலையெல்லாம் செய்ய நானென்ன வேலைக்காரனா என்கிற நினைப்போடு இருந்தவன் அவளின் கண்காட்டலில் அனிச்சையாய் கையை உயர்த்தினேன்.
ஒரு நாள் வகுப்பில் யாருமே இல்லாத நேரத்தில் அவளின் மதிய உணவை காலி செய்துவிட்டு ஏதுமறியாதவன்போல முகத்தை வைத்திருந்தேன். உணவு இடைவேளையில் அவசரமாய் டிஃபன் பாக்ஸை திறந்தவள் பாக்ஸ் காலியாய் இருந்ததை கண்ட நொடியில் யோசிக்காமல் என்னைப் பார்த்துச் சிரித்தாள். எப்படி அது? இன்னும் கூட எனக்கு புரியாத புதிர்தான்.
கண்களால் காதல் பேசுவதாய்த் தோன்றும்,பேசும் போதோ சக வகுப்புத் தோழர்களிடம் பேசுவது போலவே என்னிடமும் இயல்பாய்ப் பேசுவாள். என்னால் ஒரு முடிவுக்கும் வர முடியாதுத் தவித்துக்கொண்டிருந்தேன்.
சொல்லிவிடலாமென்று நெருங்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சனிய புடிச்சத் தயக்கம் முந்தி வந்து அமர்ந்துவிடும். பத்தாம் வகுப்புத் தேர்வு நெருங்கிய சமயம் இனிமேலும் தாமதித்தால் அவளை இனிமேல் பார்ப்பது கூட அரிதாகி விடுமென்பதால் அவளின் மேற்கொண்ட மையலை என் வகுப்புத் தோழனும் அவளின் ஊர் பையனுமான சக மாணவனிடம் தூது போக இரைஞ்சி நின்றபோதுதான் அவள் அவளின் தாய் மாமாவிற்காகவே வளர்க்கப்படுகிறாள் என்பதை அறிந்து என் காதலை எனக்குள்ளேயே வைத்துக்கொண்டேன்.
ஒரு வழியாய்ப் பத்தாம் வகுப்பு முடிந்து நான் அருகில் இருக்கும் ஒரு சிறு நகரத்திலும் அவள் வேறொரு பெருநகரத்திலும் மேநிலை வகுப்பைத் தொடர்ந்தோம்.
புதிய பள்ளியில் வேறொரு நட்பு வட்டம் பெருக ஆரம்பித்ததில் கொஞ்ச கொஞ்சமாய் மலர்விழியை மறக்கத் தொடங்கினேன் காரணம் நித்யா. பதினொன்றாம் வகுப்பில் எனக்கு நட்பாகி பனிரெண்டாம் வகுப்பில் அவளில்லாமல் நானில்லை எனும் அளவிற்கு என்னைப் பைத்தியமாக்கியவள்.
மலர்விழியைப் போன்று நித்யா நல்ல நிறமில்லை ஆனாலும் அழகி. பள்ளி ஆண்டு விழாவில் கலை, இலக்கியமென நடக்கும் அத்தனை போட்டிகளிலும் எனக்கும் அவளுக்கும்தான் போட்டி நிகழும். கலை ஆர்வத்தில் எனக்கு நிகராக இருந்ததால் இயல்பாய் நிகழ்ந்தது எனக்கும் அவளுக்குமான ஈர்ப்பு. எனக்கு மட்டுமே அவளின் மேல் ஈர்ப்புக் கூட இருந்திருக்கலாம். இருந்தாலும் அவளுக்கும் என் மேல் ஈர்ப்புன்னு சொல்லும்போதே ஒரு தனி சுகம் மனசெங்கும் பரவுவதை நான் தடுக்க விரும்பவில்லை.
ஒரு நாள் தமிழாசிரியர் உவமைத் தொகைக்கு எடுத்துக்காட்டாக ’மலர்விழி’ என்று சொன்னார்.எனக்கு மீண்டும் மலர்விழியின் ஞாபகம் வந்து நித்யாவை நினைப்பது எதோ மலர்விழிக்கு செய்கிற துரோகம் போல குற்ற உணர்ச்சியாய் வேறு இருந்தது.
ஹார்மோன்கள் ஆடிய கதகளியில் நித்யா நித்யா நித்யாதான் அப்போது எனது அத்தனை செல்களிலும் பச்சை குத்தப்பட்டிருந்ததால் மலர்விழியை நேசித்தது ஒரு இனக்கவர்ச்சியென்றும் நித்யாமேல் உள்ளதுதான் காதல் என்பதாகவும் எனக்குப் பட்டது.
புத்தகம்,டெஸ்க் தொடங்கி கிடைக்கும் அத்தனை ரூபாய் தாள்களிலும் நித்யாவை எனக்கே நித்யமாக்கும் காதல் சங்கேத வார்த்தைகளை கிறுக்கிக்கொண்டிருந்தேன். ஆனாலும் நித்யாவிடமும் நேரில் சொல்லத் தயக்கம். மலர்விழி மாதிரி இவள் அமைதியானவள் இல்லை, எங்கே நான் காதலைச் சொல்லி அவளுக்கு இஷ்டமில்லையென்றால் பட்டென்று அறைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.கிட்டத்தட்ட பாரதியார் காணத் துடித்த புதுமைப் பெண்ணில் பாதியவள்.
இப்படியேத் தயங்கியதில் இரண்டு வருடம் முடிந்து பரஸ்பரம் முகவரி வாங்கிக்கொண்டு சொர்கத்தில் சேராக்காதலோடுப் பிரிந்து வெவ்வேறு கல்லூரிகளில் காலடி வைத்தோம்.
என்னால் நித்யாவை மறக்கவே முடியாமல் துணிந்து அவள் எங்கே படிக்கிறாள் என்பதை அறியும் பொருட்டு அவள் வீட்டிற்கு பல முறை கடிதம் எழுதியும் பதிலில்லாததால் அவள் கொடுத்த முகவரிக்கு நேரில் சென்று பார்த்தபோது அவளின் அப்பாவிற்குப் பணியிட மாறுதல் கிடைத்ததில் அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள் என்ற செய்தியை மட்டுமேச் சேகரிக்க முடிந்தது.
இன்னும் கொஞ்ச நாள் அவளைப் பார்க்காமல் இருந்தால் நிச்சயம் சட்டையைப் பிய்த்துக்கொண்டு விடுகிற மாதிரியான நிலையில்தான் என்னுடன் பனிரெண்டாம் வகுப்பில் படித்த ஒரு நண்பனை எதார்த்தமாய்க் காண நேர்ந்தது. அவனுக்கு நான் நித்யாவை ரூட் விடுவது நன்றாகத் தெரியுமென்பதால், ”நித்யாவிடம் எதாவது சொல்ல வேண்டுமா?” என்று அவன் என்னிடம் கேட்டதைத் தொடர்ந்துதான் அவனும் நித்யாவும் ஒரே கல்லூரியில் படிப்பது தெரிய வந்தது.
அவனிடம் நடந்தவற்றைச் சொன்னதும் அவன் கொடுத்த ஐடியாவின் பேரில் நான்கு மணிநேரப் பயணத்தில் அவள் படிக்கும் கல்லூரிக்கு நண்பனை பார்க்கச் செல்வது போல் சென்றேன்.
யூனிஃபார்மிலேயே பார்த்துப் பழகிய அவளை முதன் முறையாக மாடர்ன் ட்ரெஸில் பார்த்ததும் காதல் கதைகளின் வர்ணிப்புகளில் வரும் அதே தேவதையாய்த்தான் எனக்கும் தெரிந்தாள். நான் அவளை எதார்த்தமாய் பார்ப்பது போல் இருப்பதற்கான ஒத்திகையை மனதினுள் நடத்திக்கொண்டிருக்கும்போதே அவள் என்னைப் பார்த்துவிட்டு ஓடிவந்தாள். இதயம் தாறுமாறாய்த் துடித்து, உடம்பெங்கும் வேர்வைப் பூத்து கைகாலெல்லாம் நடுங்கும் தருவாயில் இருந்தது.
நேரே என்னிடம் வந்தவள் ரொம்ப சந்தோஷமாய் நலம் விசாரித்துவிட்டு , ”நானே உன்னைப் பார்கணும்னு நெனச்சிட்டிந்தேன் மை காட் நீயே வந்து நிக்குற” என்றாள். கபிலனைப் பார்க்க வந்தியா?” என்று அவளாகவேக் கேட்டாள். ”ஆமாம்”என்று ஒரு மாதிரி உளறினேன்.பிறகு எனது கல்லூரி,மற்ற நண்பர்கள் என பல விஷயங்களை விசாரித்தவள், கொஞ்சம் கிசுகிசுப்பான குரலில் ”உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றுச் சொல்லி சாயங்காலம் கல்லூரி முடிந்து வருவதாகவும், என்னை அந்த ஊரில் இருக்கும் பிரசித்திப் பெற்றதொரு கோவிலில் காத்திருக்கும்படியும் சொல்லிவிட்டு ”கிளாஸுக்கு நேரமாச்சு” என்றபடியே ஓடினாள்.
பழம் நழுவி பாலில் விழும் போலிருக்கேன்னு நினைத்தப்படியே கோவிலில் காத்திருந்தேன். காதலிக்காகக் காத்திருப்பதை யாருங்க சுகமென்று சொன்னது, எனக்கு மரண அவஸ்தையாய் கரைந்தது அந்நிமிடங்கள்.கிட்டத்தட்ட ஒரு வருடம் பார்க்காமல் இருந்ததை விடவும் அந்த சில மணித்துளிகள் கொடுமையாய் நகர்ந்தது.
பொதுவாக கோவிலுக்கு எதாவது நேர்ந்துகொள்வார்கள், ஆனால் அக்கோயிலே காதலுக்கு நேர்ந்து விட்டது போன்று எங்கும் காதலர்களால் நிரம்பி வழிந்தது.மற்றக் காதலர்களைப் பார்த்தபோது இன்னும் கொஞ்ச நேரத்தில் நானும் கூட உங்களைப் போல என் நித்யாவின் கைபிடித்தப்படியே இந்தக் கோயிலை வலம் வருவேன் என்று மனதில் நினைத்தப்படியே நின்றிருந்தேன்.
தூரத்தில் என் தேவதை சன்னியில் வந்துகொண்டிருந்தாள், அவளின் பின்னால் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தாள்,அவளின் தோழியாக இருக்கக் கூடும். அவர்கள் என்னை நெருங்க நெருங்க மீண்டும் என்னை பரபரப்பு ஆட்கொண்டது.
அவர்கள் என்னை மிக நெருங்கிய சமயம் நித்யாவின் கூட வந்தவளைப் பார்த்ததும் எனக்கு ஒரு நிமிடம் மூச்சு நின்று வந்தது, ஆம் நீங்கள் நினைப்பது மிகவும் சரி மலர்விழியேதான்.
(தொடரும்)
டிஸ்கி:இதன் தொடர்ச்சியை எப்படிக் கொண்டு போவது என்பது இப்போதைக்கு எனக்கே தெரியாது, யாராவது ஹிண்ட் கொடுத்தால் அங்கிருந்து தொடருகிறேன்.
இரண்டாம் பகுதி இங்கே:
22 comments:
ஒருவேளை நீங்க இந்த பதிவை படித்தால் ஐடியா கிடைக்கும்
கதை ரொம்ப நல்ல இருக்கு
ரொம்ப நல்லா இருக்குங்க.. கதை நடை, வர்ணனை எல்லாம் மிக அபாரம்..
முடிவுக்காக காத்திருக்கிறேன்.. தொடருங்கள்..
அடப்பாவிகளா...
மனசில கொஞ்சம் திக் திக் னு அட இந்த போண்ணாவது பாரிக்கு செட் ஆயிடுமான்னு ஆசையாப் படிச்சிட்டு வந்தா....
அய்யோ... மண்ட வெடிச்சிரும்போல இருக்கே..
ஒரு முடிவ சொல்லுங்கப்பு
பாரி... முந்தாநாள் என்கிட்ட போன் பேசினப்பவே நினைச்சேன், உங்களுக்கு என்னமோ நடக்கப்போகுதுன்னு, அது சரியா நடந்திருச்சுப்பா....
(பின்னே எங்கூட பேசினா இப்படித்தானே கன்பியூஸ் ஆவிங்க)
பார்வையிலே லீடராக லீடு கொடுத்தது..
யூனிபார்ம் ஃபிகரை கலர் டிரஸ்ல பார்த்தது...
ஆஹா.. அற்புதமான, மனதை பந்தாடும் தருணங்கள் நண்பா...
கலக்கிட்டிங்க..
இந்த காவியத்திற்கு(!) ஏன் லேபிள் இப்படி வச்சிருக்கிங்க..
:-(
கதை நல்ல இருக்கு மச்சான்
என்ன கபிலனை லவ் பண்றேன் நீங்கதான் எல்ப் பண்ணனும்னு சொல்லப்போறா அதுக்கு எதுக்கு இம்புட்டு பில்டப்பு??? பில்டப்பு???
:))))
//டிஸ்கி:இதன் தொடர்ச்சியை எப்படி கொண்டு போவது என்பது இப்போதைக்கு எனக்கே தெரியாது, யாராவது ஹிண்ட் கொடுத்தால் அங்கிருந்து தொடருகிறேன்.
//
நேத்து உங்க அண்ணன் பேசும் போது கேட்டிருந்தா நல்லா குடுத்திருப்பாரே ஹிண்டு.. ;))
மலர்விழியதான் சின்ஸியரா லவ்பண்ணீங்கன்னு பார்த்தா...இரண்டாவதா நித்யா...மறுபடியும் கோயில்ல இன்னொரு பிகரை introduce பண்ணுவீங்கன்னு ஆவலா இருந்தேன்...மறுபடியும் பழய டிராக்குக்கே வந்திட்டீங்களே...
ரசனை மிகுந்த பதிவு....தொடரை தொடருங்கள்...
அந்த சமயத்தில் மலர்விழியை நேசித்தது ஒரு இனக்கவர்ச்சி நித்யாமேல் உள்ளது தான் காதல் என்பதாக எனக்குப் பட்டது.//
ஏன் படாது?
உங்களுக்கு ஒரு மலர்விழின்னா நமக்கு ஒரு தேன்மொழி, உங்களுக்கு ஒரு நித்யான்னா நமக்கு ஒரு சத்யா.. அடப்போருமய்யா.!
அப்புறம் ஒரு அழகான (ஆயிரம்தடவை படித்த) சிறுகதை எழுதிவிட்டு அதென்ன லேபிள் 'மொக்கை'னு? தன்னடக்கமா? அதுசரி.!
அப்புறம் என்ன கேட்டீங்க.. முடிவா? கடலைமுட்டாய் வாங்க குடுத்த 10 ரூவாய மருவாதியா கொடுத்துருன்னு கேட்டிருப்பான்னு நினைக்கிறேன். கூட சப்போர்ட்டுக்கு சொர்ணாக்கா மாதிரி மலர்விழியை அழைத்து வந்திருக்கலாம்.!
ம்ம்ம்ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்...
அண்ணா என்ன இப்படி நிறுத்திட்டீங்க?? :((
படிக்க ரொம்ப சுவாரஸ்யமா, வெகு அழகா இருந்தது.. :))
நன்றி அரவிந்த்(சுருக்கமா மெகா சீரியல் மாதிரி இருக்குன்றீங்க புரியுது).
நன்றி லோகு(நெசமாத் தானே சொல்றீங்க)
நன்றி கதிர்,(இன்று இரண்டாம் பாகம் போஸ்ட் செய்கிறேன் உங்க பின்னூட்டத்தை பெரிதாக எதிர் பார்க்கிறேன்).
நன்றி பட்டிக்காட்டான்,(வேற யாரும் சொல்றதுக்கு முன்னாடியே நாமே சொல்லிக்கிட்டா சேதாரம் கொஞ்சம் கம்மியா இருக்குமே அதான் அந்த லேபிள்).
நன்றி கார்த்தி,(ஆசர்யமான வருகைடா மாப்ள).
நன்றி மங்களூர் சிவா,(ஓவர் பில்டப்பா இருக்கோ?ஆனாலும் ரொம்ப தான் யோசிச்சிருக்கீங்க).
நன்றி சஞ்சய்(ஏ இ கொ வெ).
நன்றி பாலாஜி,(இது மன்மதலீலை இல்லை).
நன்றி ஆதி,(ஒன்னும் சொல்றதுக்கில்லை,ஆனாலும் அவரவர்களுக்கான அனுபவம் அவரவர்களுக்கானது தானே :) ).
நன்றி தமிழ்பறவை,(நல்லாயில்லையா நண்பரே).
நன்றி ஸ்ரீமதி,(இன்றே அடுத்த பகுதியும் வருகிறது படித்துவிட்டு சொல்லுங்க).
////மனசில கொஞ்சம் திக் திக் னு அட இந்த போண்ணாவது பாரிக்கு செட் ஆயிடுமான்னு ஆசையாப் படிச்சிட்டு வந்தா////
பாரியா? யார் அது?
கத நல்லாயிருக்கு. ஹிண்ட் எல்லாம் கேட்டு அழப்பிடாது. கண்ண தொடச்சுக்கோங்க.
கதை அற்புதம், தொடருங்கள்
வாழ்த்துக்கள்
அன்புடன்
ஆரூரன்
///சகலமும் அவளானதில் லீடரானவள்.///
நல்ல சொல்லாடல்.
///காதலிக்காக காத்திருப்பதை யாருங்க சுகமென்று சொன்னது, எனக்கு மரண அவஸ்தையாய் கரைந்தது அந்த நிமிடங்கள்.///
எங்களுக்குலாம் சொகமாத்தான் இருந்துது.
///ஆதிமூலகிருஷ்ணன்....///
ஹா ஹா ஹா
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா....
ஒரே சன்னில ரெண்டு மங்கை...
ம்ம்ம்.நடக்கட்டும் நாடகம்.
பொக்கிஷம்
நன்றி நாஞ்சில்நாதம்,(படிச்சிட்டு போட்ட பின்னூட்டம் மாதிரி தெரியலையே).
நன்றி ஆரூரன் விசுவநாதன்
நன்றி சிவா.
நன்றி துபாய் ராஜா
நன்றி சுரேஷ்(காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு).
அடடா ஒரே நேரத்துல ரெண்டு சனி மூலையா ?
நன்றி சூரியன்.(ஆமா தம்பி)
Post a Comment